ஆளுநர் ஆர்.என்.ரவியின் குடியுரசுத் தின வாழ்த்து செய்தியில் நீட் தேர்வு, இருமொழி கொள்கை ஆகியவை குறித்து குறிப்பிட்டிருந்தார். இதனை திமுகவின் அதிகாரப்பூர்வ நாளோடான முரசொலி கடுமையாக விமர்சித்துல்லது. இது நாகாலாந்து அல்ல தமிழகம் என்றும் கூறியுள்ளது.
திமுகவின் அதிகாரப்பூர்வ நாளோடான முரசொலி கொக்கென்று நினைத்தாரோ: தமிழக ஆளுநர் ரவி என்ற தலைப்பில் இன்று கட்டுரையை வெளியிட்டுள்ளது. அதில், தமிழக ஆளுநர் பொறுப்பேற்றுள்ள ரவி, சில நேரங்களில் தனது அதிகார எல்லை மீறி செயல்படத் தொடங்கியுள்ளாரோ என எண்ணிடத் தோன்றுகிறது.
இன்றைய தமிழக ஆளுநர் ரவி, நாகாலாந்தின் ஆளுநராகப் பொறுப் பேற்றுப் பணியாற்றிய போது , நடந்து கொண்ட விவகாரங்கள் பெரும் விமர்சனத்துக்கு ஆளாகின! நாகாலாந்தின் தேசியவாத ஜனநாயக கட்சியின் தலைவர் சிங்வாங் கோன்யாக் ( Chingwang Konyak ) “ஆளுநர் ரவியின் செயல் பாடு மகிழ்ச்சி தருவதாக இருந்ததில்லை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் செயல்பாடுகளில் அவரது குறுக்கீடு அதிக மிருந்தது " - என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டியிருந்தார் .
ஆளுநர் ரவி அரசியல்வாதியாக இருந்து , அரசியல் தட்ப வெப்பங்களை உணர்ந்து, அனுபவங்கள் பல பெற்று ஆளுநர் ஆனவரில்லை ; அவர் ஒரு காவல் துறை அதிகாரியாக இருந்து , ஓய்வுக்குப் பின் கவர்னராக அமர்த்தப்பட்டவர்!
மிரட்டல் உருட்டல் பாணிகள் காவல் துறைக்குத் தேவை, பல நேரங்களில் அந்த பாணி கைகொடுக்கும் - ஆனால் அது அரசியலில் எடுபடாது என்பதை அவர் உணர்ந்திட வேண்டும் ! குடியரசு தின விழாவை ஒட்டி ஆளுநர் ரவி விடுத்துள்ள செய்தி - அவர் தனது பொறுப்புணராது தமிழக மக்களின் தன் மானத்தை உரசிப்பார்க்க நினைப்பதாகவே தோன்றுகிறது!
நீட்’டுக்கு எதிராக தமிழகச் சட்ட மன்றம் ஒரு மனதாகத் தீர்மானம் நிறைவேற்றி அதனை ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி மாதங்கள் சில கடந்தும் , அது கிடப்பிலே கிடக்கிறது ; அதன் நிலை என்ன என்று தெரியாத நிலையில், ‘ நீட் ’ வருவதற்கு முன் , இருந்த நிலையை விட ‘ நீட் ’ வந்தபின் அரசுப் பள்ளி மாண வர்களின் மருத்துவப் படிப்பு சேர்க்கை அதிகரித்துள்ளது - என்று கூறியிருக்கிறார் ! ஒட்டுமொத்தத் தமிழகமுமே (ஒருசில சங்கிகளைத் தவிர) நீட்டை எதிர்த்து நிற்கும் நிலையில் , தமிழகத்தின் சட்டப் பேரவையே அதனை எதிர்த்து ஒருமித்துத் தீர்மானம் நிறைவேற்றியுள்ள வேளையில் ; அதுவும் அவரது பரிசீலனையில் இருக்கும் கால கட்டத்தில் , ஒரு ஆளுநர் இப்படி | அறிவிப்பது - எந்த வகை நியாயம் ?
