திமுக அரசுக்கும்- ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே அண்மைக் காலமாக மோதல் போக்கு நிலவி வருகிறது. நீட் மசோதா, இரு மொழிக் கொள்கை விஷயத்தில் ஆளுநர் ஆர்.என். ரவியின் கருத்து, திமுக அரசை மேலும் கோபப்படுத்தியுள்ளது. இதற்கு திமுக, தன்னுடைய அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி கட்டுரையில் காட்டமான விமர்சனத்தை முன்வைத்துள்ளது. அதில் ஆளுநர் தன்னுடைய அதிகார எல்லையை மீறி செயல்படுகிறாரா என்று விமர்சித்துள்ளது.
மேலும் தமிழ்நாடு, நாகலாந்து அல்ல என்றும், தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் பழுத்த பழங்களை ஆளுநராக கண்ட மாநிலம் என்றும் கூறியுள்ளது. இரு மொழிக் கொள்கை, நீட் விவகாரத்தில் தமிழக அரசியல் கட்சிகள் ஒன்று பட்டு நிற்பதை சுட்டிக்காட்டியுள்ள திமுக, பெரியண்ணன் மனப்பான்மையை சுட்டிக்காட்ட "கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா” என்று பழமொழி ஒன்றையும் மேற்கோள் காட்டியுள்ளது. அதற்கான விளக்கத்தை பார்க்கலாம்.
கொங்கணர் பதினெண் சித்தர்களுள் ஒருவர். ஏராளமான நூல்களை எழுதியுள்ள இவர், திருப்பதியில் ஜீவ சமாதியடைந்தார் என்றும் கூறப்படுகிறது. மேலும் இவர் போகரின் சீடர் என்றும் நம்பப்படுகிறது. காடுகளில் தவம் மேற்கொள்வதை விரும்பும் கொங்கணர், ஆழ்ந்த தவத்தில் இருக்கையில் மரக்கிளையில் அமர்ந்திருந்த கொக்கு ஒன்று அவர் மீது எச்சமிட்டது. கொங்கணரின் தவமும் கலைந்தது. தன்னுடைய தவத்தை கலைத்த கொக்கை சினம் கொண்டு பார்த்த கொங்கணரின் கோபத்தீயில் அந்த நொடியே கொக்கு எரிந்து சாம்பலானது. சாம்பலாய் கிடந்த அந்த கொக்கை கர்வத்துடன் பார்த்த கொங்கணர், அங்கிருந்து அதே மமதையுடன் புறப்பட்டார்.
மிக நீண்ட தவத்தில் இருந்ததால் பசி கொங்கணரை வாட்டியது. கொக்கை எரித்த கர்வத்துடனும், பசியுடனும் யாசகம் கேட்டுச் சென்று நின்ற இடம் திருவள்ளுவர் வீடு.
கொங்கணர் யாசகம் கேட்டு வீட்டு வாசலில் இருந்து அழைத்தாலும், கணவருக்கு பணிவிடை செய்துக்கொண்டிருந்ததால் சற்று தாமதமாகவே வாசுகி அவருக்குப் பிச்சை இடும்படி ஆனது.
இதனால் ஆத்திரமடைந்த கொங்கணர், "உனக்கு என்ன ஒரு அலட்சியம்” என்று வாசுகியை எரிப்பது போல பார்த்தார். ஆனால், வாசுகிக்கு எதுவும் ஆகவில்லை.
மாறாக, தன்னை எரிக்கும் நோக்கத்தில் பார்க்கும் கொங்கணரை பார்த்து மெல்லிய புன்னகையுடன், ”என்னை கொக்கென்று நினைத்தாயா கொங்கணவா?’ என்று வாசுகி அம்மையார் திரும்பிக்கேட்க சற்றே அதிர்ந்து போனார் கொங்கணர். எங்கோ நடந்த நிகழ்வு இந்த அம்மையாருக்கு எப்படி தெரியும் என்ற கேள்வியுடன் வாசுகியை எதிர்கொள்ள முடியாமல் தலை கவிழ்ந்து நின்றார்.
சினம் தனிந்த கொங்கணர் ஒரு உண்மையை உணர்ந்தார். அவரவர் தர்மப்படி கடமையைத் தவறாமல் செய்வது, தன்னடக்கத்துடன் இருப்பது ஆகியவைகள் மனிதனை எந்த சக்தியும் ஒன்று செய்ய முடியாது என்பதை உணர்ந்து கொண்டார். இதுவே இன்றைய முரசொலியில் ஆளுநருக்கு திமுக கூறியுள்ள பழமொழியின் கதை.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.