தம்மை மூன்றாம் கலைஞர் என தொண்டர்கள் அழைப்பதில் துளிகூட விருப்பம் இல்லை என்றும், சின்னவர் என்றே அழைக்க வேண்டும் எனவும், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். புதுக்கோட்டையில் நடைபெற்ற முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற அவர் இதனை கூறினார்.
புதுக்கோட்டை ஆலங்குடி சாலையில் உள்ள தடிகொண்ட அய்யனார் திடலில் புதுக்கோட்டை வடக்கு தெற்கு மாவட்ட திமுக சார்பில் தமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 99வது பிறந்த நாள் விழா, திமுகவின் மறைந்த முன்னாள் பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு விழா, தொண்டர்களை போற்றுவோம் பொற்கிழி வழங்கும் விழாவில் திமுக இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று திமுகவின் முன்னோடி தொண்டர்கள் 1051 பேருக்கு தல பத்தாயிரம் விதம் ரூபாய் ஒரு கோடியே 5 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பொற்கிழி வழங்கினார்.
பின்னர் நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “கோவிட் தடுப்பூசி அனைவரும் போட்டுக்கொண்டீர்களா என கேள்வி எழுப்பி பேச்சை தொடங்கிய உதயநிதி, பேசுவதை விட செயல்படதான் எனக்கு பிடிக்கும், எந்த மாவட்டத்திற்கு எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் கட்சிக்காக உழைத்த தொண்டர்களுக்கு உதவி செய்யும் நிகழ்ச்சிக்கு அந்த அந்த மாவட்டசெயலாளர்களிடம் கூறி ஏற்பாடு செய்யச் சொல்லி அந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்வேன்.
கடந்த 3 தேர்தல்களில் மிகப்பெரிய வெற்றியை மக்கள் கொடுத்துள்ளார்கள் இதற்கு திமுகவின் அடிமட்ட தொண்டர்கள்தான் காரணம். நான் பெரியாரையோ அண்ணாவையோ நேரில் பார்த்ததில்லை கலைஞர் கருணாநிதியை பார்த்து வளர்ந்து உள்ளேன், தற்பொழுது திமுகவின் தொண்டர்களை பெரியார் அண்ணா கலைஞர் இவர்களின்மறுஉருவமாக பார்க்கிறேன்.
Also Read: பரபரப்பான சூழலில் சென்னையில் இன்று அதிமுக தலைமைக்கழக நிர்வாகிகள் கூட்டம்
என் மீது கொண்ட அன்பால் திமுகவினர் என்னை மூன்றாம் கலைஞர் இளம் தலைவர் என்றெல்லாம் அழைக்கின்றனர். அவர்களுக்கு எனது வேண்டுகோள், வேண்டுகோள் மட்டுமல்ல உரிமையாகவே கூறுகிறேன் மூன்றாவது கலைஞர் இளம் தலைவர் என்று அழைப்பதில் எனக்கு துளிகூட உடன்பாடு இல்லை, கலைஞர் என்றால் அது கலைஞர் மட்டும் தான், அதனால் என்னை அப்படி அழைக்க வேண்டாம், சிலர் சின்னவர் என்று அழைக்கிறார்கள். அப்படி அழைப்பது தனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏனென்றால் என்னை விட அனுபவம் வாய்ந்த பெரியவர்கள் பலர் உள்ளதால் நான் சின்னவர் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
தற்போது விழா நடைபெறும் இடத்திற்கு வந்தவர்கள் எல்லாம் பெரிய பெரிய பதவிக்கு சென்றுள்ளார்கள் அந்த அளவுக்கு ராசி உள்ளது என்று மேடையில் பேசியவர்கள் கூறினார்கள் ஆனால் எனக்கு ராசியில் நம்பிக்கை இல்லை உழைப்பிலும் உங்கள் அன்பிலும் தான் நம்பிக்கை உள்ளது.மாவட்டம் தோறும் திராவிட மாடல் பயிற்சி பட்டறை நடத்தி வருகிறோம் இதை ஒரு தினசரி நாளிதழில் விமர்சனம் செய்துள்ளது, அதை என்னிடம் சிலர் கூறினார்கள் அதற்கு நான் அந்த நாளிதழில் விமர்சனம் செய்தால் சரியான பாதையில் தான் சென்று கொண்டுள்ளோம் என்று சொன்னேன்.
திமுக தொண்டர்களுக்கு நிதி உதவி நிகழ்ச்சி நான்கு மாதத்திற்கு ஒரு முறை நடத்துவோம் அதற்கு நான் வர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர் இது போன்ற நிகழ்ச்சி நடத்தினால் மாதம் மாதம் கூட நான் மகிழ்ச்சியுடன் வருகிறேன். திமுக இளைஞரணிக்கு நிதியாக 3 ஆண்டுகளில் 10 கோடி சேர்ந்துள்ளது அதை வங்கியில் டெபாசிட் செய்துள்ளோம். அதில் வரும் வட்டியை திமுக தொண்டர்களின் மருத்துவம், கவ்வி உள்ளிட்ட தேவைக்கு வழங்குவோம் என்று தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.