தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனுக்கு , பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கும் இடையே வார்த்தைப் போர் நாளுக்கு நாள் நீண்டுக்கொண்டே வருகிறது. ட்விட்டரில் இருவரும் சண்டை செய்து வருகின்றனர். என் செருப்புக்கு கூட பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் சமம் இல்லை என அண்ணாமலை பதிவிட்ட ட்வீட் தமிழக அரசியல் களத்தில் அனல் கிளப்பியது.
கடந்த மாதம் தீவிரவாத தாக்குதலில் பலியான ராணுவ வீரரின் உடலுக்கு மதுரை விமானநிலையத்தில் பி.டி.ஆர் மரியாதை செலுத்தி திரும்பிய போது பா.ஜ.க-வினர் அவரது காரை மறித்து செருப்பு வீசினர். இந்த சம்பவம் தொடர்பாக ஒரு ஆடியோ பதிவு வைரலானது. அமைச்சர் கார் மீது செருப்பு வீச்சு வைத்து அரசியல் செய்ய வேண்டும் என்று பா.ஜ,க மாநில தலைவர் அக்கட்சி நிர்வாகியுடன் பேசியதாக ஆடியோ பரவியது. மிமிக்ரி செய்து அந்த ஆடியோ வெளியிடப்பட்டு இருப்பதாக சைபர் கிரைம் போலீசில் பா.ஜ.க சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஆடியோ விவகாரம் தொடர்பாக பிடிஆர் பதிவிட்ட ட்வீட்டில், "தீவிரவாத தாக்குதலில் உயிர்நீத்த தியாகியின் உடலை வைத்து விளம்பரம் தேடுவது, தேசிய கொடி பொருத்தப்பட்டுள்ள கார் மீது காலனி வீச ஏற்பாடு செய்வது போன்ற கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடும் நபர் தமிழ்ச் சமூகத்தின் சாபக்கேடு" என பதிவிட்டிருந்தார். இந்நிலையில்தான் என் செருப்புக்கு கூட பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சமம் இல்லை என அண்ணாமலை ட்வீட் செய்திருந்தார்.
Also Read: ஆளும்கட்சி பெண் எம்எல்ஏவை கன்னத்தில் அறைந்த கணவர்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ
இந்த நிலையில் திமுக அதிகாரப்பூர்வ நாளேடானா முரசொலி, அண்ணாமலையை கடுமையாக விமர்சித்துள்ளது. “ இந்தியாவின் ஆளும் கட்சி ஒரு அரசியல் தற்குறியை தமிழகத்தில் தங்கள் கட்சியின் தலைவராக்கி அந்தப் பேர்வழி தான்தோன்றித் தனமாக உளறித் தமிழக அரசியலை சாக்கடையாக்கி அதிலே குதித்து மகிழ எண்ணுகிறார். குருவித் தலையில் பனங்காய் போல அவர் தலையில் ஏற்றப்பட்டிருக்கும் பதவிக்காவது மதிப்பளித்து பேச வேண்டும்!
நேரு, காமராசர், ராஜாஜி, சிலம்புச் செல்வர் ம.பொ.சி, ஈ.வி.கே.சம்பத், இந்திராகாந்தி , எம்.ஜி. ஆர். போன்ற அரசியல் ஆளுமைகளோடு அரசியல் நடத்திய முரசொலி இப்படிப்பட்ட அரைக்கால் வேக்காட்டு அரசியல் பேர்வழிகளுக்காகவும். ஒரு சில பக்கங்களை ஒதுக்கிட வேண்டி வந்து விட்டதே என்று காலக் கொடுமையை எண்ணி தனது நிலைக்காக வருந்திக் கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் தங்களைத் தேர்ந்த அரசியல்வாதிகளைப் போல போலி முகமுடி அணிந்து உலவும் இத்தகைய பேர்வழிகளின் முகத்திரையை கிழிக்க வேண்டியது தமிழ் நாட்டுக்கு செய்திட வேண்டிய கடமை என்பதை உணர்ந்து அந்தக் காரியத்திலும் ஈடுபட்டு வருகிறது.
“புலி வேட்டைக்கு செல்பவன் இடையிலே சாக்கடையில் உழன்றிடும் பன்றிகள் மீது கவனம் செலுத்தக்கூடாது” என்ற தமிழினத் தலைவரின் அறிவுரையை ஏற்று நடைபோடும் இயக்கம். இதன் மீது சாக்கடைச் சதிகளை வீசி திசை திருப்ப நினைக்கும் தமிழ் நாட்டு பா.ஜ.க. தலைவர் ‘ஊருக்கு புது' என்பதால் உளறல் அரசியலை விடுத்து. தமிழக அரசியலைத் தெளிவாகப் படித்து பின்னர் இங்கு அரசியல் நடத்த முன்வரட்டும். சாக்கடை அரசியல் செய்ய நினைந்தால் சல்லடைக் கண்களாக துளைத்து எடுத்துவிடும் தி.மு.க என்பதை உணரட்டும்” எனக் கடுமையாக விமர்சித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Annamalai, DMK, Minister Palanivel Thiagarajan, Murasoli