தி.மு.க பொருளாளர் டி.ஆர்.பாலுவிற்கு கொரோனா தொற்று உறுதி

டி.ஆர்.பாலு.

திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

  • Share this:
    இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வருகிறது. இந்திய அளவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இதுவரையில் இல்லாத அளவுக்கு 1.86 லட்சமாக அதிகரித்துள்ளது. தமிழகத்திலும் ஒரு நாளின் கொரோனா பாதிப்பு 8,000-த்தை நெருங்கியுள்ளது. இந்திய அளவில் மகாராஷ்டிரா, கர்நாடகா, ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    பிரபலங்கள் பலருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. கொரோனா முதல் அலையில் பாதிக்கப்படாத பலரும் தொடர்ந்து இரண்டாவது அலையில் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். சமீபத்தில் சச்சின் டெண்டுல்கர், அமீர் கான், ஆலியா பட், ரன்வீர் கபூர் உள்ளிட்ட இந்தி திரைப்பிரபலங்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். கடந்த மார்ச் மாத ஆரம்பத்தில் மிகக் குறைவாக இருந்த கொரோனா தொற்று எண்ணிக்கை தற்போது வேகமாக உயர்ந்து வருகிறது.

    இதனிடையே, கடந்த மாதம் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அரசியல் தலைவர்களுக்கு தற்போது கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. அந்தவகையில், திமுக மகளிரணி செயலாளரும் எம்பியுமான கனிமொழி, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பா.ஜ.க வேட்பாளர் அண்ணாமலை உள்ளிட்ட பல முக்கிய அரசியல் பிரபலங்களுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்நிலையில், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவிற்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனை டி.ஆர்.பாலுவின் மகனும், திமுக எம்எல்ஏவுமான டி.ஆர்.பி.ராஜா அதிகாரப்பூர்வமாக ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.


    இதுகுறித்து அவரது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது, “எனது தந்தையார் டி.ஆர்.பாலுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது. கடந்த ஒரு வாரமாக அவரைச் சந்தித்தவர்கள் தயவுகூர்ந்து கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Esakki Raja
    First published: