பாஜகவில் இணைந்த இரண்டாவது திமுக எம்.எல்.ஏ! - கு.க.செல்வத்தையடுத்து திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ சரவணனும் பாஜகவில் இணைந்தார்!

பாஜக தலைவர் முருகனுடன் சரவணன் எம்.எல்.ஏ

திருப்பரங்குன்றம் தொகுதியில் மீண்டும் போட்டியிட மருத்துவர் சரவணன் விருப்ப மனு கொடுத்த நிலையில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பரங்குன்றம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

  • Share this:
திமுக திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சரவணன் சென்னையில் பாஜக மாநிலத் தலைவர் முருகன் தலைமையில் பாஜகவில் இணைந்தார்.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதியின் திமுக சிட்டிங் எம்.எல்.ஏவாக இருந்து வருபவர் மருத்துவர் சரவணன். பொருளாதார ரீதியில் பின் தங்கியிருப்போருக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளிப்பதாலும், சமூக சேவையிலும் ஈடுபட்டு மக்களிடையே நன்மதிப்பை பெற்றவர்.

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மருத்துவர் சரவணனுக்கு இம்முறை சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. திருப்பரங்குன்றம் தொகுதியில் மீண்டும் போட்டியிட விருப்ப மனு கொடுத்த நிலையில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பரங்குன்றம் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மருத்துவர் சரவணன் திமுக மூத்த தலைவர்களிடையே அபிமானத்தை இழந்ததாலும், அத்தொகுதில் கோஷ்டி மோதல் ஏற்படுவதை தவிர்க்கும் வகையிலும் இந்த முறை திருப்பரங்குன்றம் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வலுக்கட்டாயமாக கொடுக்கப்பட்டிருப்பதாக தகவல் தெரிந்த வட்டாரங்கள் கூறுகின்றனர்.

வாய்ப்பு கிடைக்காத அதிருப்தியை சரவணன் பத்திரிகையாளர்களிடையே வெளிப்படுத்திய நிலையில் இன்று அவர் பாஜகவில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் தி.நகரில் உள்ள பாஜக தலைமையகமான கமலாலயத்திற்கு வருகை தந்த சரவணன் தமிழக பாஜக தலைவர் முருகன் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.

ஏற்கெனவே, சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கு.க. செல்வம் அதிகாரப்பூர்வமாக பா.ஜ.கவில் தன்னை இணைத்துக் கொண்டார். தற்போது சரவணன் எம்.எல்.ஏவும் பாஜகவில் இணைந்துள்ளதால் திமுகவில் இருந்து பாஜகவில் இணைந்த சிட்டிங் எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 2ஆக உயர்ந்துள்ளது.

முதலில் மதிமுகவில் இருந்த சரவணன், பின்னர் பாஜகவிலும், அங்கிருந்து திருகவிற்கும் தற்போது மீண்டும் பாஜகவிலேயே இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Published by:Arun
First published: