Home /News /tamil-nadu /

தமிழர்கள் உலகம் முழுவதும் தலைநிமிர்ந்து வாழ வேண்டும் என்பதுதான் திமுக லட்சியம்: முதல்வர் ஸ்டாலின்

தமிழர்கள் உலகம் முழுவதும் தலைநிமிர்ந்து வாழ வேண்டும் என்பதுதான் திமுக லட்சியம்: முதல்வர் ஸ்டாலின்

கடல் கடந்து வாழ்ந்து வரும் நீங்கள் எல்லாரும் மொழியால் தமிழர்கள், இனத்தால் தமிழர்கள் என்ற உணர்வோடு ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

கடல் கடந்து வாழ்ந்து வரும் நீங்கள் எல்லாரும் மொழியால் தமிழர்கள், இனத்தால் தமிழர்கள் என்ற உணர்வோடு ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

கடல் கடந்து வாழ்ந்து வரும் நீங்கள் எல்லாரும் மொழியால் தமிழர்கள், இனத்தால் தமிழர்கள் என்ற உணர்வோடு ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    தமிழர்கள், தமிழ்நாட்டில் மட்டுமல்ல - உலகம் முழுவதும் தலைநிமிர்ந்து வாழ வேண்டும் என்பதுதான் திமுக லட்சியம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் விதமாக, 4 நாட்கள் பயணமாக துபாய் சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்றைய தினம் அங்கு துபாய் வாழ் தமிழர்களிடையே உரையாற்றியதாவது, அனைவரையும் தாங்குவதற்கு ஒரு தாயின் வயிறு தாங்காது என்பதால் தனித்தனித் தாய் வயிற்றில் பிறந்த உடன்பிறப்புகள் நாம் என்று இந்த உலக தமிழ்ச் சமுதாயத்தின் அண்ணனான பேரறிஞர் அண்ணா அவர்கள் குறிப்பிடுவார்கள்.

    அந்த வகையில் தனித்தனித் தாய் வயிற்றில் பிறந்த உடன்பிறப்புகளான உங்கள் அனைவரையும் கடல் கடந்து வந்து சந்திப்பதில் பெருமை அடைகிறேன். மகிழ்ச்சி அடைகிறேன். பூரிப்படைகிறேன்.

    உங்களை எல்லாம் பார்க்கும்போது நான் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இல்ல. தமிழர்கள் கல்வியில், வேலைவாய்ப்பில், தொழிலில், அறிவில், ஆற்றலில் மேன்மை அடைந்த மக்களாக மாறவேண்டும் என்றுதான் தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களும் விரும்பினார்கள்; பாடுபட்டார்கள்; உழைத்தார்கள். அவர்களின் அந்த ஆசை நிறைவேறியதன் அடையாளம்தான் நீங்கள் எல்லாரும்.

    உங்களது கல்விக்கு, உழைப்புக்கும் திறமைக்கு ஏற்ற வேலைகளைப் பெற்று இங்க வாழ்ந்துகொண்டு இருக்கிறீர்கள். பலரும் பல்வேறு தொழில் நிறுவனங்களைத் தொடங்கி நடத்தி வருகிறீர்கள். நூற்றுக்கணக்கானவர்களுக்கு வேலைகளை வழங்கி வருகிறீர்கள். இதைப் பார்க்கும்போதுதான் பெருமையாக இருக்கிறது என்று நான் சொன்னேன். தமிழர்கள், தமிழ்நாட்டில் மட்டுமல்ல - உலகம் முழுவதும் தலைநிமிர்ந்து வாழ வேண்டும் என்பதுதான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் இலட்சியம்.



    1966-ஆம் ஆண்டு சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, கம்போடியா, ஹாங்காங், ஜப்பான் ஆகிய நாடுகளுக்குப் பேரறிஞர் அண்ணா அவர்கள் சுற்றுப்பயணம் செய்தார். அப்போ சிங்கப்பூர் சாலான் பஜார் மைதானத்தில் நடந்த வரவேற்புக் கூட்டத்தில் கலந்து கொண்டார். சுமார் ரெண்டு லட்சம் பேர் பங்கேற்ற மாபெரும் கூட்டம் அது. அந்தக் கூட்டத்துக்குத் தலைமை தாங்கிப் பேசிய சிங்கப்பூர் பிரதமர் லீ குவான் யூ அவர்கள், "மலேசியாவில் பண்டிதர் நேருவுக்குக் குவிந்த கூட்டத்துக்குப் பிறகு இவ்வளவு பெரிய கூட்டத்த இப்போதுதான் பார்க்கிறேன்" என்று சொன்னார்.

    ஆங்கிலத்திலும், பிறகு தமிழிலும் பேரறிஞர் அண்ணா அவர்கள் பேசினார். "மலாக்கா, சீன மொழிகளைப் போலவே தமிழுக்கும் தமிழ் மக்களுக்கும் இந்த இரு நாடுகளிலும் உரிய மரியாதை தரப்படுவது வரவேற்கக் கூடியது. சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் வாழும் தமிழர்கள் அனைவரும் தாங்கள் வாழும் நாட்டின் குடிமக்களாகவே நாட்டுப்பற்றுடன் வாழ வேண்டும்" என்று பேசினார்.

    பேரறிஞர் அண்ணா அவர்கள் அன்று சொன்னதையே இன்று நானும் சொல்றேன். இந்த நாட்டின் குடிமக்களாக நாட்டுப்பற்றுடன் வாழுங்கள். அதே நேரத்தில் நாம் தமிழினத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை மறந்துவிடாமல் வாழுங்கள் என்று நான் கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் வாழும் நாட்டை முன்னேற்றுங்கள்.

    இந்த நாட்டின் வளத்தையும், அறிவையும், தொழில்நுட்பத்தையும் தமிழ்நாட்டுக்கும் அறிமுகம் செய்யுங்கள் என்று உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். கடல் கடந்து வாழ்ந்து வரும் நீங்கள் எல்லாரும் மொழியால் தமிழர்கள், இனத்தால் தமிழர்கள் என்ற உணர்வோடு ஒற்றுமையாக இருக்க வேண்டும். ஒற்றுமையாக வாழ வேண்டும். சாதியோ, மதமோ உங்களைப் பிளவுபடுத்தக் கூடாது. இத்தகைய பிளவுபடுத்தும் சக்திகளை உங்களுக்குள் நுழைய அனுமதிக்காதீர்கள். எது நம்மை ஒற்றுமைப்படுத்துகிறதோ அதற்கு முக்கியத்துவம் கொடுங்கள். எது நம்மை பிளவுபடுத்துகிறதோ அவை அனைத்தையும் உதறித் தள்ளுங்கள். ஏற்றத் தாழ்வுகள் இல்லாத சமூகம்தான், அனைத்திலும் வளர்ச்சியைப் பெறும் என்பதை மனதில் வையுங்கள்.



    அதனால்தான் அனைவருக்குமான வளர்ச்சி, அனைத்துக்குமான வளர்ச்சி என்கிற இலக்கை முன்வைத்து தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. இன்று தமிழ்நாட்டில் மிகச் சிறந்த சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. வெளிநாட்டுக்கு வந்து, வாழும் நாட்டின் அரசியலைப் பேசக் கூடாது என்று எனக்குத் தெரியும். அதனால், அரசியல் இல்லாமல், எங்கள் அரசின் இலக்குகளை மட்டும் நான் இங்கு தெரிவிக்க விரும்புகிறேன். எதிர்காலத்தில் வளமான தமிழகத்தை உருவாக்கும் அரசு அமைந்திருக்கிறது. இத்தகைய திராவிட முன்னேற்றக் கழக அரசை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

    உள்ளூர் தமிழர்களை எப்படி ஆதரித்து அரவணைக்கிறோமோ - அதைப் போலவே உலகத் தமிழர்களையும் ஆதரித்து அரவணைக்கும் அரசாக நாங்கள் செயல்பட்டு வருகிறோம். அயலகத் தமிழர்களை, தமிழ்நாட்டு அரசு ஒரு தாயின் பரிவோடு கவனிக்கத் தொடங்கியிருக்கிறது. ஜனவரி 12-ஆம் தேதி அன்று அயலகத் தமிழர் நாள் விழாவை நாங்க நடத்தினோம். அதனுடைய இலக்காக, 'தமிழால் இணைவோம்' என்று பொறித்து வைத்திருந்தோம்.

    சிதம்பரம் நடராஜர் கோயிலில் தேவாரம் பாட வழிசெய்யாதது ஆரிய அடிவருடித்தனம்- தமிழக அரசுக்கு சீமான் கடும் கண்டனம்

    தமிழுக்கு மட்டும்தான் இணைக்கும் ஆற்றல் உண்டு. தமிழால் நாம் இணைந்தால், நம்மை யாராலும் மதம், சாதியால், பிரிக்க முடியாது என்று அந்த விழாவில் பேசியபோது நான் குறிப்பிட்டுச் சொன்னேன் - ''நம்மை நாடுகள் பிரிக்கிறது. நிலங்கள் பிரிக்கிறது. ஆனாலும் மொழி இணைக்கிறது. அந்த வல்லமை தமிழ் மொழிக்கு உண்டு" என்று குறிப்பிட்டேன். அத்தகைய மொழிக்கு நாம் சொந்தக்காரர்கள். இதைவிட நமக்கு என்ன பெருமை வேண்டும்?

    'வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்" என்பதைத்தமிழ் மண்ணில் விதைத்து - மொழிப்பற்றும் - இனமான உணர்வும் ஊட்டிய இயக்கம்தான் திராவிட இயக்கம்.

    நம்முடைய இனம் ஒரு நிலத்தில் - ஒரு நாட்டில் மட்டுமே வாழ்ந்த இனம் இல்ல.உலகளாவிய இனம் என்று ஒன்று உண்டென்றால் அது தமிழினம்தான். 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் அதிக எண்ணிக்கையிலும், 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் குறைந்த எண்ணிக்கையிலும் தமிழர்கள் வாழ்கிறார்கள்.

    கல்வி, வணிகம், வர்த்தகம் ஆகிய பொருளாதாரக் காரணங்களுக்காக தமிழர்கள் அயல்நாடுகளுக்கு சென்றும் வருகிறார்கள், குடியேறியும் வருகிறார்கள். இது காலம் காலமாகத் தொடர்கிறது. இவர்களுக்கான எல்லா உதவிகளையும் இந்தத் துறை மூலமா செய்து வருகிறோம்.

    கடந்த பத்து மாத காலத்தில் தமிழகம் அதிக முதலீடுகளை ஈர்த்திருக்கிறது. அனைத்து வகையிலும் தொழில் நிறுவனங்களை நடத்த சிறந்த மாநிலம் என்று தமிழ்நாடு பெயர் பெற்றிருக்கிறது. இந்தியாவின் நம்பர் ஒன் முதலமைச்சர் என்று என்னை முன்னணி ஊடகங்களில் செய்தி வெளியிட்டார்கள். நான் நம்பர் ஒன் என்பதை விட தமிழ்நாடு நம்பர் ஒன் ஆகணும்னு நான் உழைத்துக் கொண்டு இருக்கிறேன். அதற்குக் கடல் கடந்து வாழக் கூடிய தமிழர்கள் உதவி செய்ய வேண்டும்.

    தமிழ்நாடு தொழில் வளர்ச்சியில் வளர்கிறது என்றால் அந்த வளர்ச்சியில் உங்களுக்கும் பங்கு இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். தமிழ்நாட்டில் திமுக அரசு அமைந்திருக்கிறது என்றால் - ‘அது ஒரு கட்சியின் அரசு அல்ல, ஒரு இனத்தின் அரசு’ என்று சொன்னேன். எனவே, திமுக அரசு பேரும் புகழும் பெற்றால் - அதில் ஒவ்வொரு தமிழர்களுக்கும் பங்கு இருக்கும் என்று சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன். நீங்களும் அதில் ஒருவராக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

    கல்வியிலும் வேலை வாய்ப்பிலும், தொழில் வளர்ச்சியிலும் முன்னேற்றம் காணுங்கள். எவ்வளவு உயரமாக மரம் வளர்ந்தாலும் அது தன்னுடைய வேரை விட்டுவிடுவதில்லை. அதைப் போல தமிழை - தமிழ்நாட்டை விட்டு விடாதீர்கள். தமிழால் இணைவோம். தமிழராய் இணைவோம். தமிழை வளர்ப்போம். தமிழரை வளர்ப்போம். இவ்வாறு அவர் உரையாற்றினார்.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Dubai, MK Stalin

    அடுத்த செய்தி