தி.மு.க அகல வேண்டியது காலத்தின் கட்டாயம் - கமல்ஹாசன் கடும் விமர்சனம்

கமல்ஹாசன்

தி.மு.க அகல வேண்டியது காலத்தின் கட்டாயம் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

  • Share this:
சென்னையை ஒட்டிய அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நகர செயலாளர் எம்.சந்தானம் ஏற்பாட்டில் அம்பத்தூர் பழைய பஸ் நிலையம் அருகில் தலைவர் கமலஹாசன், கவிஞர் சினேகன், பழ கருப்பையா உள்ளிட்ட 1,000 த்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்ற பிரம்மாண்ட தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது.

அதில் கலந்துகொண்ட கமல்ஹாசன் பேசுகையில், உயிரே, உறவே, தமிழே.. என் கட்சி தலைவர்கள் நிறைந்த கூட்டம். இந்த கூட்டம் இவ்வளவு சிறப்பாக நடப்பதற்கு காரணம் எனது சகோதரர்கள். மக்கள் நீதி மய்யம் என்ற குழந்தை கருவிலேயே கலைந்து விடும் என்று கூறினர். திமுக தோன்றியது காலத்தின் கட்டாயம். இன்று அது அகல வேண்டும் என்பதும் காலத்தின் கட்டாயம். எம்.ஜி.ஆர். அண்ணா காலமாகி விட்டதும் இவர்களின் கொள்கைகளும் காலாவதி ஆகிவிட்டது. அரசியல் எனது தொழில் இல்லை.
நமது கடமை. அதை எல்லோரும் செய்ய வேண்டும். நிதி என்று வைத்திருப்பதால் எங்கள் நிதியில் கை வைப்பது முறையல்ல.

நான் வளர்ந்த சூழலில் காந்தியை பற்றியும் கடவுளை பற்றியும், காங்கிரஸை பற்றியும் தெரிந்து தான் வளர்ந்தேன். என்னுடைய தகப்பனும் காங்கிரஸார் தான். கொலம்பஸ் கண்டுபிடிக்கச் சென்றது இந்தியாவைக் கண்டுப்பிடிக்கதான். நான் என்னை கண்டுபிடிக்கச் சென்றேன் அது தான் இந்தியா. இங்கே நான் ஒவ்வொரு மேடையாக முழங்கிக் கொண்டு இருக்கிறேன். விற்பனைக்கு அல்ல தமிழகம். விற்பனைக்கல்ல தமிழக இளைஞர்கள். விற்பனைக்கு அல்ல தமிழ் பெண்களின் மானம். போலீஸ் அதிகாரிகளின் மானம். இவையெல்லாம் விற்பனைக்கல்ல, ஓட்டு விற்பனைக்கு அல்ல என்று வீட்டு வாசலில் எழுதி போடுங்கள். நாய் ஜாக்கிரதை என்று போர்டு போடுவார்கள் அல்லவா அதுபோல் எங்கள் ஓட்டு விற்பனைக்கு அல்ல என்று எழுதி போட்டு விட்டால் இதை பார்த்து நாக்கை தொங்க போட்டு வர மாட்டார்கள்.

ஏனென்றால் அதை வைத்து ஜெயித்து விடலாம் என்கிற ஒரே நம்பிக்கையில்தான் வந்திருக்கிறார்கள். வேறு எந்த சாதனையும் இல்லை. கட்டிய கட்டடம் எல்லாம் இடிந்து விழுகின்றன. சொன்ன வாக்குறுதிகள் எல்லாம் முடங்கிப் போகின்றன. நம்முடைய எதிர்காலம் இருண்டு கிடக்கின்றன. இப்போது கையில் உள்ளது டார்ச் லைட் தான்.

பெட்ரோல் டீசல் விலைக்கு நாங்கள் பொறுப்பல்ல என்று கூறுகின்றனர். சாலையில் சுங்கச்சாவடி வைத்து அளவில்லாமல் வசூல் செய்து கொண்டிருக்கிறார்கள். சாலை பராமரிப்பு வரி, ஜி.எஸ்.டி என வரி போட்டு கொண்டே இருக்கிறார்கள்.

நாங்கள் என்ன வரிக்குதிரையா தொடர்ந்து வரிபோட. மாநில அரசு நினைத்தால் பெட்ரோல், டீசல் விலை குறைக்கலாம் என கூறுகின்றனர். ஆனால் குறைக்கவில்லை. உங்கள் பிள்ளைகளுக்கு பரீட்சை எழுதாமல் மார்க் போட தெரிகிறதல்லவா? புகையில் கஷ்டப்பட்ட பெண்களுக்கு சிலிண்டர் ஆசை காட்டியது நீங்கள் தான். டக்குனு விலையை ஏத்திட்டாங்க. ஆனால் குறைப்பதாக இல்லை.

