மதுரை காமராஜர் பல்கலைக்கழக விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திராவிடம், ஆரியம் தொடர்பாக பேசியதற்கு முரசொலி கண்டனம் தெரிவித்துள்ளது.
மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா சர்ச்சையில் தொடங்கி சர்ச்சையுடன் தான் முடிந்தது. கெளரவ விருந்தினராக மத்திய இணையமைச்சர் எல்.முருகனை அழைக்கப்பட்டதில் இருந்து சர்ச்சை தொடங்கியது. தமிழக அரசை கலந்தாலோசிக்காமல் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா அறிவிப்பு வெளியாகியுள்ளது, நெறிமுறைகள் மீறப்பட்டுள்ளது எனக் கூறி உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இந்நிகழ்ச்சியை புறக்கணித்தார். ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலைக்கழக வளாகத்தில் சமூகநீதி மாணவர் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் ஆளுநருக்கு கருப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விந்திய மலையை அடிப்படையாக வைத்து..
இந்த விழாவில் பேசிய தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. திராவிடம், ஆரியம் என்பது நிலம் சார்ந்த இனப்பிரிவு தான். வரலாற்றை உற்றுநோக்கினால், விந்திய மலையை அடிப்படையாக வைத்துதான், மேற்கில் இருப்பவர்களை ஆரியர்கள் என்றும், தெற்கில் இருப்பவர்களை திராவிடர்கள் என்றும் அடையாளப்படுத்தியதாக கூறினார். பின்னர் இந்தியாவை மண்டலங்களாக பிரித்து மதம், பொருளாதாரம் காரணமாக ஆங்கிலேயர்கள் பிரித்து ஆண்டதாக தெரிவித்தார்.
ஆளுநர் ஆர்.என்.ரவியின் இந்த பேச்சு மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் திமுக அதிகாராப்பூர்வ நாளேடான முரசொலி ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக முரசொலி வெளியிட்டுள்ள கட்டுரையில், “ ஆளுநர் போன்ற உயர்ந்த பொறுப்பில் இருப்பவர் அவதூறு வரலாற்றை கூச்சமில்லாமல் தொடர்ந்து சொல்லி வருவது மிகுந்த கண்டனத்துக்கு உரியது. ஒரு பட்டமளிப்பு விழாவைக் கூட ஒழுங்காக எப்படி நடத்துவது எனத் தெரியாமல் அது நடந்து முடிந்திருக்கிறது.
Also Read: எடப்பாடி பழனிசாமியின் முன்னிருக்கும் சட்டச் சிக்கல்கள், அரசியல் நெருக்கடிகள் என்னென்ன? ஓர் அலசல்
இணை- வேந்தரான உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி விழாவை புறக்கணித்திருக்கிறார். நடத்தை விதிமுறைகள் பின்பற்றவில்லை எனக் குற்றச்சாட்டு. அமைச்சரை கெளரவ விருந்தினராக அழைத்தது மிகத் தவறானது. அதனை சுட்டிக்காட்டியும் திருத்திக்கொள்ளவில்லை. வெளிப்படையாக கண்டித்தும் திருத்திக்கொள்ள முன்வரவில்லை. நாங்கள் செய்வது தான் சட்டம் என்ற போக்கே காரணம்.
நான் பேசுவதுதான் வரலாறு என்ற அடிப்படையில் ஆளுநர் பேசுகிறார். வேலூர் விழாவில் வாய்க்கு வந்ததை வரலாறாக ஆளுநர் பேசினார். திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு அப்போதே விரிவான விளக்கத்தை கொடுத்தார். திராவிடர் என்ற அடையாளம் ஆங்கிலேயர் காலத்துக்கு முந்தியது என்பதை மனு, மகாபாரத உதாரணங்களுடன் அறிக்கை வாயிலாக சுட்டிக்காட்டினார். இதனை உணர்ந்து தனது பேச்சை திரும்ப பெற்றிருக்கவேண்டும். அதை செய்யாமல் அதே கருத்தை மதுரையிலும் சொல்லி இருக்கிறார்.
Also Read: 90ல் திருநாவுக்கரசு.. 22ல் ஓபிஎஸ்... அதிமுக வரலாற்றில் 3 முறை அலுவலகத்துக்கு சீல்...
இதனை ஏன் பேசிவருகிறார் என்ற பூனைக்குட்டி மதுரையில் வெளிவந்து வந்துவிட்டது. இந்தியாவில் பிரிவினையை விதைத்தவர்கள் ஆரியர்கள் என்பது வரலாற்று அடிச்சுவடிப்பாடம் ஆகும். அதனை மாற்ற முயற்சிக்கிறார் ஆளுநர். அதற்காகத்தான் அவராக வரலாறுகளை திரித்துச் சொல்லிக்கொண்டு வருகிறார். ஆங்கிலேயர்கள்தான் எல்லாப் பிரிவினைக்கும் காரணம் என்று சொல்லி பதியவைத்துவிட்டால், ஆரியர்களை புனிதப்படுத்தி விடலாம் என்று நினைக்கிறார்” என கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: DMK, Murasoli, RN Ravi, Tamil Nadu Governor