"கூட்டணி ஒற்றுமைதான் முக்கியம்" - காங்கிரஸுக்கு ஜெ. அன்பழகன் அறிவுரை..!

ஜெ. அன்பழகன், திமுக
  • News18
  • Last Updated: February 14, 2020, 10:37 AM IST
  • Share this:
தொகுதி எண்ணிக்கையை விட கூட்டணி ஒற்றுமை தான் முக்கியம் என்று காங்கிரஸுக்கு திமுக எம்.எல்.ஏ., ஜெ. அன்பழகன் அறிவுறுத்தியுள்ளார்.

தொகுதிப் பங்கீட்டில் குறைவான தொகுதிகள் கிடைத்தால் அதை கெளரவ குறைச்சலாக நினைத்தார்களோ என்னவோ, இப்போது அதை விட மோசமாக கிடைத்துள்ளதே. தொகுதிகள் குறைவு என்ற காரணத்துக்காக கூட்டணியை முறிக்கக் கூடாது. ஒன்றுமே கிடைக்காமல் தோற்பதை விட குறைந்த தொகுதிகளில் போட்டியிடுவது பரவாயில்லைதானே, என நடைபெற்று முடிந்த டெல்லி தேர்தல் முடிவுகள் பற்றி திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ அன்பழகன் கூறியுள்ளார்.

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 8 இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாமல் படுதோல்வி அடைந்துள்ளது.


" நாம் மீண்டும் படுதோல்வியை சந்தித்துள்ளோம்.  ஆராய்ந்து பார்ப்பதை விட செயலில் ஈடுபட வேண்டிய நேரமிது. முடிவெடுப்பதில் தலைமையின் தாமதம் மாநில அளவில் உத்தி மற்றும் ஒற்றுமையின்மை,   உற்சாகம் இழந்த தொண்டர்கள், களத்தில் மக்களுடன் தொடர்பின்மை ஆகியவை தோல்விக்கு காரணம்" என்று முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் மகளும் டெல்லி மகிளா காங்கிரஸ் தலைவருமான ஷர்மிஸ்தா முகர்ஜி தெரிவித்துள்ளார்.

குஷ்பூ, " டெல்லியில் மேஜிக் நடக்கும் என எதிர்பார்க்கவில்லை. படுதோல்வியை மீண்டும் சந்தித்துள்ளோம். நாம் போதிய அளவு வேலை பார்க்கிறோமா, சரியாக செய்கிறோமா என கேட்டால் அதற்கு பதில் இல்லை என்பதுதான் " என ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் மாநிலக் கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்திக்கும் உத்தியை சரியாக காங்கிரஸ் பயன்படுத்த வேண்டும் என ஜெ. அன்பழகன் தெரிவித்துள்ளார்."மாநில கட்சி வலுவாக இருந்தால் அந்த கட்சியுடன் இணைந்து போராடுவது தான் அழகு. ஆம் ஆத்மி தங்களுடன் கூட்டணி சேர ஆரம்பத்தில் வாய்ப்பு கொடுத்தார்கள். அதை பயன்படுத்தியிருந்தால் இன்று   பாஜகவின் தோல்வி இன்னும் பெரிதாக இருந்திருக்கும் . அந்த வாய்ப்பை காங்கிரஸ் நழுவவிட்டது. மத்திய பிரதேசத்தில் மாநிலக் கட்சி வலுவாக இல்லை. அங்கு காங்கிரஸ் பாஜகவை நேரடியாக எதிர்கொள்ளட்டும். ஆனால் மாநில காட்சிகள் வலுவாக உள்ள மாநிலங்களில் அவர்களுடன் இணைந்து போராடினால் தான் பாஜகவை வீழ்த்த முடியும்.

தொகுதிப்பங்கீட்டில் கூட்டணி முறியக்கூடாது. மத்தியில் ஆட்சியை பிடிக்க வேண்டிய அகில இந்திய கட்சி காங்கிரஸ்.  ஆளுங்கட்சி பலம், அதிகார பலம், பண பலம் என பாஜக இன்று வலுவான கட்சியாக இருக்கிறது. பாஜகவை வீழ்த்த மதச்சார்பற்ற கூட்டணி முறியாமல் ஒன்றிணைந்து போராட வேண்டும். அந்த வாய்ப்பை நழுவவிடக் கூடாது. " என்றார்.

இது குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரியிடம் கேட்ட போது " நான் டெல்லியில் இருக்கிறேன். நாளை பேசுகிறேன்" என கூறிவிட்டார்.

Also see...
First published: February 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்