ஊடஙகள் இந்த நாட்டின் தூண்கள். தமிழைக் கற்று கொள்ளாமல் இருந்தோமே என வருத்தப்பட்ட ஒருவர் 30 நாட்களில் தமிழ் கற்றுகொள்ளலாம். ஆனால் 32 நாட்களே உள்ளது. வந்து தான பார்க்கட்டுமே. தமிழகம் வெற்றி நடைபோடுகிறது. கூகில் செய்து பார்த்தேன் எங்கே வெற்றி நடைபோடுகிறது என்று. கூகுள் செய்து பார்த்தேன் எத்தியோப்பியா நாட்டில் தமிழகம் வெற்றி நடைபோடுகிறது. தமிழகம் மீள வேண்டும். தமிழகம் மீட்கப்படவேண்டும். இனி ஊடகங்கள் இவர்களுக்கு உடந்தையாக இருக்கக் கூடாது. நீங்கள் நாட்டின் தூண்கள். வெற்றி என்பது கோட்டைக்குள் உட்காந்திருப்பது தான் வெற்றியா. இந்த தேர்தலில் வெற்றி பெற செய்தாலும் அது வெற்றி கிடையாது. என்னுடைய கடமையை செய்து முடிக்க தானே தவிர வெற்றி கிடையாது.

பணக்காரர்களுக்கு பின்னால் அரசு அண்டி பிழைக்கிறது. 5,000 ரூபாய்க்கு நீங்கள் போடும் ஓட்டுக்கு என்ன நிலைமை என்று பாருங்கள். அமைச்சர்கள் லஞ்சம் வாங்காமல் இருந்தால் 2 தமிழ்நாட்டை வளமாக வைத்துக்கொள்ளலாம். ஒரு ட்ரில்லியன் மதிப்பு ஆக உயர்த்துவது வெற்றி. மு.க.ஸ்டாலின் நிற்கும் இடத்தில் நான் நிற்க மாட்டேன். கொஞ்சம் சுத்தமான இடத்தில் நிற்பேன். கமலுக்கு மதம் இல்லை. சாமி இல்லை. நீங்கக்தான் சாமி. பக்தி இல்லை, பாசம் உண்டு. நேசம் உண்டு. யாருக்கும் வணங்க மாட்டேன் என சொல்லுவது தவறு. உங்களுக்கு தலை வணங்குவேன். துரோகம் செய்பவர்களுக்கு தலை வணங்க மாட்டேன்.

இது என் நாடு என 5,000 ரூபாய் வாங்கி கொண்டு ஓட்டை குத்தகைக்கு விடுகிறீர்கள். பணம்பெற்று வாக்களித்தப்பின் அரசை எதிர்த்து கேள்வி கேட்க முடியாது. 5,000 ரூபாய் கொக்கியில் மாட்டியுள்ள புழுவிற்கு சமானம். அதை வீசி உங்களை பிடிக்கிறார்கள். அமைச்சர்கள் வாங்கும் லஞ்சம் பெறாமல் இருந்தால் இரண்டு தமிழகத்தை சுபிக்‌ஷமாக வைத்திருக்கலாம். இங்கு கூடியிருக்கும் கூட்டத்தை விட இந்த கட்சி வரக்கூடாது என நினைத்து வீட்டில் இருக்கும் கூட்டம் அதிகம். நான் சாமானியன். உங்கள் விரல் முழுவதுமாக கருக்க வேண்டும். அவர்கள் கை முழுவதுமாக கறை. விரலில் உள்ள சின்ன கறையின் மூலம் கைகளில் உள்ள கறைகளை நீக்கலாம். தமிழக மக்கள் கெட்டிகாரர்கள். ஆனால் கொஞ்சம் ஏமாளிகள். மத்திய அரசு குறித்து குறைவாக பேசுங்கள் என கூறுவார்கள் ரெய்டு வரும். நானே ரெய்டு செல்ல தயாராக உள்ளேன். நாங்கள் செல்லும் இடமெல்லாம் இப்படிப்பட்ட கூட்டம் வருவது தமிழுக்கு பெருமை. உண்மையான தமிழருக்கு பெருமை. நான் தலைவன் என்று சொல்வதை விட அடிப்படை தொண்டன் என்பது தான் பெருமை. எனக்கு தலைவன் என்பது முக்கியமில்லை’ என்று தெரிவித்தார்.

செய்தியாளர்: கண்ணியப்பன், அம்பத்தூர்.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Karthick S
First published: