• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • அரசு அதிகாரிகளின் அலட்சியப் போக்கே என்.எல்.சி விபத்துக்கு காரணம்: திமுக எம்.எல்.ஏ ராஜேந்திரன் பகிரங்க குற்றச்சாட்டு

அரசு அதிகாரிகளின் அலட்சியப் போக்கே என்.எல்.சி விபத்துக்கு காரணம்: திமுக எம்.எல்.ஏ ராஜேந்திரன் பகிரங்க குற்றச்சாட்டு

திமுக எம்.எல்.ஏ ராஜேந்திரன்

திமுக எம்.எல்.ஏ ராஜேந்திரன்

முதலமைச்சரின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள துறை சார்ந்த ஆய்வாளர்களின் அலட்சியமே விபத்திற்கு காரணம் நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் பகிரங்க குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

  • Share this:
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் இயங்கக்கூடிய என்எல்சி எனப்படும் பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் இரண்டாவது அனல்மின் நிலையத்தில் கடந்த ஜூலை ஒன்றாம் தேதி கொதிகலன் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இதில் சம்பவ இடத்திலேயே 6 தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில் 17 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் நேற்று சிவக்குமார் என்ற பொறியாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.  தொழிற்சங்கமான தொமுச, சிஐடியு மேலும் உயிரிழந்த தொழிலாளர்களின் உறவினர்கள் என ஒருங்கிணைந்து என்எல்சி நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உயிரிழந்த தொழிலாளர்களுக்கு தலா 30 லட்சம் ரூபாயும், வாரிசுக்கு நிரந்தர பணிக்கான ஆணையும், காயமடைந்த தொழிலாளர்களுக்கு இடைக்கால நிவாரணமாக 5 லட்சம் ரூபாய் என  உடன்பாடு எட்டப்பட்டு பேச்சுவார்த்தை முடிவில் வாரிசுகளுக்கு உடனடியாக பணி ஆணைகள் வழங்கப்பட்டன.

கடந்த இரண்டு ஆண்டுகளில் மூன்றாவது முறையாக அதிலும் குறிப்பாக மே மற்றும் ஜூலை என இரண்டு மாதத்தில் இரண்டு பெரும் விபத்து ஏற்பட்டு 12 தொழிலாளிகளை உயிர் பலி வாங்கிய இந்த சம்பவத்திற்கு முக்கிய காரணம் மாநில அரசின் அதிகாரிகளின் அலட்சியப் போக்கே என்று திமுக நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில் தமிழக முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுப்பணி துறையின் கீழ் செயல்படக்கூடிய கொதிகலன் ஆய்வாளர்(Inspector of boilers) மற்றும் தொழிலாளர்கள் நல ஆணையத்தின் கீழ் இயங்கக்கூடிய தொழிற்சாலை ஆய்வாளர்(Inspector of Factories) ஆகிய இரு துறையினரும் முறையாக செயல்பட வேண்டும்.

முறையாக ஆய்வுகள் மேற்கொண்டு தொழிற்சாலைகள் மற்றும் அவற்றில் பயன் படுத்தப்படும் கொதிகலனில் தன்மை, தரம் குறித்து ஆய்வுகள் மேற்கொண்டு தரச்சான்று முறையாக வழங்கி இருந்தால் இதுபோன்ற ஒரு துயர சம்பவம் நடைபெற்று இருக்க வாய்ப்பில்லை என நெய்வேலி சட்டமன்றத் தொகுதி என்ற முறையில் பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.

மத்திய அரசு கட்டுப்பாட்டின் கீழ் இயங்கக்கூடிய பொதுத்துறை நிறுவனமாக இந்த என்எல்சி நிறுவனம் இருந்தாலும் மாநில அரசின் அதிகாரிகள் தான் இதற்கான தரச்சான்று மற்றும் ஆய்வுகளை மேற்கொள்ளும் அதிகாரம் படைத்தவர்கள் என்பதால் இனி வரும் காலத்திலாவது கடமை உணர்வோடு செயல்பட்டு தொழிலாளர்களின் உயிர் பாதுகாப்பிற்கு வழிவகுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vijay R
First published: