சென்னையில்
மழைநீர் தேங்கி மக்கள் அவதிப்படுவதற்கு
திமுக அரசே காரணம் என்று
குற்றம் சாட்டியுள்ள
எடப்பாடி பழனிசாமி, இனியாவது போர்க்கால அடிப்படையில் அரசு செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மழையால் பாதிக்கப்பட்ட சென்னையின் டி.நகர், மயிலாப்பூர், கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளை அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி இன்று பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது-
சென்னையில் மழை நீர் தேங்கியுள்ள தாழ்வான பகுதிகளை நான் பார்வையிட்டேன். அப்பொழுது 4 இடத்தில்தான் மின் மோட்டார்களை வைத்து தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றி கொண்டிருக்கிறார்கள். மற்ற எந்த இடத்திலும் நீரை வெளியேற்றும் பணி நடைபெறவில்லை.
முதலமைச்சர் தொகுதியான கொளத்தூரில் பெரும்பாலான இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. அதனை வெளியேற்ற எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கழிவுநீர் மழைநீருடன் சேர்ந்திருக்கிறது. கொளத்தூர் பகுதி மக்களுக்கு தேவையான குடிநீர் வசதிகள் இல்லை. மின்சார வசதி இல்லை. பால் மற்றும் சாப்பாடு கிடைக்காத அவல நிலை ஏற்பட்டிருக்கிறது. இனியாவது துரிதமாக போர்க்கால அடிப்படையில் திமுக அரசு செயல்பட வேண்டும். கொளத்தூரில் தேங்கிக்கிடக்கும் மழை நீரால் டெங்கு பரவும் அபாயம் இருக்கிறது.
திமுக அரசு திட்டமிட்டு செயல்படவில்லை. இதனால்தான் சென்னையில் மழை நீர் தேங்கி கிடக்கிறது. கடந்த 6 மாத காலமாக திமுக ஆட்சிதான் நடந்து இருக்கிறது. அவர்கள் இதைச் செய்தேன் அதைச் செய்தேன் என்று சொல்கிறார்கள். ஆனால் சென்னை நகரத்தில் எங்கேயும் கழிவு நீர்க்கால்வாய்கள் முழுமையாக தூர்வாரப்படவில்லை. முழுமையாக தூர்வாரப்பட்டு இருந்தால் நல்ல வடிகால் வசதி செய்யப்பட்டு இருந்தால் இன்றைக்கு மழைநீர் தேங்கி இருக்காது. கிட்டத்தட்ட 160 பொறியாளர்களை சென்னை மாநகராட்சியிலிருந்து வேறு மாநகராட்சிக்கு இடம் மாற்றம் செய்துள்ளனர். இங்கு அனுபவம் இல்லாத புதிய பொறியாளர்கள் இருந்துள்ளனர். அவர்களுக்கு எங்கு தண்ணீர் தேங்கி கிடக்கிறது என்ற விவரம் தெரியவில்லை. அவர்களுக்கு எப்படி இந்த நீரை வெளியேற்றுவது என்பது குறித்து தெரியவில்லை.
அரசின் காழ்ப்புணர்ச்சி காரணமாக பொறியாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டதால் சென்னையில் தண்ணீர் தேங்கி கிடக்கிறது. இதற்கு முழு காரணம் திமுக அரசின் நிர்வாக திறமையின்மை. ஸ்டாலின் அவர்கள் 5 ஆண்டுகள் சென்னை மேயராக இருந்தார். அதற்குப் பிறகு திமுகவின் மா. சுப்பிரமணியனும் மேயராக இருந்தார். அத்துடன் ஸ்டாலின் அவர்கள் துணை முதல்வராக இருந்து உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தார். அப்போதே சரியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதன் பின்னர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியின்போது மழைநீர் வெளியேற நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்பின்னர் எனது 4 ஆண்டுகால ஆட்சியிலும் நான் நடவடிக்கை எடுத்தேன். திறமை இல்லாத திமுக அரசால் 200க்கும் மேற்பட்ட இடங்களில் தண்ணீர் தேங்கி காணப்படுகிறது. இதனை சரிசெய்ய முடியாத திமுக அரசு எங்கள் மீது பழியைக் கூறி தப்பிக்க பார்க்கிறது.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.