Home /News /tamil-nadu /

கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களிலிருந்து பதவி விலகாத தி.மு.க நிர்வாகிகள்: சாட்டையைச் சுழற்றத் தயாரான தலைமை

கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களிலிருந்து பதவி விலகாத தி.மு.க நிர்வாகிகள்: சாட்டையைச் சுழற்றத் தயாரான தலைமை

மு.க.ஸ்டாலின் அதிரடி அறிக்கை

மு.க.ஸ்டாலின் அதிரடி அறிக்கை

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினின் உத்தரவையும் மீறி கூட்டணி கட்சியினருக்கு ஒதுக்கப்பட்ட இடங்களின் பதவிகளில் நீடிக்கும் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க கட்சித் தலைமை தயாராகியுள்ளது.

பிப்ரவரி மாதம் 19ம் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கான மேயர், துணை மேயர், நகர்மன்றத் தலைவர் நகர்மன்ற துணைத்தலைவர் பேரூராட்சித் தலைவர் பேரூராட்சி துணை தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளுக்கான மறைமுக தேர்தல் கடந்த 4ஆம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற்றது.

இதில் தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கிட்டத்தட்ட 95 சதவீதத்திற்கும் அதிகமான இடங்களை கைப்பற்றியது. அதில் தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கக்கூடிய கட்சிகளுக்கு தி.மு.க தலைமை அமைத்த, கே.என்.நேரு தலைமையிலான குழுவானது குறிப்பிட்ட இடங்களை ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் கையெழுத்தாகி இருந்தது.

இதில் காங்கிரஸ் கட்சிக்கு கும்பகோணம் மாநகராட்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களையும் இதேபோல் கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ம.தி.மு.க, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளுக்கும் துணை மேயர், நகர்மன்றத் தலைவர், துணைத் தலைவர், பேரூராட்சித் தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட குறிப்பிட்ட சில இடங்களை ஒதுக்கீடு செய்து ஒப்பந்தம் கையெழுத்தானது.

மறைமுக தேர்தல் துவங்கிய சில மணி நேரங்களிலேயே தமிழகம் முழுவதும் குறிப்பிட்ட சில இடங்களிலிருந்து கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் தி.மு,.வினர் போட்டி போட்டு வெற்றி பெற்றது. இந்தச் சம்பவம் திமுக தலைமை உள்ளிட்ட திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. அதனையடுத்து, அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க பொருளாளர் டி.ஆர்.பாலுவுடன் ஆலோசனையில் ஈடுபட்ட தி.மு.க தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களுக்கு தொலைபேசி வாயிலாக  கண்டித்தவாறு, உடனடியாக இதற்கு சுமூக தீர்வு எட்ட வேண்டும் என்றும் அறிவுறுத்தி இருந்தார்.

இதனிடையே திமுகவினரின் இச்செயலை கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனும் கண்டனம் தெரிவித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில், ‘அதில் தி.மு.கவினரின் இந்த செயல் தன்னை கூனிக் குறுக வைப்பதாகவும் உடனடியாக கூட்டணி கட்சியினருக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் தங்களின் பதவியை ராஜினாமா செய்து விட்டு தன்னை வந்து சந்திக்கும்படி உத்தரவிட்டிருந்தார்.

முதலமைச்சரின் ஒழுக்கத்துடன் கூடிய கண்டிப்பான அறிக்கை வந்து இன்றுடன் ஐந்து நாட்கள் ஆகியுள்ளது. தற்போதுவரை திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி, புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம், திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி, கரூர் மாவட்டம் புலியூர், திருப்பூர் மாவட்டம் காங்கேயம், கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் நகர மன்றத் துணைத் தலைவர் உள்ளிட்ட இடங்களில் வெற்றி பெற்ற தலைவர் துணைத் தலைவர் உள்ளிட்ட இடங்களை திமுகவினர் ராஜினாமா செய்துள்ளனர்.

ஆனால் தற்போது வரை மிகக் குறைவான நபர்களே ராஜினாமா செய்துள்ளதால் தி.மு.க தலைமை கையை பிசைந்து கொண்டுள்ளது.
இதனிடையே அண்ணா அறிவாலயத்தில் இதுவரை ராஜினாமா செய்யாதவர்களின் பட்டியல் தயாராகிக் கொண்டிருப்பதாகும், அவர்கள் மீது நிச்சயம் கட்சி ரீதியிலான நடவடிக்கையினை தி.மு.க தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் விரைவில் எடுக்க உள்ளதாகவும் தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

ஏற்கனவே நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கட்சிக்கும் கட்சியினருக்கும் எதிராக செயல்பட்ட நாகர்கோவில் கிழக்கு மாவட்டச் செயலாளர் சுரேஷ்ராஜன், கடலூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன், பூந்தமல்லி நகர கழகச் செயலாளர் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டு இருக்கும் நிலையில் மேலும் பலரின் பெயர் இந்தப் பட்டியலில் அடங்கும் என்று அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கட்சித் தலைவர் உத்தரவிட்ட பின்னரும் சொந்த காரணங்களுக்காக தற்போது வரை ராஜினாமா செய்யாதவர்கள் மீது சாட்டையை சுழற்ற திமுக தலைவர் மு க ஸ்டாலின் தயாராகிவிட்டார் என்றும் இதில் ஒரு சில அமைச்சர்களும் மாவட்டச் செயலாளர்களும் கூட மாட்டுவார்கள் என சில மூத்த நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
Published by:Karthick S
First published:

Tags: DMK, MK Stalin

அடுத்த செய்தி