முகப்பு /செய்தி /தமிழ்நாடு / MK Stalin | 50 ஆண்டு கால அரசியல் நீட்சியாக தமிழக முதலமைச்சராகிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

MK Stalin | 50 ஆண்டு கால அரசியல் நீட்சியாக தமிழக முதலமைச்சராகிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

திமுகவில் வட்ட பொறுப்பாளராக இருந்து அக்கட்சியின் தலைவராக உயர்ந்தது வரை, 50 ஆண்டு கால அரசியல் நீட்சியாக மு.க.ஸ்டாலின் முதலமைச்சராகிறார் . ஸ்டாலின் ஆகிய நான்… என்று இன்னும் சில நாட்களில் தமிழக முதலமைச்சராக பதவியேற்கிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :

மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி. தயாளு அம்மாள் தம்பதிக்கு 1953-ம் ஆண்டு மார்ச் ஒன்றாம் தேதி மூன்றாவது குழந்தை பிறந்தது. அப்போதைய ரஷ்ய அதிபர் ஸ்டாலின் இறந்ததை அடுத்து, சென்னையில் அவருக்கு இரங்கல் கூட்டம் நடைபெற்றது. அவரின் நினைவாக, 4 நாட்களுக்கு முன்பு, தனக்கு பிறந்த மூன்றாவது குழந்தைக்கு ஸ்டாலின் என பெயர் சூட்டுவதாக அறிவித்தார் கருணாநிதி… அவர் தான் இன்று, தமிழகத்தின் முதலமைச்சராக முடிசூடுகிறார்.

சென்னை சேத்துப்பட்டில் உள்ள கிறிஸ்தவக் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில், பள்ளிப் படிப்பை நிறைவு செய்து, விவேகானந்தா கல்லூரியில் பி.யூ.சி.யும், மாநிலக் கல்லூரியில் கல்லூரிப் படிப்பையும் முடித்தார். தந்தை கருணாநிதியின் அரசியல் வாரிசு என்பதை நிரூபிக்கும் வகையில், இளம் வயதிலேயே நாடகக் கலை மற்றும் அரசியலில் ஆர்வம் கொண்டிருந்தார் ஸ்டாலின். தமிழகத்தில் திமுக முதல்முறையாக 1967-ல் ஆட்சியைப் பிடித்தும், அன்றைய காலகட்டத்தில் 14 வயது மாணவராக இருந்த ஸ்டாலின் அரசியலுக்கு அச்சாரம் போடத் தொடங்கினார்.

தனது நண்பர்களுடன் சேர்ந்து, கோபாலபுரம் பகுதியில் இளைஞர் திமுக என்ற அமைப்பை ஏற்படுத்தி தலைவர்களின் பிறந்தநாளை கொண்டாடுவது, பொதுமக்களுக்கு சேவை செய்வது என அப்போதே களப்பணியில் ஈடுபடத் தொடங்கினார். 1968-ல் நடைபெற்ற சென்னை மாநகராட்சித் தேர்தலில் திமுக-வுக்காக மைக் பிடித்து, பிரசார களம் கண்டார். அதை தொடர்ந்து, சென்னை 75-வது வட்ட திமுக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டதன் மூலம், முதல் கட்சிப் பதவி அவரைத் தேடி வந்தது.

1973-ல் திமுக பொதுக்குழு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்டாலின், அடுத்த மூன்று ஆண்டுகளில் கட்சித் தலைவர்களின் கவனத்தை ஈர்த்தார்.மத்தியில் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியின் அவசரநிலை கொண்டு வரப்பட்ட போது, 1976-ல் `மிசா’ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஓராண்டு காலம் சிறை வாசம் கண்டார் ஸ்டாலின். 1980-ல் திமுக-வின் இளைஞரணி தொடங்கப்பட்ட போது, அதன் ஏழு அமைப்பாளர்களில் ஒருவராக ஸ்டாலினும் இடம்பெற்றார்.

மாவட்ட, ஒன்றிய, நகர அளவில் இளைஞரணிக்கு என்று ஒரு அமைப்பு கட்டமைத்தார். இதனால், அடுத்த மூன்று ஆண்டுகளில், 1983 இறுதியில் திமுக-வின் மாநில இளைஞரணி செயலாளரர் பொறுப்பு வழங்கப்பட்டது. 1984-ல் முதல் முறையாக போட்டியிட்ட சட்டப்பேரவை தேர்தலில் தோல்வியை சந்தித்தார் மு.க.ஸ்டாலின்.

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு தொடக்கத்திலேயே சறுக்கலை சந்தித்தார்.

அதே தொகுதியில் மீண்டும் போட்டியிட்ட போது, 1989-ல் வெற்றிபெற்றார். ஆனால், 1991 தேர்தலில் அதே ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இதையடுத்து, 1996-ல் நடைபெற்ற சென்னை மேயர் தேர்தலில் ஸ்டாலின் வெற்றிபெற்றார். அப்போது, பஞ்சாயத்துராஜ் சட்ட திருத்தத்துக்குப் பின் நடைபெற்ற தேர்தல் என்பதால் `முதல் முறை மக்களால் நேரடியாக வாக்களித்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரானார்.

