முகப்பு /செய்தி /தமிழ்நாடு / உதயநிதி ஸ்டாலினுக்கு தேடிவந்த அமைச்சர் பதவி.. அரசியலில் சாதித்தது என்ன? - விளக்கம் கொடுத்த திமுக!

உதயநிதி ஸ்டாலினுக்கு தேடிவந்த அமைச்சர் பதவி.. அரசியலில் சாதித்தது என்ன? - விளக்கம் கொடுத்த திமுக!

உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலினின் கட்சிப் பணி, மக்கள் பணிகளை அங்கீகரிக்கும் வகையில், அமைச்சரவையில் இணைத்து மக்கள் பணியாற்றும் வாய்ப்பை வழங்க இருப்பதாக திமுக விளக்கம் அளித்துள்ளது.

  • News18 Tamil
  • 5-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று, முதல்வராக மு.க.ஸ்டாலின் உள்பட, 34 அமைச்சர்களும் பொறுப்பேற்றுக் கொண்டனர். பின்னர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அமைச்சரவையில் துறைகள் மாற்றம் நடைபெற்றது. இருப்பினும், அமைச்சரவை விரிவாக்கம் நடைபெறவில்லை.

திமுக அமைச்சரவை பொறுப்பேற்றபோதே, கட்சியின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில், திமுக உட்கட்சித் தேர்தல்கள் முடிந்து, இளைஞரணிச் செயலாளராக மீண்டும் உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்ட நிலையில், இன்று அவர் 35 வது அமைச்சராக பொறுப்பேற்கிறார்.

இதற்கிடையே உதயநிதி ஸ்டாலினின் கட்சிப் பணி, மக்கள் பணிகளை அங்கீகரிக்கும் வகையில், அமைச்சரவையில் இணைத்து மக்கள் பணியாற்றும் வாய்ப்பை வழங்க இருப்பதாக திமுக விளக்கம் அளித்துள்ளது.

இது குறித்து திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-

ஊராட்சி சபை: 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக திமுக தலைவர் முன்னெடுத்த ஊராட்சி சபைக் கூட்டங்களைப் பல மாவட்டங்களில் திறம்பட நடத்தினார். தொடர்ந்து நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம் முழுவதும் சுற்றி திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்காகத் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். மக்கள்மொழியில் அவர்களுடன் கலந்துரையாடும் வகையிலான இயல்பான பேச்சு, வாக்காளர்களிடம் மிகப்பெரிய அளவில் மனமாறுதலை ஏற்படுத்தியது என்றால், அது மிகையல்ல. அந்தத் தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர்கள் 39 தொகுதிகளில் வெல்ல இவரின் பிரசாரத்துக்குக் குறிப்பிடத்தக்கப் பங்குண்டு.

இளைஞர் அணி செயலாளர்: 2019-ஆம் ஆண்டு ஜூலை 4-ஆம் தேதி திமுக இளைஞர் அணி செயலாளராக நியமிக்கப்பட்டார். இவர் பொறுப்பேற்றபோது கட்சி அதிகாரத்தில் இல்லாதபோதும், இளைஞர் அணியினரைக் கொண்டு மக்கள் பணிகளைச் செய்ய முடிவெடுத்தார். மாநிலம் முழுவதும் தூர்ந்து கிடந்த நீர்நிலைகளைத் தூர்வாரவேண்டும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். இதுவரை நூற்றுக்கணக்கான ஏரி குளங்கள் திமுக இளைஞர் அணியினால் தூர்வாரப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளன.

நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள்: நீட் தேர்வுக்கு எதிராக, திமுக மாணவர் அணியுடன் இணைந்து தொடர் போராட்டங்களை, ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்தார். நீட் தேர்வால் தன் இன்னுயிரை இழந்த தங்கை அனிதாவின் சொந்த ஊரில் அவர் நினைவாக அமைந்துள்ள நூலகத்திற்குச் சென்று தனக்கு அன்பளிப்பாக வந்த புத்தகங்களையும் நூலக மேம்பாட்டுக்கான வளர்ச்சி நிதியையும் வழங்கினார். நீட்டால் உயிரிழந்த மாணவச் செல்வங்களின் வீடுகளுக்கு நேரில் சென்று ஆறுதல் சொல்லியும், ஏ.கே ராஜன் ஆணையத்தில் நீட்டிற்கு எதிரான தன் நிலைப்பாட்டையும் அதனைப் பதிவு செய்வதும் என நீட்டிற்கு எதிராக இன்றுவரை தொடர்ந்து போராடி வருகிறார்.

