Home /News /tamil-nadu /

திமுகவில் புதிய பொதுச்செயலாளர், பொருளாளர் ரெடி

திமுகவில் புதிய பொதுச்செயலாளர், பொருளாளர் ரெடி

அண்ணா அறிவாலயம்

அண்ணா அறிவாலயம்

திமுகவின் பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகிய உயர் பதவிகளிலும் அதன் முக்கியத் தலைவர்களுள் இருவர் நிரப்பப் போகிறார்கள் என்பது உறுதியாகியுள்ளது.

பேராசிரியர் அன்பழகன் பொதுச்செயலாளராக இருந்த நிலையில் மார்ச் மாதம் உடல்நலக் குறைவால் காலமானார். அந்த இடம் காலியாக இருந்ததையடுத்து பொதுச் செயலாளர் என்ற பதவியைப் பிடிப்பதில் பலரும் தீவிரம் காட்டினர். இதற்காகவே துரைமுருகன் தன்னுடைய பொருளாளர் பதவியை ராஜினாமா செய்தார்.

பொதுச் செயலாளர் பதவி என்பது திமுகவைப் பொறுத்தவரையில் மிகவும் பலம் வாய்ந்த அதிகாரமிக்க பதவி. ஏற்கனவே பேரறிஞர் அண்ணா, நாவலர் நெடுஞ்செழியன் அதன்பிறகு பேராசிரியர் அன்பழகன் ஆகியோர் அந்தப் பொறுப்பில் இருந்தனர். நான்காவது பொதுச்செயலாளராக துரைமுருகனைத் தேர்வு செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Also read: புதுச்சேரியில் 2 ஆண்டுகளாக நடத்தப்படாத காவலர் பணியிட தேர்வு - மாணவர் கூட்டமைப்பினர் நூதன போராட்டம்

இதற்கான தேர்தல் வரும் 9ம் தேதி நடைபெற இருப்பதாக திமுக அறிவித்துள்ளது. இந்த நிலையில் விருப்ப மனுக்கள் இன்று விநியோகிக்கப்பட்டன. ஆனால் யாரும் வாங்க வரவில்லை. இதன் காரணமாக போட்டியின்றி ஒருமனதாக திமுகவின் புதிய பொதுச்செயலாளர் என்ற அந்தஸ்தை துரைமுருகன் அலங்கரிக்க போகிறார் என்பது வெட்டவெளிச்சமாகத் தெரியவந்திருக்கிறது.

இந்நிலையில், பொருளாளர் பதவியைப் பிடிப்பதில் பலரும் போட்டி போடுவதாக தகவல்கள் வெளியாகின. திமுகவின் பொருளாளர் பதவியில் கோவிந்தசாமி, எம்ஜிஆர், சாதிக் பாட்சா, கருணாநிதி,  ஆற்காடு வீராசாமி, ஸ்டாலின், துரைமுருகன் என மிகப் பெரிய ஆளுமைகள் இருந்துள்ளனர். அந்த வரிசையில் தற்போது டி.ஆர்.பாலு, கனிமொழி, ஆ.ராசா, ஏ.வ.வேலு ஆகியோரது பெயர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்து வந்தன.



இந்தச் சூழலில் இன்று காலை கனிமொழியைத் தொடர்புகொண்டு நாம் கேட்டபோது, தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறேன் என்று தெரிவித்துவிட்டார். ஆ.ராசாவும் இதே பதிலைத்தான் தெரிவித்தார். ஏ.வ.வேலுவைத் தொடர்புகொண்டபோது இந்தப் போட்டியில் நான் கிடையாது என்னை விட்டுவிடுங்கள் என்றார்.

இப்போது டி.ஆர். பாலு மட்டுமே களத்தில் இருக்கிறார். எனவே அவரும் போட்டியின்றி பொருளாளர் பொறுப்பைப் பிடிப்பார் என்பதும் தெளிவாகத் தெரிய வந்திருக்கிறது. இதையடுத்து வரும் ஒன்பதாம் தேதி நடைபெறும் பொதுக் குழுவில் பொதுச் செயலாளராக துரைமுருகனும் பொருளாளராக டி.ஆர். பாலு அறிவிக்கப்படுவார்கள் என்று தெரிகிறது.
Published by:Rizwan
First published:

Tags: DMK, Duraimurugan, T.r.balu

அடுத்த செய்தி