அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா... ஆண்டிபட்டி தொகுதி சுவாரஸ்யம்

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா... ஆண்டிபட்டி தொகுதி சுவாரஸ்யம்

மகாராஜன் | லோகிராஜன்

ஆண்டிபட்டி சட்டமன்ற தொகுதியில் இரண்டாவது முறையாக அண்ணன் திமுக சார்பாகவும், தம்பி அதிமுக சார்பாகவும் இரண்டாவது முறையாக களம் காண்கின்றனர்.

  • Share this:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதியானது தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் எப்போதும் விஐபி தொகுதியாக பார்க்கப்படுகிறது. பொதுத்தேர்தலோ, இடைத்தேர்தலோ எப்போது தேர்தல் அறிவிக்கப்பட்டாலும் ஆண்டிபட்டி தொகுதி முக்கியத்துவம் பெற்ற தொகுதியாக மாறிவிடும்.

1984-ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் அமெரிக்காவில் சிகிச்சையில் இருந்தவாறே ஆண்டிபட்டி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் மறைந்த முன்னாள் முதல்வர் எம்‌.ஜி.ஆர். சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று முதல்வர் பதவியை இழந்த ஜெயலலிதா கடந்த 2002-ம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் ஆண்டிபட்டி தொகுதியில் போட்டியிட்டு தான் மூன்றாவது முறையாக முதல்வரானார். இவ்வாறு தமிழக அரசியலில் தேர்தல் களத்தில் உற்று நோக்கும் தொகுதியாக கருதப்படும் ஆண்டிபட்டி தொகுதி கடந்த 2019-ம் ஆண்டு மீண்டும் பரபரப்பானது.

இந்த பரபரப்பிற்கு காரணம் திமுக, அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் இருவரும் ஒரு தாய் வழி வந்த சகோதரர்கள். திமுக சார்பில் அண்ணன் மகாராஜனும், அதிமுக சார்பாக தம்பி லோகிராஜனும் போட்டியிட்டனர். இதில் மூத்தவர் மகாராஜன் 12,323 வாக்குகள் வித்தியாசத்தில் தனது தம்பி லோகிராஜனை தோற்கடித்தார்.‌ இதன் மூலம் அதிமுகவின் கோட்டையாக சொல்லப்பட்ட ஆண்டிபட்டி 20 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக வசமானது.

இந்நிலையில் தற்போது நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலிலும் ‘ராஜன்’ சகோதரர்களான மகாராஜன், லோகிராஜன் ஆண்டிபட்டி தொகுதியில் மீண்டும் நேருக்கு நேர் மோதுவதால் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது.அதிமுக வேட்பாளர் விபரம்:

பெயர் : ஆ.லோகிராஜன்

தந்தை : ஆங்கத்தேவர்

வயது. 62

தொழில் : அரசு ஒப்பந்ததாரர், டிரான்ஸ்போர்ட் மற்றும் பெட்ரோல் பங்க் உரிமையாளர்.

குடும்பம் : கயல்விழி (மனைவி), டிஷோர்பவன் (மகன்), ஹரீஷ்மா (மகள்)

அரசியல் அனுபவம்:

1986ஆம் ஆண்டு முதல் அதிமுக உறுப்பினர்.

1987-ல் முத்தனம் பட்டி கிளை செயலாளர்.

2002-2007 வரை ஆண்டிபட்டி ஒன்றிய அதிமுக செயலாளர்.

2001-2006 வரை ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர்.

2018 - 2019 ஆண்டிபட்டி ஒன்றிய அதிமுக செயலாளர்.

2020 முதல் தற்போது வரை ஆண்டிபட்டி மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர்.

2020 முதல் தற்போது வரை ஆண்டிபட்டி ஒன்றியப் பெருந்தலைவர்.திமுக வேட்பாளர் : ஆ.மகாராஜன்.

தந்தை பெயர் : ஆங்கத்தேவர்

வயது : 67

பிறந்த தேதி : 01.02.1954

கல்வி தகுதி : எட்டாம் வகுப்பு

தொழில் : விவசாயம்

குடும்பம் : சந்திரா (மனைவி), சேதுராஜா (மகன்), சாதனா( மகள்)

தற்போதைய பதவி : ஆண்டிபட்டி ஒன்றிய தி.மு.கழக பொறுப்பாளர்.

அரசியல் அனுபவம்

1973ஆம் ஆண்டு முதல் திமுக உறுப்பினர்

1974 முதல் முத்தனம்பட்டி கிளை செயலாளர்.

1996 ஆம் ஆண்டு முதல் 2001ஆம் ஆண்டு வரை ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர்.

2019 - 2021 ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர்.

சகோதரர்கள் ஒரே தொகுதியில் போட்டியிடுவது குறித்து அதிமுக வேட்பாளர் லோகிராஜனிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது, “சிறிய கவனக்குறைவால் கடந்த முறை தவறவிட்ட வெற்றியை இந்த முறை எப்படியும் பிடித்து விட வேண்டும் என்ற முனைப்புடன் களப்பணி ஆற்றி வருகிறோம். தமிழகத்தில் அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆண்டிபட்டி தொகுதி அதிமுகவின் கோட்டை என்பதை மீண்டும் நிரூபிப்போம் என்றார்.

ஆனால் எதிர்தரப்பில் உங்கள் சகோதரர் போட்டியிடுகிறாரே என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், கேட்டதற்கு, சகோதரர் என்பதெல்லாம் வீட்டில் மட்டுமே.‌ நாங்கள் (அதிமுக) எதிரியாக கருதுவது திமுகவை. திமுக சார்பில் யார் போட்டியிட்டாலும் அவரை எதிர்ப்பதே முக்கியமாகும். அண்ணன், தம்பி என்பதெல்லாம் திருமணம் முடியும் வரையில் மட்டுமே.

திருமணம் முடிந்து விட்டால் அவரவர் வீடு, குடும்பம், கொண்ட கொள்கை என்று தான் பார்க்க வேண்டும்.‌ எனக்கு முதலில் கட்சி, கொள்கை தான் முக்கியம். சகோதரர் என்றால் கடந்த முறை அண்ணன் வெற்றி பெற்றதால் இந்த முறை ‌தம்பியான எனக்கு விட்டுக் கொடுக்கலாம் அல்லவா!, முதலில் எனது பெயர் தான் அறிவிக்கப்பட்டது. ஆனால் எப்படியும் சீட் வாங்கி விட வேண்டும் என்பதற்காக ஒரு மாதமாக சென்னையில் முகாமிட்டு தனக்கு சீட் வாங்கி வந்துள்ளார் மகாராஜன் என்றார் கொதிப்புடன்.

இது குறித்து திமுக வேட்பாளர் மகாராஜனிடம் கேட்ட போது தற்சமயம் பிஸியாக இருப்பதால் பிறகு பேசுமாறு கூறிவிட்டு இணைப்பை துண்டித்தார்.

செய்தியாளர் : பழனிக்குமார்

தேனி
Published by:Sheik Hanifah
First published: