சனாதன தர்மம் குறித்த ஆளுநர் ஆர்.என்.ரவியின் கருத்துக்கு
திமுக, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்தியாவை வழிநடத்துவது இந்திய அரசியலமைப்பு சட்டம் தானே தவிர, சனாதன தர்மம் அல்ல என்று திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.
சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற விழா ஒன்றில் கலந்துகொண்டு பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆன்மிகத்திலும் இந்தியா வளர்ச்சி அடைய வேண்டும் என்றும், ரிஷிகளாலும் முனிவர்களாலும் சனாதன தர்மத்தின் ஒளியினாலும் இந்த நாடு உருவாக்கப்பட்டது எனவும் இந்தியாவை வழிநடத்துவது சனாதன தர்மம் எனவும் பேசி இருந்தார்.
ஆளுநரின் இந்த கருத்துக்கு திமுக கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் நாடாளுமன்றக்குழு தலைவர் டி.ஆர்.பாலு வெளியிட்டுள்ள அறிக்கையில், சனாதன தர்மத்தை நிலைநாட்டும் வன்முறைப் பாதையை நியாயப்படுத்தும் வகையில் ஆளுநர் பேசியிருப்பதாக விமர்சித்துள்ளார். சோமநாதர் கோயில் சொத்துகளை அழித்து உருவாக்கப்பட்ட கந்தகார், பெஷாவர் நகரங்கள், அமெரிக்காவின் குண்டுகளால் தகர்க்கப்பட்டதாக ஆளுநர் பேசியிருப்பது அவரது பதவிக்கு அழகல்ல என்றும் தெரிவித்துள்ளார்.
மதச்சார்பின்மைக்கு எதிராக ஆளுநர் தொடர்ந்து பேசிவருவதாக குறிப்பிட்டுள்ள டி.ஆர்.பாலு, இந்தியாவை வழிநடத்துவது இந்திய அரசியலமைப்புச் சட்டம்தானே தவிர, சனாதன தர்மம் அல்ல என்றும் சாடியுள்ளார். ஆளுநரின் உரை என்பது, அரசியலமைப்புச் சட்டத்தின் முகவுரையைக் கிழித்தெறிவதாக அமைந்துள்ளதாகவும், சமுதாய சீர்குலைப்பு சக்திகளுக்கு வழிகாட்டுவதாக அமைந்திருப்பதாகவும் டி.ஆர்.பாலு கவலை தெரிவித்துள்ளார். ஆளுநர் தனது கருத்தை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்றும் டி.ஆர்.பாலு வலியுறுத்தியுள்ளார்.
இதை படிக்க: மீண்டும் ஒரு லாக்அப் மரணம்: சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் - எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி காட்டம்
இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், ஆர்.என்.ரவி ஒரு ஆர்.எஸ்.எஸ்.PRODUCT என்றார். ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சு தேசத்திற்கும், அவர் வகிக்கும் பொறுப்புக்கும் நல்லதல்ல என்றும் திருமாவளவன் சாடியுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.