அ.தி.மு.க-வினர் கொலை மிரட்டல் விடுவதாக தி.மு.க வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி புகார்

அ.தி.மு.க-வினர்  கொலை மிரட்டல் விடுவதாக தி.மு.க வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி புகார்

கார்த்திகேய சிவசேனாபதி

தொண்டாமுத்தூர் தி.மு.க வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி சென்ற காரின் மீது அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க-வினர் தாக்குதல் நடத்தினர். இந்தக்காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

  • Share this:
கோவை தொண்டாமுத்தூர் தொகுதிக்குட்பட்ட செல்வபுரம் பகுதியில் சிவாலயா தியேட்டருக்கு அருகில் அமைந்திருக்கும் வாக்குச்சாவடியை  தி.மு.க வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி, பார்வையிட்டார். வாக்குச்சாவடியில் திரண்டிருந்த பா.ஜ.க மற்றும் அ.தி.மு.க தொண்டர்கள் கார்த்திகேய சிவசேனாபதிக்கு மிரட்டல்விடுத்ததாக கூறப்படுகிறது.  இதன் காரணமாக வாக்குச்சாவடியில் இருந்து வெளியே வரமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. வாக்குச்சாவடி மையத்தின் கதவுகள் அடைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் ஸ்டாலின் சம்பவ இடத்துக்கு சென்று கார்த்திகேய சிவசேனாபதியை வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியே அழைத்து வந்துள்ளார். இதன்காரணமாக அந்தப்பகுதியில் ஒரு பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

வாக்குச்சாவடியில் பதற்றமான சூழல் நிலவியதால் காவல்துறையினர் தி.மு.க வேட்பாளர் சிவசேனாபதியை காரில் ஏற்றி அனுப்ப முற்பட்டனர். அப்போது அவரது காரை மறித்த அ.தி.மு.க மற்றும் பா.ஜ.கவினர் அவரது காரை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அங்கு கூடியிருந்த அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க-வினரை காவல்துறையினர் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அவரது வாகனம் அந்த வளாகத்தில் இருந்து வெளியேறியது. சிவசேனாபதி சென்ற காரின் மீது அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க-வினர் தாக்குதல் நடத்தினர். இந்தக்காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

இதுகுறித்து பேசிய தி.மு.க வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி, “ ஒவ்வொரு பூத்தாக காலையில் இருந்து சென்று பார்த்துவந்தோம். வாக்குச்சாவடியில் உள்ள எங்கள் முகவர்களுக்கு தேவையான வசதிகள் செய்துக்கொடுக்கப்பட்டதா என்பது குறித்து விசாரித்து வந்துகொண்டிருந்தோம். 46 பூத்களை முடித்து 47-வதாக செல்வபுரம் பகுதியில் சிவாலயா தியேட்டர் அருகில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்தோம். அங்கிருந்து வெளியே வந்தபோது எஸ்.பி.வேலுமணி ஆட்கள் எங்களை வழிமறித்தனர்.

வடவள்ளி சந்திரசேகர், அவருடைய அண்ணன் அன்பு, ஐடிபிஐ சம்பத், வீரமணி எங்களுக்கு அடையாளம் தெரிந்த பெயர் தெரியாத சிலர் எல்லாம் ரவுடித்தனம் செய்பவர்கள். அவர்களுடன் ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க ஆட்கள் கூட இருந்தனர். எங்க அண்ணன எதிர்த்து நிற்கிறாயா.. இரண்டு பேர் தனிப்பட்ட முறையில் என்னிடம் சொன்னார்கள். அந்த வீடியோ என்னுடைய முகநூலில் இருக்கிறது. காவல் ஆய்வாளர், காவல் துணை ஆய்வாளர் மற்றும் 50 போலீஸ்காரர்கள் சுற்றி இருக்கிறார்கள்.

 



எங்க அண்ணன் எஸ்.பி.வேலுமணியை எதிர்த்து நிக்கிறியா. உன் கழுத்த அறுத்துடுவேன்னு சொல்றாங்க, இதுக்கெல்லாம் பயந்தவங்க நாங்க இல்ல. அதை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். இந்த மாதிரி ரகளை செய்து வாக்குப்பதிவை நிறுத்தும்போது வாக்குச்சாவடிக்கு வாக்கு செலுத்த வரும் பெண்கள், இளைஞர்கள், பெரியவர்கள் எல்லாம் பயந்துக்கொள்கிறார்கள். வாக்குச்சாவடிக்கு போனால் பெரிய ரகளையாக இருக்கிறது. இப்படியான எண்ணத்தை உருவாக்குவதுதான் அவர்களுடைய ஐடியா.

அவர்களுக்கு தெரியும் பெரிய வாக்கு வித்தியாசத்தில் தோற்கப்போகிறோம் என்று. அதனால் இப்படியான அட்டகாசத்தை செய்துக்கொண்டிருக்கிறார்கள். மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்துள்ளோம். அவர் நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார். காவல்துறையினரிடமும் புகார் அளிக்கவுள்ளோம். அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து கைது செய்யதால் சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட முடியும். நான் காருக்குள் உட்கார்ந்திருந்தேன். காவல்துறையின் லத்தியை புடுங்கி கார் கண்ணாடியை அடித்து உடைக்க முயன்றனர். வீடியோ என்னிடம் தெளிவாக உள்ளது.” என்றார்.
Published by:Ramprasath H
First published: