Home /News /tamil-nadu /

இந்துக்கள் குறித்து ஆ.ராசா அப்படி என்னதான் பேசினார்.. பாஜக கோபம் ஏன்? - முழு விபரம்

இந்துக்கள் குறித்து ஆ.ராசா அப்படி என்னதான் பேசினார்.. பாஜக கோபம் ஏன்? - முழு விபரம்

 ஆ.ராசா

ஆ.ராசா

தமிழகம் தங்களுக்கு சொந்தம் என்று நினைக்கும் இந்த அரசியல் தலைவர்களின் மனநிலை மிகவும் துரதிர்ஷ்டவசமானது - அண்ணாமலை

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai [Madras], India
    திமுக துணைப் பொதுச்செயலாளரும் எம்.பியுமான ஆ.ராசா இந்துக்கள் தொடர்பாக பேசிய காணொளி பேசுப்பொருளாகியுள்ளது. இந்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, திமுக எம்.பி மீண்டும் ஒரு சமூகத்தின் மீது வெறுப்பை உமிழ்ந்ததாக தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். அதேவேளையில் திமுகவினரோ ஆ.ராசா பேசிய முழு காணொளியையும் இங்கே பதிவிடுங்கள் அப்போது தானே தெரியும் என அண்ணாமலை ட்வீட் கீழே கமெண்ட் செய்துள்ளனர்.

    ஆ.ராசா பேசியதுதான் என்ன?. விடுதலை நாளேட்டின் ஆசிரியராக திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி 60 ஆண்டுகள் நிறைவு செய்ததை முன்னிட்டு பாராட்டு விழா சென்னை பெரியார் திடலில் நடைபெற்றது. இந்த விழாவில் ஆ.ராசா பேசிய காணொளி தான் தற்போது இணையத்தில் பரவி வருகிறது.

    என்ன பேசினார் ஆ. ராசா.. திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்ற கழகமும் , விடுதலையும், முரசொலியும் இணைந்துதான் இந்த மோடியை, அமித் ஷாவை காவிக் கூட்டத்தை வீட்டுக்கு அனுப்புகின்ற அந்தக்காரியத்தைக் செய்ய வேண்டும்.
    சனாதனம், இந்துத்துவா நாம் இனிமேலும் சொல்லத்தயங்கக்கூடாது. யார் இந்து? நான் இந்துவாக இருக்க விரும்பவில்லை. என்னை ஏன் இந்துவாக வைத்திருக்கிறாய் என்று கேட்கின்ற உரிமை நமக்கு வரவேண்டும். இப்படி ஒரு மதத்தை நாம் பார்ப்பதில்லை.

    Also Read: இந்துவாக இருக்கும் வரை நீ தீண்ட தகாதவன்.. ஆ.ராசா சர்ச்சை பேச்சு.. வலுக்கும் கண்டனம்
    லிங்காயத்துகள் உச்சநீதிமன்றத்தில் மனு போடுகிறார்கள். எங்களுடைய வழிபாட்டு முறை வேறு, எங்களுடைய ஆன்மீகக் கொள்கை வேறு, எங்களை இந்துவாக ஆக்காதே என்று சொல்கிறார்கள். ஆனால், உச்சநீதிமன்றம் என்ன சொல்கிறது. கிறிஸ்துவராக இல்லையென்றால் , இஸ்லாமியராக இல்லையென்றால், நீ பார்சியாக இல்லையென்றால் நீ இந்துவாகத் தான் இருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் சொல்கிறது.

    இப்படிபட்ட கொடுமை வேறு எந்த நாட்டிலாவது உண்டா? இந்துவாக இருக்கும் வரை நீ சூத்திரன்... சூத்திரனாக இருக்கும் வரை நீ விபச்சாரியின் மகன். இந்துவாக இருக்கும் வரை நீ பஞ்சமன். இந்துவாக, இருக்கும் வரை நீ தீண்ட தகாதவன். எத்தனை, பேர் விபச்சாரியின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள். எத்தனை பேர் தீண்ட தகாதவனாக இருக்க விரும்புகிறீர்கள் என்ற கேள்வியை உரக்க சொன்னால் தான் அது சனாதனத்தை முறியடிக்கின்ற அடிநாதமாக அமையும் என்பதை விடுதலையும், முரசொலியும், திமுகவும், திராவிடர் கழகமும் எடுக்க வேண்டிய காலம் வந்துவிட்டது என்றார்.

    ஆ.ராசாவின் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “மன்னிக்கவும், இது தமிழ்நாட்டின் அரசியல் பேச்சு நிலை. திமுக எம்.பி. மீண்டும் ஒரு சமூகத்தின் மீது வெறுப்பை உமிழ்ந்து மற்றவர்களை திருப்திப்படுத்துவதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டுள்ளார். தமிழகம் தங்களுக்கு சொந்தம் என்று நினைக்கும் இந்த அரசியல் தலைவர்களின் மனநிலை மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.
    Published by:Ramprasath H
    First published:

    Tags: A Raja, Annamalai, BJP, Tamil News

    அடுத்த செய்தி