மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு வரும் 24ம் தேதியுடன் அவகாசம் முடிவடையும் நிலையில், மேலும் கூடுதல் அவகசாம் வழங்கப்படுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதுதொடர்பாக அப்பல்லோ மருத்துவர்கள், செவிலியர்கள், போயஸ்கார்டன் ஊழியர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் என இதுவரை 154 பேரிடம் விசாரணை நிறைவு பெற்றுள்ளது.
விசாரணை இறுதிகட்டத்தை அடைந்த நிலையில், 2019ல் இந்த வழக்கில் உரிய மருத்துவ குழுவை கொண்டு விசாரணை மேற்கொள்ளவில்லை என்று அப்பல்லோ நிர்வாகம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து, இந்த ஆணைத்தின் விசாரணைக்கு இடைக்கால தடையை நீதிமன்றம் விதித்தது.
இந்த சூழலில், வரும் 24ம் தேதியுடன் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு 10வது முறையாக வழங்கப்பட்ட 6 மாத கால அவகாசம் முடிவடைகிறது. இதுதொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் தரப்பில் அரசு அளித்த கால அவகாசம் நிறைவு பெறுவது தொடர்பாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள வழக்கை விரைந்து நடத்தி ஆறுமுகசாமி ஆணையத்தின் மீதான தடையை அரசு நீக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.
விசாரணை முழுமை பெறாத நிலையில் தற்போது வரை 3 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த தி.மு.க செய்தித் தொடர்பாளர் சரவணன், ‘ஆறுமுகசாமி கமிஷன் விசாரணை செய்து ஜெயலலிதா மரணம் தொடர்பான உண்மையை வெளிக்கொண்டு வராமல் இருக்க, காலவிரயம் செய்யவே ஆறுமுகசாமி கமிஷனுக்கு மூன்று கோடி ரூபாய் அ.தி.மு.க செலவு செய்துள்ளது. ஜெயலலிதா மரணம் தொடர்பான உண்மையை வெளிக்கொண்டுவர வேண்டும் என்று சொன்னவர் ஓ.பன்னீர் செல்வம். ஆனால் எட்டு முறைக்கு மேலாக அவருக்கு சம்மன் அனுப்பியும் நேரில் அவர் ஆஜராகவில்லை.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் ஆறுமுகசாமி கமிஷனுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. விரைவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதுகுறித்து கலந்து ஆலோசித்து ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையை துவங்குவார்’ என்று தெரிவித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.