மேலும் படிக்க: இதையும் படிங்க: மாநகராட்சி உதவி பொறியாளர் மீது தாக்குதல்-திமுக எம்எல்ஏ சங்கர் மீது காவல்துறையில் புகார்
ரவி, ஆளுநர் பொறுப்பேற் றுள்ள தமிழ்நாடு , மற்ற இந்திய மாநி லங்களைப் போன்றது அல்ல; என்பதை முதலில் அவர் உணர வேண்டும் ! இந்த மண், அரசியலில் புடம் போடப்பட்ட மண் ! இங்கே குக்கிராமங்களில் வசிப்பவர்கள் கூட அரசியல் தெளிவு மிகுந்தவர்கள். ஆளுநர் ரவி எத்தகைய கருத்தையும், தெரிவிக்குமுன் தமிழகத்தைப் புரிந்து கொண்டு - அதன் வரலாற்றைத் தெளிவாகத் தெரிந்து கொண்டு கூறுவது , அவரது பதவிக்குப் பெருமை சேர்க்கும்.
ஏறத்தாழ 7 கோடி தமிழ் மக்களின் பிரதிநிதிகள் அடங்கிய தமிழகச் சட்ட மன்றம் ஒருமனதாக நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பிய தீர்மானத்தின் மீது எந்தக் கருத்தும் தெரிவிக்காது - சட்டத்தின் சந்து பொந்துகளில் பதுங்கிக் கொண்டு இருப்பது எந்தவித நியாயம் என்பதை ஆளுநர் ரவி தெரிவிக்க வேண்டும் ! ஒரு கட்சி தனது கொள்கைகளைச் சொல்லி , மக்களிடம் வாக்குப் பெற்று ஆட்சிப் பீடம் ஏறுகிறது. மக்களும் அவர் கள் எண்ணத்தை " அந்தக் கட்சி நிறை வேற்றும் ’ என்று எண்ணி வாக்களிக்கிறார்கள் ! அந்த மக்களின் எதிர்பார்ப்பை – தீர்மானமாக்கி அனுப்பும் போது , அதை ஒரு ஆளுநர் அலட்சியப்படுத்துவது என்பது , சுமார் 7 கோடி மக்களை அவமதிப்பது என்பதை உணர வேண்டும்.
ஆளுநர் மத்திய அரசின் பிரதிநிதி என்பதை ஏற்கிறோம் ; அவருடைய தலையாயக் கடமை , தான் பொறுப்பேற்றிருக்கும் மாநில மக்களின் ஒட்டுமொத்தக் கருத்தை மத்திய அரசுக்கு தெரிவித்து அவர்களுக்கு உண்மை நிலையை உணர்த்த வேண்டுமே தவிர , மத்திய அரசின் முடிவை மக்கள் மீது திணிப்பது அல்ல ; அதனை முதலில் தமிழக ஆளுநர் ரவி உணர வேண்டும். தமிழக அரசியல்வாதிகள் பல கருத்துக் களில் ஒன்றுபடுவதில்லை ; ஆனால் பல ஜீவாதார உரிமைகளில் அவர்கள் ஒன்று பட்டு நிற்பார்கள். அங்கே கட்சி வேறுபாடுகளைக் காண முடியாது , அப்படிப்பட்ட உரிமை களில் ஒன்றுதான் ' நீட் ' வேண்டாம் என்பது.
மேலும் படிங்க: பாழடைந்து போன வேலுநாச்சியார், மருது சகோதரர்களின் போர் பயிற்சிக்கூடம்
தமிழகத்தைப் பொறுத்தவரை இரு மொழிக் கொள்கைதான் ; இதிலே ஆளும் கட்சிக்கும் , எதிர்க்கட்சிக்கும் மாறுபட்ட கருத்தில்லை. பல பிரச்சினைகளில் , எதிரும் புதிருமாக இருந்தாலும் தமிழகத்தின் சில பிரச்சினைகளில் ஒட்டுமொத்தத் தமிழகமும் ஒன்றிணைந்து நிற்கும் . அதிலே ஒன்று , இருமொழிக் கொள்கை ; மற்றொன்று ' நீட் ' வேண்டாமென்பது ! ஆளுநர் ரவி இதனை உணர்ந்து – உரிய தகவலை மேலிடத்துக்குத் தந்து - ஒட்டு மொத்தத் தமிழகத்தின் உரிமைக் குரலுக்கு அங்கீகாரம் வாங்கித் தர முயற்சி செய்ய வேண்டும் ! அதனை விடுத்து இங்கே ' பெரியண்ணன் ' மனப்பான்மையோடு அரசியல் செய்ய நினைத்தால் , " கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா.
" எனும் பழங்கதை மொழியை அவ ருக்கு நினைவுபடுத்த விரும்புகிறோம்; அதாவது, இது நாகாலாந்து அல்ல; தமிழகம் என்பதை அவர் உணர்ந்திட வேண்டும் ” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: DMK, Murasoli, Tamil Nadu Governor, Tamilnadu government