தேனி என்ஆர்டி நகர் பகுதியில் அமைந்துள்ள திமுக அலுவலத்தில் தேனி வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசுகையில், தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ், கேரள மாநிலத்தில் ரூ.2,000 கோடிக்கு சொத்து வைத்துள்ளதாக அம்மாநில பத்திரிக்கையான மலையாள மனோரமா செய்தி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து குற்றம்சாட்டும் என் மீதும் கேரள பத்திரிக்கை மீதும் எந்தவொரு வழக்கும் தொடரப்படவில்லை. இதிலிருந்தே ஊழல் செய்து கேரளாவில் சொத்து சேர்த்தது உறுதியாகிறது என்று கூறினார்.
இந்த ஊழல் குற்றச்சாட்டு குறித்து வருமானவரித் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறிய தங்க தமிழ்ச்செல்வன், துணை முதல்வரின் ஊழலை எடுத்துரைத்து வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக பிரச்சாரம் மேற்கொள்ளும். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதிமுக ஊழல் குறித்த பட்டியலை கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆளுநரிடம் வழங்கியுள்ளார். இரண்டாம் கட்ட பட்டியல் தயாராகி வருகிறது. அதில் ஓபிஎஸ் குறித்த ஊழல் இடம்பெறும். அந்த ஊழல் பட்டியலும் ஆளுநரிடம் வழங்கப்பட உள்ளது என்றார்
Also read: தமிழக அரசில் ஊழல் இல்லை - பா.ஜ.க தலைவர் எல்.முருகன்
அரசு சார்பாக மினி கிளினிக் பல பகுதிகளில் திறக்கப்பட்டு வருவதாக தெரிவித்த அவர், ஆரம்ப சுகாதார நிலையத்திலேயே உரிய மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்துகள் இல்லாத நிலையில், ஊழல் குற்றங்களை மறைப்பதற்காகவே இந்த மினி கிளினிக் திறக்கப்படுகிறது என்று சாடினார்.
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும் தேனி நாடாளுமன்ற உறுப்பினருமான ரவீந்திரநாத் கடந்த சில நாட்களுக்கு முன்பு மொரீஷியஸ், மாலத்தீவிற்கு தனி விமானத்தில் சென்றதாக பத்திரிகைகளில் செய்தி வந்திருப்பதாக கூறிய தங்க தமிழ்ச்செல்வன், யாரிடம் அனுமதி பெற்று அவர் சென்றார் என்பது தெரியவில்லை. ஊழல் பணத்தைப் பதுக்குவதற்காகவே அங்கு சென்றுள்ளார் என நான் குற்றம்சாட்டுகிறேன். இதுகுறித்து ஓபிஎஸ் தரப்பு எந்தவொரு விளக்கமும் இதுவரை அளிக்கவில்லை என்றார்.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் துணை முதல்வர் ஓபிஎஸ்-க்கும் இடையே பனிபோர் அல்லாமல் நேரடியாகவே போர் நடைபெற்று வருவதாக தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்தார். மேலும் கூறுகையில், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அடுத்த மாதம் தேனி மாவட்டத்திற்கு வர உள்ளதாகவும், வரும் 31ம் தேதி தேர்தல் அறிக்கை குறித்து கருத்து கேட்பதற்காக டி.ஆர்.பாலு தேனி மக்களைச் சந்திக்கயிருப்பதாகவும் கூறினார்.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: OPS, Thanga Tamilselvan