முகப்பு /செய்தி /தமிழ்நாடு / இயேசு பிறப்பதற்கு முன்பே ஹெல்மெட் பயன்பாடு: எந்தெந்த நாடுகளில் ஹெல்மெட் கட்டாயம் - தெரிந்து கொள்வோம்

இயேசு பிறப்பதற்கு முன்பே ஹெல்மெட் பயன்பாடு: எந்தெந்த நாடுகளில் ஹெல்மெட் கட்டாயம் - தெரிந்து கொள்வோம்

ஹெல்மெட்

ஹெல்மெட்

இந்தியாவில் ஹெல்மெட் கட்டாயம் என்ற சட்டம் அமலில் இருந்துவருகிறது. தற்போது, சென்னையில் பின்னால் இருப்பவர்களும் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என்று காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

சென்னையில் இருசக்கர வாகனங்களில் பின் இருக்கையில் அமர்ந்து செல்பவர்களும், தலைக்கவசம் அணிவது கட்டாயம் என காவல்துறை அறிவித்துள்ளது. இந்நிலையில், இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு முன்பிலிருந்தே, பயன்பாட்டில் உள்ளதாக கூறப்படும் தலைக்கவசத்தின் வரலாற்றை தெரிந்துகொள்வோம்.

இன்றைய இருசக்கர வாகன ஓட்டிகளின் வாழ்வில் இரண்டறக் கலந்தது தலைக்கவசம். வெறும் அரை சட்டி வடிவில் கண்டு பிடிக்கப்பட்டு, தற்போது பல்வேறு தொழில்நுட்பங்களை கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. உயிர் காக்கும் தலைக்கவசங்களின் வரலாறு மிக நீண்டது. அந்த வகையில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பே போர்க்களங்களுக்கு சென்ற வீரர்கள், தலையில் காயங்கள் ஏற்படுவதை தவிர்க்க பயன்படுத்திய கவசமானது, 2007ம் ஆண்டு இஸ்ரேலில் கண்டறியப்பட்டது.

ஆரம்பத்தில் போக்குவரத்து பயன்பாட்டிற்கு மட்டுமே பயன்படுத்தப்பட்ட, மோட்டார் சைக்கிள்கள் நாளடைவில் அதிகளவில் பந்தயங்களில் ஈடுபடுத்தப்பட்டன. அதில் வீரர்கள் காயமடைவதை தவிர்க்க, 1914ம் ஆண்டு இங்கிலாந்தை சேர்ந்த எரிக் கார்ட்னர் என்பவர் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கான முதல் தலைக்கவசத்தை வடிவமைத்தார். தொடக்கத்தில் அதனை அணிவதை வாகன ஓட்டிகள் சிரமமாக கருதினாலும், நாளடைவில் பல்வேறு விதங்களில் மேம்படுத்தப்பட்டதும் பொதுமக்களிடையே தலைக்கவச பயன்பாடு அதிகரித்தது. தற்போது, முன் மற்றும் பின்பக்கமாக திறக்கக் கூடியது, நெடுந்தூர பயணிகளுக்கான கேமராவுடன் கூடியது என பல்வேறு வகையான அம்சங்கள் அடங்கிய தலைக்கவசம் பயன்பாட்டில் உள்ளன.

சாலை விபத்துகளின் போது ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்கும் நோக்கில், உலகிலேயே முதல் நாடாக இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம் கட்டாயம் என 1990ம் ஆண்டு ஆஸ்திரேலியா அரசு அறிவித்தது. அதைதொடர்ந்து, நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும், கட்டாய தலைக்கவசம் நடைமுறைக்கு வந்தது. விதிமுறைகளை மீறினால் அதிகபட்சம், 1.71 லட்ச ரூபாய் வரை அந்நாடுகளில் அபராதம் விதிக்கப்படுகிறது.

அமெரிக்காவில் பெரும்பாலான மாநிலங்களில், வயது வந்த நபர்கள் தலைக்கவசம் அணிவது கட்டாயமில்லை. தனி மனித சுதந்திரம் என்ற அடிப்படையில், எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டு மக்கள் இந்த உரிமையை பெற்றுள்ளனர். பின்லாந்து மற்றும் ISLE OF MAN போன்ற நாடுகளில், தலைக்கவசம் அணிவது அரசு தரப்பு கோரிக்கையாக மட்டுமே உள்ளது.

மதுரையில் ஆம்லேட், ஃபுல் மீல்ஸுடன் செயல்படும் அம்மா உணவகம்- ஹோட்டல் போல அதிக விலைக்கு செயல்படுவதாக புகார்

பல நாடுகளில் சிறார் மற்றும் பதின் பருவ நபர்களுக்கு மட்டுமே, தலைக்கவசம் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. போலாந்தில் 2002ம் ஆண்டு தலைக்கவசங்களுக்கான விதிமுறைகளை கொண்டு வர அரசு முயன்றது. ஆனால், இருசக்கர வாகன ஓட்டிகளின் கடும் எதிர்ப்பால் அந்த முயற்சியையே போலந்து அரசு கைவிட்டது. போர்ச்சுகல், ரஷ்யா போன்ற நாடுகளில் தலைக்கவசம் அணியத் தேவையில்லை. அதேநேரம், சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளில் முதலிடத்தில் உள்ள இந்தியாவில், மோட்டார் வாகன சட்டம் 1988-ன் படி தலைக்கவசம் அணிவது கட்டாயமாகும். தவறினால் இரண்டாயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படுகிறது. இந்தியாவில் நாளொன்றிற்கு ஏற்படும் விபத்துகளில், 25 சதவிகிதம் இருசக்கர வாகனங்கள் தொடர்பானவையே.

ஒவ்வொரு ஒரு மணி நேரத்திற்கு 6 இருசக்கர வாகன ஓட்டிகள் இந்தியாவில், விபத்தில் இறப்பதாக சில ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. மோசமான சாலைகள், உரிய பயிற்சி இன்றி வாகனம் ஓட்டுவது ஆகியவற்றுடன், தலைக்கவசம் அணியாததும், தரமான தலைக்கவசம் அணியாததும், சாலை விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

First published:

Tags: Helmet