Home /News /tamil-nadu /

கை ரிக்சா ஒழிப்பு முதல் சமத்துவபுரம் வரை.. நவீன தமிழகத்தின் தந்தை கருணாநிதி

கை ரிக்சா ஒழிப்பு முதல் சமத்துவபுரம் வரை.. நவீன தமிழகத்தின் தந்தை கருணாநிதி

கருணாநிதி

கருணாநிதி

அரைநூற்றாண்டு கால தமிழ்நாட்டு அரசியலின் மையப்புள்ளியாக இருந்த கருணாநிதியை நவீன தமிழகத்தின் தந்தை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வர்ணித்தது பொருத்தமானதே.

  மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாளான இன்று, அவர் தமிழகத்தில் வகுத்த திட்டங்கள்.

  தன் சிந்தனையால், நிர்வாகத்திறனால், எளிய மனிதர்களின் மீதான அக்கறையால், தீட்டிய திட்டங்களால் தமிழ்நாட்டின் முகத்தை மாற்றியமைத்த தலைவர் மு. கருணாநிதி. தமிழ்நாட்டின் முதலமைச்சராக முதல்முறை பதவியேற்றபோதே சமூகநீதிக்கான விதையை ஆழ ஊன்றியவர் கருணாநிதி. ஆம், அதுவரை வழக்கில் இருந்த மனிதனை மனிதனே இழுத்துச்செல்லும் கை ரிக்ஷா முறைக்கு முடிவு கட்டினார். பிறகு,குடிசை மாற்று வாரியத்தையும் உருவாக்கினார்.

  சமூகநீதிக் கருத்துக்களை சுவாசித்த அவர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவை உருவாக்கியதோடு, இஸ்லாமியர்களுக்கும், அருந்ததியர் சமுதாயத்தினருக்கும் உள் ஒதுக்கீட்டை வழங்கி லட்சக்கணக்கான மக்களின் வாழ்வில் ஒளியேற்றி வைத்தார்.

  கடைக்கோடி மனிதனுக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்பதை நோக்கமாக கொண்ட அவர், மாணவர்களுக்கு இலவச பஸ்பாஸ் வழங்கி கிராமப்புற மாணவர்களை மேற்படிப்புகளுக்கு செல்ல ஊக்குவித்தவர். மேலும் உயர்கல்விக்கான நுழைவுத்தேர்வை நீக்கி கிராமப்புற ஏழை எளிய மாணவர்களுக்கான படிப்பிற்கு கதவுகளை திறந்து விட்டார்.

  Also Read: கலைஞர் கருணாநிதி திரையில் நடத்திய சொல் வீச்சு!

  தமிழ்நாட்டில் தனியாரிடம் இருந்த பேருந்து போக்குவரத்தை நாட்டுடமையாக்கிய அவர், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தை உருவாக்கியதுடன் குக்கிராமங்களுக்கும் மினிபஸ்களை இயக்கி தொடர்புவசதியை பெருக்கினார்.சின்னஞ்சிறு கிராமத்திற்கும் இலவச மின்சாரம் வழங்கியதோடு மட்டுமல்ல, இந்தியாவிலேயே முதல் முறையாக விவசாயிகளுக்கு இலவச மின்சார திட்டத்தை அளித்த பெருமையும் கருணாநிதியையே சேரும்.

  தமிழ்நாடு முழுவதும் உழவர் சந்தைகளை திறந்து, இடைத்தரகரின்றி விவசாயிகள் தாங்கள் விளைவித்த உணவுப்பொருட்களை தாங்களே விற்பனை செய்ய வழிகாட்டினார்.மூன்றாம் பாலினத்தவர்களுக்கு திருநங்கைகள், திருநம்பிகள் என பெயர் சூட்டியதோடு நிற்காமல், திருநங்கைகளுக்கான நலவாரியம் அமைத்தது, ஊனமுற்றோர் என்ற சொல்லை ஒழித்து மாற்றுத்திறனாளிகள் என அடையாளப்படுத்தி அவர்களுக்கான தனித்துறையை உருவாக்கியது என கருணாநிதியின் சாதனை பட்டியல் ஏராளம்

  மகளிர் நலனுக்காக 1989ம் ஆண்டில் இந்தியாவிலேயே முதல்முறையாக பெண்களுக்கான சொத்துரிமையை சட்டரீதியாக உறுதி செய்தார் கருணாநிதி. உள்ளாட்சி மன்றங்களில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு, அரசு பணிகளில் 30 சதவீத ஒதுக்கீடு வழங்கி அதிகார படிகளில் பெண்கள் நடைபோட வழிவகுத்தார். பெண்கள் தற்சார்புடன் வாழ வழி தந்துள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களை தமிழ்நாட்டில் உருவாக்கியவரும் அவரே...

  குமரிமுனையில் 133 அடிக்கு உயர்ந்து நிற்கும் திருவள்ளுவரின் கம்பீரமான கற்சிலையை எழுப்பிய கருணாநிதி, வள்ளுவர் கோட்டம், அண்ணா மேம்பாலம், அண்ணா நூற்றாண்டு நூலகம், கத்திப்பாரா மேம்பாலம், கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு அடிக்கல், செம்மொழி பூங்கா என தலைநகர் சென்னையை செதுக்கியவர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  தகவல் தொழில்நுட்ப துறைக்கென இந்தியாவில் முதல் முறையாக ஒரு கொள்கையை அறிவித்தவர் கருணாநிதி. மேலும் டிட்கோ, டைடல் பார்க், சிப்காட் தொழில் பூங்காக்கள் போன்றவை கருணாநிதி ஆட்சியிலேயே உருவானவையேன. சாதி, பேதமற்ற சமூகத்திற்கான இலக்குடன் தமிழ்நாடு முழுவதும் பெரியார் நினைவு சமத்துவப்புரங்களை உருவாக்கிய அவர், மாவட்டங்கள் மாத்திரம் சமத்துவப்புரங்கள் அல்ல, இந்த மாநிலமே சமத்துவபுரமாக மாற வேண்டும் என சூளுரைத்தார்.

  தாய்மொழியாம் தமிழுக்கு செம்மொழி தகுதியையைும் பெற்றுத்தந்த கருணாநிதி. செம்மொழி மாநாட்டையும் நடத்தி அசத்தியவர். அரைநூற்றாண்டு கால தமிழ்நாட்டு அரசியலின் மையப்புள்ளியாக இருந்த கருணாநிதியை நவீன தமிழகத்தின் தந்தை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வர்ணித்தது பொருத்தமானதே..

  தந்தை பெரியாரின் இறுதி கனவான அனைத்து சாதியினரும் அர்ச்சகராவதற்கான வழி செய்வதற்கான சட்டத்தை நிறைவேற்றினார். அரைநூற்றாண்டு கால தமிழ்நாட்டு அரசியலின் தலைப்பு செய்தியாக மையப்புள்ளியாக இருந்த கலைஞர் நவீன தமிழ்நாட்டையே நிர்மானித்த சிற்பி என இன்றைய தலைமுறையால் போற்றப்படுகிறார். ஆம், நவீன தமிழகத்தின் சிற்பியும் அவர்தான்... தமிழ்நாட்டின் தனித்துவமான கம்பீரமான அடையாளமும் அவர்தான்
  Published by:Ramprasath H
  First published:

  Tags: DMK, DMK Karunanidhi, Karunanidhi's memorial, MK Stalin, Politics, Tamil News, Tamilnadu

  அடுத்த செய்தி