தமிழ்நாடு ஆளுநர் விவகாரம், நீட் மசோதா ஒப்புதல் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுடன் தமிழ்நாடு பிரதிநிதிகளான சட்ட அமைச்சர் ரகுபதி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, பி.வில்சன் மற்றும் என்.ஆர்.இளங்கோ ஆகியோர் சந்தித்து கோரிக்கை மனுவையும், தமிழ்நாடு முதலமைச்சர் எழுதிய கடிதத்தை சீலிட்ட கவரில் வழங்கினர். சுமார் 20 நிமிடங்கள் வரை நீடித்த இந்த சந்திப்பின் போது, தமிழ்நாடு மக்கள் மற்றும் அரசியல் சாசனத்திற்கு எதிரான ஆளுநரின் செயல்பாடுகள் இருப்பதாக குடியரசுத் தலைவர் திரௌபதி மூர்முவிடம் எடுத்துரைத்தனர்.
நடப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளும் திமுக அரசுக்கும் ஆளுநர் ஆர்.என். ரவிக்கும் இடையே மோதல் வெடித்தது. பேரவை கூட்டத்தொடரின் முதல் நாளில் ஆளுநர் உரையின் போது தமிழ்நாடு அரசு தயாரித்துக் கொடுத்த அறிக்கையில் இடம்பெற்ற சில பகுதிகளை படிக்காமல் தவிர்த்தார். இது அவையில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், ஆளுநருக்கு எதிராக முதலமைச்சர் ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார். அந்த தீர்மானத்தை முதலமைச்சர் ஸ்டாலின் வாசித்துக் கொண்டிருக்கும் போதே, ஆளுநர் ஆர்.என்.ரவி பேரவையில் இருந்து வெளியேறினார். தமிழ்நாடு அரசின் உரையை முழுமையாக படிக்காதது, பேரவையில் தேசிய கீதம் இசைக்கும் முன்பாகவே ஆளுநர் வெளியேறியது உள்ளிட்ட விவகாரங்களை அவை விதிமீறல்களாக திமுக கையில் எடுத்துள்ளது.
குடியரசு தலைவரை சந்தித்த பின்னர் டெல்லி ரைசினா சாலையில் உள்ள டி.ஆர்.பாலுவின் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக பிரதிநிதிகள், “முதலமைச்சர் கடிதத்தை சட்ட அமைச்சர் ரகுபதி குடியரசு தலைவரிடம் வழங்கினார். பின்னர், சட்டப்பேரவையில் தமிழ்நாடு ஆளுநர் நடந்து கொண்ட விதம் அரசியலமைப்பிற்கு எதிரானது. சட்டப்பேரவையில் ஆளுனர் நடந்துகொண்ட விதம் மிக வருந்தத்தக்கது. தேசிய கீதம் ஒலிப்பதற்கு முன் ஆளுநர் சட்டப்பேரவையில் வெளியே சென்றது தேசிய கீதத்தை அவமதிக்கும் செயல். தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல் அளித்து பின்னர் ஆளுநரும் ஒப்புதல் அளித்த அந்த உரையில் பலவற்றை தவிர்த்தும், சேர்க்கவும் செய்துள்ளார். ஆளுனர் அரசியல் சாசனத்துக்கு எதிராகவும், சட்டப்பேரவை விதிமுதைகளுக்கு மாறாகவும் நடந்துகொண்டுள்ளார் என்பதை எடுத்துரைத்தோம்” என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “முதலமைச்சர் முக ஸ்டாலின் எழுதிய கடிதத்தை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மூ படித்துப் பார்த்த பின்னர் ஆளுனரின் அரசியல் சாசன விதி மீறல் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம். இவை அனைத்தையும் கவனமுடன் கேட்ட குடியரசு தலைவர், நான் பார்க்கிறேன் (I Will see) கூறினார்” எனவும் தெரிவித்தார்.
பின்னர் சேது சமுத்திர திட்டம் குறித்த கேள்விக்கு பதிலளித்த பாலு, “மத்திய அமைச்சர் ஜிதெந்திர சிங் நாடாளுமன்றத்தில் வழங்கிய பதில் அடிப்படையில் சேது சமுத்திரத் திட்டம் நிச்சயமாக நிறைவேற்ற வேண்டும் என மத்திய அரசிடம் வலியுறுத்துவோம். நாடாளுமன்றத்திலும் இதுகுறித்து வலியுறுத்த படும். திட்டம் நிறைவேறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுப்போம்" எனத் தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: A Raja, CM MK Stalin, DMK MP Wilson, Draupadi Murmu, RN Ravi, T.r.balu