Home /News /tamil-nadu /

திமுக உட்கட்சித் தேர்தலில் குளறுபடி: ராமநாதபுரத்திலிருந்து குவியும் புகார்கள்- ஆ.ராசா, தங்கம் தென்னரசு தலைமையில் விசாரணை

திமுக உட்கட்சித் தேர்தலில் குளறுபடி: ராமநாதபுரத்திலிருந்து குவியும் புகார்கள்- ஆ.ராசா, தங்கம் தென்னரசு தலைமையில் விசாரணை

திமுக

திமுக

திமுக உட்கட்சித் தேர்தல் குளறுபடிகள் குறித்து ராமநாதபுரம் திமுக மாவட்ட பொறுப்பாளர் மற்றும் தேர்தல் நடத்தும் ஆணையாளர் மீது அறிவாலயத்தில் புகார்கள் குவிந்துள்ளன.

    திமுகவின் 15ஆவது உட்கட்சித் தேர்தல் அறிவிப்பு திமுக தலைமை கழகத்தில் இருந்து சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இதில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தேர்தலை நடத்த தனித்தனியாக தேர்தல் ஆணையாளர்கள் திமுக மேலிடத்தில் நியமிக்கப்பட்டார்கள். இதில் இராமநாதபுரம் மாவட்டத்தில் உட்கட்சித் தேர்தல் முறையாக நடைபெறவில்லை என அறிவாலயத்தில் தேர்தல் முடிந்த நாளில் இருந்து புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

    இராமநாதபுரம் மாவட்டத்தின் தேர்தல் நடத்தும் ஆணையாளராக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பி ராமசாமி என்பவர் திமுக மேலிடத்தால் நியமிக்கப்பட்டார்.
    கடந்த 6ம் தேதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நடைபெற்றது. திமுக மேலிட உத்தரவுப்படி தேர்தல் நடத்தாமல், வேட்புமனு தாக்கல் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சுமூகமாக தேர்தல் ஆணையர் முடிவு எடுத்து தேர்தலை முடிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது.

    இந்நிலையில் தேர்தல் ஆணையாளர், இராமநாதபுரம் மாவட்ட திமுக பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கத்திற்கு ஆதரவாக இருந்து தேர்தலில் ஒருதலைபட்சமாக குளறுபடி செய்து முடிவு செய்து விட்டதாக 12க்கும் மேற்பட்ட ஒன்றியச் செயலாளர்கள் அண்ணா அறிவாலயத்தில் புகார் அளித்துள்ளனர்.

    திமுக மேலிடத்தில் புகார் அளித்த ஒன்றிய செயலாளர்களிடம் இது குறித்து கேட்ட போது, ‘இராமநாதபுரம் மாவட்டத்தில் மொத்தம் 22 ஒன்றியச் செயலாளர்கள் இதுவரை இருந்ததாகவும், மாவட்டக் கழகப் பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் மீது, அவருடைய செயல்பாடுகளில் அதிருப்தி அடைந்தும், கட்சியில் கோஷ்டிப் பூசலை மாவட்டத்தில் உருவாக்குகிறார் என தலைமை கழகத்தில் 15 ஒன்றியச் செயலர்கள் ஏற்கனவே புகார் அளித்திருந்தாகவும், இதனையடுத்து அவர்களை பழிவாங்கும் நோக்கத்தோடு புகார் அளித்த ஒன்றிய செயலாளர்களின் ஒன்றியங்களை பிரிக்க மாவட்டக் கழகப் பொறுப்பாளர் பரிந்துரை செய்தாகவும், அதன்படி புதிதாக 6 ஒன்றியங்கள், உருவாக்கப்பட்டு மொத்தம் 28 ஒன்றிய செயலலாளர் பதவிக்கு தேர்தல் நடைபெற்றதாக கூறுகின்றனர்.

    வேட்பு மனு தாக்கல் செய்த பின்பு தேர்தல் நடத்திய ஆணையாளர் ராமசாமி ஒன்றிய செயலாளர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் ஏற்கனவே ஒன்றிய செயலாளர்களாக செயல்பட்டவர்களை மு.க.ஸ்டாலின் அப்படியே மீண்டும் அவர்களுக்கு பதவி வழங்க கூறிவிட்டதாகவும், அதன்படி நீங்களே ஒன்றிய செயலாளராக இருப்பீர்கள் என கூறி பேச்சுவார்த்தையை சுமூகமாகநடத்தி அனுப்பி வைத்துள்ளார். மேலும் மாவட்ட கழக பொறுப்பாளருக்கு ஆதரவாக மாவட்ட கழக செயலாளர் தேர்தலில் வாக்களிக்க மனதில் வைத்து கொண்டு, மாவட்ட பிரதிநிதிகள் பதவியை மட்டும் நீங்கள் விட்டுக் கொடுக்க வேண்டும் என தேர்தல் நடத்தும் ஆணையாளரும், பேச்சு வார்த்தையின் போது உடன் இருந்த மாவட்ட பொறுப்பாளர் முத்துராமலிங்கமும் ஒன்றிய செயலாளர்களிடம் கூறியுள்ளனர்.

    அதன்படி பெரும்பாலான ஒன்றிய செயலாளர்கள் மாவட்ட பிரதிநிதி பதவியை விட்டுக் கொடுப்பதாக கூறி விட்டு பேச்சுவார்த்தை சுமூகமாக முடித்து விட்டு சென்றுவிட்டனர்.

    சிறுமலை சொகுசு கேளிக்கை விடுதியில் கூடி இறுதி பட்டியல் முடிவு

    கடந்த 8ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்தி முடித்த பின்னர், 9ஆம் தேதி உட்கட்சி தேர்தலை நடத்திய தேர்தல் ஆணையர் ராமசாமியும் மாவட்ட கழக பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கமும், அவருடைய சகோதரர் மூவேந்தன் உள்ளிட்டவர்கள் திண்டுக்கல் மாவட்டம் சிறுமலையில் உள்ள சொகுசு கேளிக்கை விடுதிக்கு சென்று அங்கு ஏற்கனவே சுமூகமாக பேச்சுவார்த்தையில் நடத்தி முடிக்கப்பட்ட ஒன்றியங்களில் உள்ள பழைய ஒன்றியச் செயலர்களின் பெயர்களை மாற்றி, சில ஒன்றியங்களுக்கு புதிய நபர்களின் பெயர்களையும், சில ஒன்றியங்களில் இவர்கள் போட்டி இருப்பது போல் உருவாக்கி, புதிய ஒன்றிய செயலாளர் பட்டியலை தயார் செய்துள்ளனர்.

    மேலும் புதிதாக பிரிக்கப்பட்ட 6 ஒன்றியங்களுக்கு, திமுக சட்ட தேர்தல் விதிகளின்படி கடந்த 14வது உட்கட்சி தேர்தல் திமுக உறுப்பினர் அட்டை கட்டாயம் இருக்க வேண்டும். ( 2 உறுப்பினர் அட்டை) அதற்குரிய உறுப்பினர் அட்டை எண்களை வேட்பு மனுவில் குறிப்பிட்டு, அதற்குரிய அடையாள அட்டையை வேட்புமனு உடன் இணைத்திருக்க வேண்டும். இதை முறையாக வைத்திருப்பவர்கள் மட்டுமே தேர்தலில் போட்டியிட தகுதியானவர்களாக இருப்பார்கள். ஆனால் புதிய ஒன்றிய செயலாளர் பதவிக்கு போலியாக அடையாள அட்டைகளை தயார் செய்து திமுக சட்ட விதிகளின்படி 2 உறுப்பினர் அட்டை இல்லாதவர்களை, போட்டியிட மாவட்ட கழக பொறுப்பாளர் முத்துராமலிங்கம் ஏற்பாடு செய்ததாகவும் அதை தேர்தல் ஆணையர் அங்கீகரித்து, அந்த ஒன்றியங்களில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த நபர்கள் குறித்த விவரங்களை மறைத்து, போட்டியில்லை என புதிதாக 6 பேர் கொண்ட பட்டியலை திமுக தலைமையிடம் வழங்கி விட்டதாக திமுக மூத்த ஒன்றியச் செயலாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

    பட்டியல்களை மாற்றியும், புதிய ஒன்றியங்களுக்கு தகுதி இல்லாத நபர்களை முடிவுசெய்து திமுக தலைமையிடம் தேர்தல் ஆணையாளர் பட்டியலை வழங்கிவிட்ட தகவலை அறிந்த ஏற்கனவே உள்ள ஒன்றிய செயலாளர்களும், போட்டியிட்ட புதிய ஒன்றியங்களின் நிர்வாகிகளும் அண்ணா அறிவாலயத்தில் இது குறித்து புகார் அளித்தனர்.

    ஆ.ராசா, அமைச்சர் தங்கம் தென்னரசு புகார் குறித்து விசாரணை

    திமுக ஒன்றிய செயலாளர்களும் , ஒன்றிய செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட நபர்களும் அளித்த புகார் குறித்து திமுக துணைப் பொதுச் செயலாளரும் நாடளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா மற்றும் இராமநாதபுரம் மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி, மாநிலங்களவை உறுப்பினர் வழக்கறிஞர் என்.ஆர் இளங்கோ, திமுக துணை அமைப்பு செயலாளர் அன்பகம் கலை ஆகியோர் அடங்கிய குழு தனித்தனியாக ஒவ்வொரு நபரையும் அழைத்து விசாரணை நடத்தியுள்ளனர்.

    இதில் மாவட்ட கழக பொறுப்பாளர் மீது ஏற்கனவே கோஷ்டி அரசியல் செய்வதாக அளித்த புகாரின் அடிப்படையில் தங்களை பழிவாங்குவதற்காக ஒன்றிய செயலாளர்களை மாற்ற நினைப்பதாகவும், அதற்கு தேர்தல் நடத்தும் ஆணையாளர் ராமசாமியும் உடந்தையாக இருப்பதாகவும் விசாரணையின்போது ஒன்றியச் செயலர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

    மேலும் புதிய ஒன்றியங்களுக்கு திமுக சட்ட விதிகளுக்கு புறம்பாக போலியாக அடையாள அட்டைகளை தயார் செய்து புதிய நபர்களை மாவட்ட பொறுப்பாளர் பரிந்துரை செய்து இருப்பதாகவும், புதிய ஒன்றிய செயலாளர் பதவிக்கு பல லட்ச ரூபாய் பேரம் பேசப்பட்டு இருப்பதாகவும், விசாரணையின் போது போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த மற்ற கட்சி நிர்வாகிகளும் ஆ.ராசாவிடம் தெரிவித்துள்ளனர்.

    இதனையடுத்து இந்த புகார்கள் குறித்து உரிய முறையில் விசாரணை நடத்தி, புதிய பட்டியலை தயார் செய்து, திமுக தலைவர் கவனத்திற்கு இந்த புகார் குறித்து கொண்டு செல்லவும், விசாரணை நடத்திய திமுக மூத்த நிர்வாகிகள் அடங்கிய குழு முடிவு செய்துள்ளனர்.
    Published by:Karthick S
    First published:

    Tags: DMK

    அடுத்த செய்தி