ஊரடங்கு கால மக்கள் பணி: கரோனா காலத்தில் ஊரடங்கை மட்டும் அறிவித்துவிட்டுச் செயல்படத் திறனின்றி நின்றன ஒன்றிய, மாநில அரசுகள். பேரிடரில் வாழ்வாதாரம் இழந்து தவித்த மக்களுக்கு, உதவிக்கரம் நீட்ட இளைஞர் அணி சார்பாக அனைத்து மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்களின் அலைபேசி எண்ணையும் பொதுவெளியில் வெளியிட்டு, ‘உதவித் தேவைப்படுவோர் அந்தந்த மாவட்ட அமைப்பாளரைத் தொடர்புகொள்ளலாம்’ என அறிவித்து அந்த நலத்திட்டப் பணிகளை ஒருங்கிணைத்தார். ஆயிரக்கணக்கான அழைப்புகள் வந்தன, தமிழகம் முழுவதும் உள்ள இளைஞர் அணி நிர்வாகிகள் பேரிடரிலும் தங்களை மக்கள் பணியில் ஈடுபடுத்திக் கொண்டனர். மருந்துகள், உணவுப் பொருள்கள் என ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு ஊரடங்கு நாட்களிலும் உதவிகள் கிடைக்கக் காரணமானார்.

குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு: நாடாளுமன்றத்தில் நாட்டின் ஒற்றுமைக்கே குந்தகம் விளைவிக்கக்கூடிய குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்தது ஒன்றிய பாஜக அரசு அதற்குத் துணை நின்றது அன்றைய அதிமுக மதச்சார்பின்மைக்கு எதிரான பாஜக-அதிமுகவின் போக்கைக் கண்டித்து, தமிழகத்தில் முதல் நபராக இளைஞர் அணியினருடன் களத்தில் இறங்கிப் போராடிக் கைதானர்.

எளிய மக்களின் நம்பிக்கையாக இருக்கும் அரசு வேலைக்கும் ஆபத்தை ஏற்படுத்திய அன்றைய ஆட்சியாளர்களின் TNPSC முறைகேட்டைக் கண்டித்து, மாணவர் அணியுடன் இணைந்து மாபெரும் போராட்டங்களை முன்னெடுத்துப் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியைப் பெற்று தந்தார்.

அண்ணா பல்கலை பிரிப்புக்கு எதிர்ப்பு: அண்ணா பல்கலைக்கழகத்தின் பெருமையை சீர்குலைக்கும் வகையில் அதை இரண்டாகப் பிரிக்கவேண்டும் என்ற ஒன்றிய அரசின் முடிவைச் செயல்படுத்தத் துணிந்தார் அன்றைய துணை வேந்தர் சூரப்பா. அவரின் முடிவை அன்றைய அதிமுக அரசும் ஆமோதித்தது. அம்முடிவைத் திரும்பப்பெறக் கோரி மாணவர் அணியுடன் இணைந்து தமிழகம் தழுவிய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்திக்காட்டினார். இவர் அண்ணா பல்கலைக்கழகத்தின் எதிரிலேயே நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்திற்குத் திரண்ட இளைஞர்-மாணவர்களைக் கண்டு அன்றைய மக்கள் விரோத பாஜக-அதிமுக அரசு அம்முடிவைத் திரும்பப்பெற்றது.

இந்தித் திணிப்பு எதிர்ப்பு: அதேபோல் இந்தித் திணிப்பு, ஒரே தேர்வு என மொழி, கல்வி உரிமைகளைப் பறிக்கும் ஒன்றிய பாஜக அரசின் பாசிச போக்கைக் கண்டித்து, இளைஞர் அணி- மாணவர் அணி சார்பில், தமிழ்நாடு முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தினார்.

25 லட்சம் உறுப்பினர்கள்-3.5 லட்சம் நிர்வாகிகள்: சட்டமன்றத் தொகுதிக்குச் சராசரியாக 10 ஆயிரம் பேர் என மொத்தம் 25 லட்சம் புதிய உறுப்பினர்களைக் கட்சியின் இளைஞர் அணியில் சேர்க்கும் பணியை ஒருங்கிணைத்தார். அவர்களில் திறம்பட பணியாற்றிய 3.5 லட்சம் இளைஞர்களை ஒன்றிய கிளைகளிலும், பகுதி-நகர-பேரூர் வார்டுகளிலும் இளைஞர் அணி நிர்வாகிகளாக நியமித்து, கட்சிக்குப் புத்துயிர் ஊட்டினார். 2021 -ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு இப்பணி நடந்ததால், இளைஞர்கள் தேர்தல் களத்தில் எழுச்சியுடன் பணியாற்றக் காரணமாக அமைந்தது.

ஒற்றைச் செங்கல் மூலம் பாசிச எதிர்ப்பு: அதைத்தொடர்ந்து சட்டமன்றத் தேர்தலில் இவரின் பிரசாரம் அனைத்துத் தரப்பினரிடமும் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. ‘ஒற்றைச் செங்கல்’ மூலம் ஒன்றிய பாஜக அரசு-அதிமுக கூட்டணியின் தமிழர் விரோதப் போக்கை உலகறியச் செய்து, தேர்தல் வெற்றிக்குக் குறிப்பிடத்தக்கப் பங்காற்றினார்.

சட்டமன்ற உறுப்பினர்: அந்தத் தேர்தலில் இவரும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில், சுமார் 70 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்று சட்டமன்ற உறுப்பினரானார். கரோனா பெருந்தொற்று சமயத்தில் தன் தொகுதியில் உள்ள அனைத்து இல்லங்களுக்கும் அரிசி-மளிகை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை தன் சொந்த செலவில் வழங்கினார். தொகுதியில் கிட்டத்தட்ட அனைவருக்கும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தும் பணியை ஒருங்கிணைத்தார்.

ரூ.1 கோடி கல்வி உதவித் தொகை: தொகுதியில் பள்ளி மாணவர்களுக்கு ரூ.10 ஆயிரம், கல்லூரி மாணவர்களுக்கு ரூ.20 ஆயிரம் எனக் கடந்த கல்வியாண்டில் மட்டும் ஒரு கோடி ரூபாய் கல்வி உதவித்தொகையாக வழங்கியுள்ளார். இதேபோல தொகுதியில் உள்ள மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகளுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறார். தொகுதியில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் பழமையான நான்கு குடியிருப்புகளை இடித்துவிட்டு அவற்றுக்குப் பதில் புதிய குடியிருப்புகளைக் கட்டும் பணியை விரைவுபடுத்திவருகிறார்.

800 புதிய மின் இணைப்பு: சட்டச் சிக்கல் காரணமாக நீண்டநாட்களாக மின் இணைப்பு வழங்கப்படாமல் இருந்த திருவல்லிக்கேணி மாட்டாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த 800-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கி, தொகுதி மக்களின் நன்மதிப்பைப் பெற்றார். மாநகராட்சிப் பள்ளிகளைத் தனியார் பள்ளிகளுக்கு நிகராக மாற்றியமைக்கும் வகையில் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து சிறந்த திட்டங்களை முன்னெடுத்து வருகிறார்.

இலவச வைஃபை: பள்ளி-கல்லூரி பயிலும் மாணவ-மாணவிகளுக்கு உதவும் வகையில் தொகுதி முழுவதும் இலவச இணைய வசதியை ஏற்படுத்தித் தந்துள்ளார். தொகுதிக்கென பிரத்யேக செல்போன் செயலியை உருவாக்கி, தொகுதி மக்களின் பிரச்சினைகளை உடனுக்குடன் தெரிந்துகொண்டு விரைந்து நடவடிக்கை எடுத்து அவற்றுக்கு உடனுக்குடன் தீர்வு காண்கிறார். இதனால் குடிநீர், மின்சாரம், கழிவுநீர் அடைப்பு போன்ற அத்தியாவசிய தேவை தொடர்பான பிரச்சினைகள் உடனுக்குடன் தீர்வு காணப்படுவதால், தொகுதி மக்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.

மெரினா நடைபாதை: மாற்றுத்திறனாளிகள் மெரினா கடற்கரையில் கடலுக்கு அருகில் சென்று கடலைக் கண்டு ரசிக்கும் வகையிலான தற்காலிக சிறப்பு நடைபாதையை நிரந்தர பாதையாக அமைக்கவேண்டும் என்று பட்ஜெட் கூட்டத்தொடரின்போது இவர் வைத்த கோரிக்கையை முதல்வர் ஏற்றுக்கொண்டு நிறைவேற்றித் தந்தார். அந்த நடைபாதையையும் உதயநிதி ஸ்டாலினே திறந்தும் வைத்தார்.

பக்கிங்காம் கால்வாய் சீரமைப்புப் பணி: அடையாறு – கூவம் ஆறுகளை இணைக்கும் பக்கிங்ஹாம் கால்வாய் இவரின் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் சுமார் 3.5 கிலோ மீட்டர் பயணிக்கிறது. அதன் கரைகளின் இருபுறங்களும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் கால்வாய் மாசடைந்து கழிவுகளாக ஓடுகிறது. இந்தக் கால்வாயைத் தூர்வாரி சுத்தப்படுத்தி கரைகளை அழகுபடுத்தித் தொடர்ந்து அவற்றைச் சுகாதாரமாகப் பராமரிக்கும் பணியில் சென்னை மாநகராட்சி-குடிநீர் வடிகால வாரியம் -நீர்வளத்துறை- மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் என பல்வேறு துறைகளை ஒருங்கிணைக்கும் பணியையும் திறம்பட மேற்கொண்டு வருகிறார்.

செஸ் ஒலிம்பியாட்: ‘எல்லோருக்கும் எல்லாம்’ என்ற திராவிட மாடல் அரசின் நோக்கத்தை மனதில்கொண்டு தன் தொகுதிப் பணி ஒவ்வொன்றிலும் முத்திரை பதித்து முன்மாதிரி சட்டமன்ற உறுப்பினராகச் செயல்பட்டு வருகிறார். இன்றைய இளம் தலைமுறையைப் பிரதிபலிக்கக்கூடிய உதயநிதி ஸ்டாலின் , தமிழ்நாட்டின் பெருமைமிகு முன்னெடுப்பான ‘செஸ் ஒலிம்பியாட்’ குழுவில் இடம்பெற்றுக் குறிப்பிடத்தகுந்த வகையில், பல பணிகளை ஒருங்கிணைத்து பாராட்டைப் பெற்றார்.

திராவிட மாடல் பயிற்சி பாசறை: மக்கள் பணியைப்போலவே கட்சிப் பணிகளிலும் தன் முத்திரையைப் பதித்து வருகிறார் உதயநிதி ஸ்டாலின். ‘ஆட்சிக்கு வந்தால் கட்சியைக் கைவிட்டுவிடுவார்கள்’ என்ற வழக்குமொழிக்கு மாற்றாகக் கட்சியின் கொள்கைகளை, போராட்ட வரலாற்றை, அதன் மூலம் தமிழ்நாடு பெற்ற பலன்களை இளைஞர் அணியின் அனைத்து உறுப்பினர்களுக்கும் கொண்டு சேர்க்கும் வகையில், ‘திராவிட மாடல் பயிற்சிப் பாசறை’யைத் தொகுதிவாரியாக நடத்தி முடித்துள்ளார்.

முன்னோடிகளுக்கு பொற்கிழி: இளைஞர்களை, இயக்கத்தை நோக்கி அழைத்து வர ‘பாசறை’ போன்ற கொள்கை பரப்பும் பணிகள் ஒருபுறம் என்றால், கட்சியின் வளர்ச்சிக்கு உழைத்த முன்னோடிகளை கவுரவித்து உதவிடும் வகையில், 'இனி நான் எந்த மாவட்டத்திற்குச் சென்றாலும் அங்கு முன்னோடிகளுக்குப் பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நிச்சயம் இடம்பெறும்' என அறிவித்து அவற்றைச் செயல்படுத்தியும் வருகிறார்.

இல்லந்தோறும் இளைஞர் அணி: திராவிட மாடல் அரசின் மக்கள் நலத்திட்டங்களால் ஈர்க்கப்பட்டு கட்சியை நோக்கி வரும் இளைஞர்களை வீடுவீடாக சென்று அணியில் சேர்க்கும் ‘இல்லந்தோறும் இளைஞர் அணி’ என்ற முன்னெடுப்பின் மூலம் கட்சியை அடுத்த தலைமுறையினரிடமும் கொண்டு சேர்க்கிறார்.

இவரின் கட்சிப் பணியை அங்கீகரிக்கும் வகையில், தலைவர் உள்ளிட்ட தலைமைக் கழகம் இவரை மீண்டும் இளைஞர் அணி செயலாளராகப் பணியாற்றும் வாய்ப்பை வழங்கியது. அதேபோல் மிகச்சிறப்பாக பணியாற்றிய மாவட்ட அமைப்பாளர்கள் 9 பேரை இளைஞர் அணி துணைச் செயலாளர்களாகப் பொறுப்புயர்வு வழங்கினார். அதேபோல் மாவட்ட அமைப்பாளர்-துணை அமைப்பாளர் பொறுப்புகளுக்கான இடங்களை நேர்காணல் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பையும் வெளியிட்டு, அப்பணியிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டுள்ளார்.

அமைச்சர் பொறுப்பு: இவரின் கட்சிப் பணி - மக்கள் பணிகளை அங்கீகரிக்கும் வகையில், முதல்வர் தன்னுடைய அமைச்சரவையில் இணைத்து மக்கள் பணியாற்றும் வாய்ப்பை வழங்க இருக்கிறார். அவருக்கு ஒதுக்கப்படும் துறையிலும் மிகச் சிறப்பாக பணியாற்றி மக்களின் மனங்களை வெல்வார் என்பதில் ஐயமில்லை” என்று திமுக தெரிவித்துள்ளது.

First published:

Tags: DMK, Udhayanidhi Stalin