ஸ்டாலின் மேயராக இருந்தபோது “சிங்காரச் சென்னை” ஆக மாற்றுவேன் என்ற உறுதிமொழியுடன், 9 மேம்பாலங்கள், 49 சிறியபாலங்கள் மற்றும் நகரின் முக்கிய பகுதிகளில் பூங்காக்கள், நீரூற்றுகள், மெரினா கடற்கரையை அழகுபடுத்தி, சாலை விரிவாக்கம் செய்து சென்னையின் சிற்பி என போற்றும்படி தனக்கு கிடைத்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொண்டு, அரசியல் கடலில் நங்கூரம் பாய்ச்சி தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.

ஆனால், 2001-ல் மீண்டும் சென்னை மேயராக போட்டியிட்டு இரண்டாவது முறை வெற்றிபெற்ற போதும், அதில் நீடிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. அப்போதைய அதிமுக அரசு 2002-ல் கொண்டுவந்த சட்டத் திருத்தத்தில், ஓரே நபர் இரு அரசுப் பதவிகளில் இருக்க முடியாது என கூறப்பட்டது. இதனால், எம்எல்ஏ பதவியை வைத்துக்கொண்டு மேயர் பதவியை ராஜினாமா செய்தார் ஸ்டாலின்.

ஆயிரம் விளக்கு தொகுதி மக்களின் பெரும் ஆதரவுடன் 1996, 2001 மற்றும் 2006-ம் ஆண்டு தேர்தலில் அடுத்தடுத்து வாகை சூடினார். குறிப்பாக 2006-ல் திமுக ஆட்சிக்கு வந்தபோது உள்ளாட்சித்துறை அமைச்சர் பதவியை அலங்கரித்தார். 2008-ல் திமுக-வின் பொருளாளராக பொறுப்பேற்ற ஸ்டாலின், 2009-ல் தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டார். தமிழக அரசியல் வரலாற்றில் துணை முதலமைச்சர் ஒருவர் நியமிக்கப்பட்டது அதுவே முதல் முறையாகும். 2011 தேர்தலில் திமுக படுதோல்வியை சந்தித்து எதிர்க்கட்சியாக கூட வர முடியாதபோதும், சென்னை கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் வெற்றிபெற்றார்.

2016 தேர்தலில் மீண்டும் அதிமுக அரியணை ஏறியதால், 89 சட்டப்பேரவை உறுப்பினர்களுடன், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரானார் ஸ்டாலின். 2017-ல் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையை கருத்தில்கொண்டு பொதுக்குழுவின் மூலம் அக்கட்சியின் செயல் தலைவரானார். 2018-ல் கருணநிதியின் மறைவுக்குப் பிறகு, திமுக தலைவராக ஸ்டாலின் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

2019 நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் கீழ், தமிழகத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை உருவாக்கி, அதற்கு தலைமையேற்றார் மு.க.ஸ்டாலின். தமிழகத்தில், கருணாநிதி, ஜெயலலிதா என்ற இருபெரும் ஆளுமைகள் இன்றி நடைபெற்ற தேர்தலில், திமுக கூட்டணி 39 இடங்களில் 38-ல் வாகை சூடியது. சட்டப்பேரவை இடைத்தேர்தலில் 21 இல் 12 இடங்களுடன், 52 சதவீத வாக்கு வங்கியையும் பெற்றது.

திமுக தலைவராக பொறுப்பேற்ற பின்னர் ஸ்டாலின் பெற்ற முதல் வெற்றியாக அது பதிவானது. நடந்து முடிந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.ஸ்டாலின் தான் வராரு… விடியல் தரப் போறாரு… என்ற முழக்கத்துடன் சூறாவளிபிரசாரம் மேற்கொண்டார்.

2011 மற்றும் 2016-ஐ தொடர்ந்து, தற்போதும் கொளத்தூர் மக்களின் பேராதரவுடன் ஹாட்ரிக் வெற்றிபெற்று, முதலமைச்சரின் தொகுதி என்ற பெருமையை அத்தொகுதி மக்களுக்கு வழங்கியுள்ளார்.

அத்துடன், சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி பெரும்பான்மை பலத்துடன் அரியணையை பிடித்துள்ளது. திமுகவில் வட்ட பொறுப்பாளராக களப்பணியாற்றி, மாவட்ட பிரதிநிதி, பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர் என படிப்படியாக உயர்ந்து கட்சியில் தலைவராக உச்சம் தொட்டார்.

top videos

    பதின்ம வயதின் தொடக்கத்தில் அரசியல் களப்பணி கண்ட மு.க.ஸ்டாலின், 50 ஆண்டுகால பொது வாழ்வில் தன்னை அர்ப்பணித்து முதலமைச்சர் நாற்காலியை அலங்கரிக்கரிக்கிறார்.

    First published:

    Tags: MK Stalin, TN Assembly Election 2021