கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபடத் தேர்தல் ஆணையம் அனுமதி - தொண்டர்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்

கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபடத் தேர்தல் ஆணையம் அனுமதி - தொண்டர்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்

சட்டமன்றத் தேர்தலில் கழகத்தின் சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட்டோர் தேர்தல் நடத்தை விதி முறைகள் காரணமாக இப்பணியில் ஈடுபட முடியாத நிலை இருந்தது.

  • Share this:
    தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று இன்று ஒருநாளில் 10 ஆயிரத்தை கடந்தது. அதேபோல் இன்று ஒருநாளில் கொரோனா நோத்தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக அதிகரித்துள்ளது.

    தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் அரசியல் கட்சியினர் மக்களுக்கு தேவையான பணிகளில் முன்னெடுப்பதில் சில சிக்கல்கள் உள்ளன. இந்நிலையில் திமுக மக்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற்றுள்ளது.

    இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா தொற்றின் முதலாவது அலையின் போது ஒன்றிணைவோம் வா என்ற மாபெரும் மக்கள் இயக்கம் மூலம் மனித நேயப் பணிகளை திமுக ஆற்றியது. இரண்டாவது அலை துவங்கியவுடனும் கழகத்தினர் அனைவரும் பணியாற்றிட வேண்டும் என ஏற்கனவே கேட்டுக் கொண்டதன் பேரில் மாநிலம் முழுவதும் கழக மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் கபசுரக் குடிநீர் வழங்குதல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவதை நானறிவேன்.

    இந்நிலையில் சட்டமன்றத் தேர்தலில் கழகத்தின் சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட்டோர் தேர்தல் நடத்தை விதி முறைகள் காரணமாக இப்பணியில் ஈடுபட முடியாத நிலை இருந்தது. ஆகவே, கழக மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் அமைப்புச் செயலாளர் ஆலந்தூர் பாரதி அவர்கள் மூலம் தேர்தல் ஆணையத்திடம் இதற்குக் கழகத்தின் சார்பில் அனுமதி கோரப்பட்டது.

    திமுக-வின் கோரிக்கையை ஏற்று - கொரோனா தடுப்புப் பணியின் ஓர் அங்கமாக கபசுரக் குடிநீர் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட ஆட்சேபணை இல்லையெனத் தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியிருப்பதால் கழகத்தின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களும், வேட்பாளர்களாக இருக்கும் மாவட்டச் செயலாளர்களும் கபசுரக் குடிநீர் வழங்கும் பணியில் முழு மூச்சாக ஈடுபட்டு கொரோனா இரண்டாவது அலையிலிருந்து மக்களைக் காப்பாற்றிடத் தீவிரப் பணியாற்றிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    அவ்வாறு கபசுரக் குடிநீர் வழங்கும் போது- அந்த நிகழ்ச்சி நடைபெறும் இடம் உள்ளிட்ட விவரங்களைச் சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்குக் கழக வேட்பாளர்கள் அனைவரும் உரிய வகையில் தெரிவித்து- அரசு அறிவுறுத்தியுள்ள தனிமனித இடைவெளி, முகக் கவசம் உள்ளிட்ட கொரோனா தடுப்பிற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை முறையாகக் கடைப்பிடித்து- பொது மக்கள் அனைவருக்கும் கபசுரக் குடிநீர் வழங்கிட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Ramprasath H
    First published: