திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மக்கள் விரோதப் போக்கை கடைபிடிக்கும் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடிபழனிசாமி கலந்துகொண்டு தமிழக அரசைக் கண்டித்தும் திமுக அரசை கண்டித்தும் பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேசும் போது, திமுக ஆட்சி பொறுப்பேற்று 7 மாதங்களாகிறது. தேர்தல் வாக்குறுதிகளாக 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டு ஒருசில வாக்குறுதிகள் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது. முக்கிய வாக்குறுதிகளான அறிவிக்கப்பட்ட தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் தள்ளுபடி, இல்லத்தரசிகளுக்கு ஆயிரம் ரூபாய், முதியோர் உதவித்தொகை மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித்தொகை, சுய உதவி குழுக்களுக்கு தேசிய வங்கிகளில் கடன் தள்ளுபடி போன்ற எந்த வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படாமல் உள்ளது .
மக்களின் பிரதான தேர்தல் அறிக்கையாக பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதிகளை அளித்து விட்டு விடியும் அரசு என கோரி தமிழக மக்களை வஞ்சித்து விடியாத அரசாக செயல்பட்டு வருகிறது. வாக்குகளை வாங்குவதற்காக கவர்ச்சிகரமான தேர்தல் அறிக்கை அளித்து விட்டு ஏமாற்றும் அரசாக செயல்பட்டு வருகிறது. கட்டுமான தொழிலில் பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சிமெண்ட் விலையை உயர்த்திய திமுக அரசு அதனை குறைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
ஏழை எளிய மக்களுக்காக அதிமுக அரசில் துவங்கப்பட்ட அம்மா உணவகத்தை மூடும் நோக்கில் செயல்பட்டு வரும் திமுக அரசு கண்டிக்கத்தக்கது. அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி கொடுக்காமல் ஏமாற்றி வரும் அரசாகவும் திகழ்ந்து வருகிறது என்றும் தற்போது செயல்பட்டு வரும் முதலமைச்சர் பொம்மை முதலமைச்சராக இருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.
Also Read : 3 மாணவர்கள் உயிரிழந்த நெல்லை பள்ளி விபத்தில் நடந்தது என்ன? மாவட்ட ஆட்சியர் விளக்கம்
தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிசாமி, வேண்டுமென்றே முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அதிமுகவினர் மீது லஞ்ச ஒழிப்பு காவல் துறையை ஏவிவிட்டு பொய் வழக்குகளை போட்டு மக்களை திசை திருப்பும் நோக்கில் செயல்பட்டு வரும் திமுக அரசு, எவ்வளவு அவதூறு பரப்பினாலும் சட்டப்படி எதிர்கொள்வோம். மத்திய அரசு அறிவித்துள்ள ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற முறையில் வருகின்ற 2024 ஆம் ஆண்டு திமுக ஆட்சி முடிவுக்கு வரும் என்றும் தெரிவித்தார்
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: ADMK, DMK, Edappadi palanisamy, MK Stalin