தமிழகத்தில் வித்தியாசமான ஒரு அரசியல் சூழல் உள்ளதாகவும் தாங்கள் திராவிடர்கள் என்று சொல்வதாகவும், தமிழ்நாடு எனக் கூறுவதை விட தமிழகம் எனக் கூறுவதே சரியாக இருக்கும் என கிண்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் ரவி தெரிவித்திருந்தார். இது அரசியல் தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. திமுக பொருளாளர் டி.ஆர் பாலு தமிழக ஆளுநரை கண்டித்து அறிக்கை வெளியிட்டார். மேலும் இந்திய அளவில் ட்விட்டரில் தமிழ்நாடு என்ற பெயர் பேசுபொருளானது.
தற்போது ஆளுநர் பேசியதற்கு எதிராக முரசொலியில் கட்டுரை வெளியாகியுள்ளது. அதில், “இது ஆளுநர் ரவி என்ற தனி மனிதரின் கோபம் அல்ல. பாரம்பரியக் கோபம். தனது முன்னோர்களின் கோபத்தை பிரதிபலிக்க வந்திருக்கிறார். தினந்தோறும் திராவிடம் பேசுபவர் நம்மை விட, அவர்தான். திராவிடம் இல்லாமல் அவர் பேசுவது இல்லை. இது நமக்குப் பெருமையாகத்தான் இருக்கிறது என தெரிவித்துள்ளது. மேலும் திராவிடம் என்ற வார்த்தையை வைத்து ஏமாற்றுகிறோமாம்! திராவிடம் என்பது ஏமாற்றுச் சொல் அல்ல, விழிப்புணர்வுச் சொல்! திராவிடம் என்பதும் தமிழ் என்பதும் ஒற்றைப் பொருள் தரும் இரட்டைச் சொற்கள்தான். ‘‘திராவிடம் என்ற சொல்லை விடக்கூடாது என்று சொல்லி வருகிறோம். திராவிடன் என்ற சொல்லுக்கு அஞ்சுவது போல் தமிழன் என்ற சொல்லுக்கு அவன் அஞ்சுவதில்லை” (விடுதலை 22.11.1958) என்று பெரியார் எழுதினார் என்பதை மேற்காட்டியுள்ளது முரசொலி.
மேலும், “நாமும் திராவிடன் என்ற சொல்லை விடக் கூடாது என்பதையே ஆளுநர் உணர்த்திக் கொண்டே இருக்கிறார். தமிழினத்தின் உயர்வுக்கும், மேன்மைக்கும் அடித்தளமான ‘திராவிட மாடல்’ தத்துவத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது ஆட்சியியல் தத்துவமாகச் சொல்லி இருக்கிறார்கள். வளர்ச்சி என்பது பொருளாதார வளர்ச்சியாக மட்டுமல்ல; சமூக வளர்ச்சியாக இருக்க வேண்டும்.
இத்தகைய ‘திராவிட மாடல்’ வளர்ச்சியின் மீதான கோபத்தைத்தான் ஆளுநரின் பேச்சுக்கள் வெளிப்படுத்துகிறது. இப்படி எத்தனையோ பேரின் எதிர்ப்பில் வளர்ந்ததுதான் திராவிட இயக்கம்! என முரசொலி தனது கட்டுரையில் தெரிவித்துள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.