அதிமுக அலுவலக வன்முறைக்கும்,
திமுகவுக்கும் எந்த தொடர்பும் கிடையாது என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று காலை ஓபிஎஸ்-இபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இருதரப்பினரும் எதிர் எதிரே நின்றுக்கொண்டு கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். தொடர்ந்து, வன்முறையில் ஈடுபட்ட அதிமுக தொண்டர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த மோதலில் பலர் காயமடைந்தனர். இதையடுத்து, காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து, சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அதிமுக தொண்டர்களை எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறும்போது, அதிமுக தலைமை அலுவலகத்தில் சமூக விரோதிகள் அத்துமீறி நுழையக் கூடும் என்று கூறி காவல்நிலையத்தில் மனு கொடுத்தோம். எனவே, அதிமுக தலைமை கட்சி அலுவலகத்துக்கு உரிய பாதுகாப்பு அளிக்கக் கோரினோம். ஆனால், காவல்துறையினர் முழுமையான பாதுகாப்பு வழங்கப்படவில்லை. அதனால், அதிமுக அலுவலகத்தில் சில சமூக விரோதிகள் அத்துமீறி நுழைந்துள்ளனர்.
ஓ.பன்னீர்செல்வம் அதிமுக தலைமை அலுவலகத்துக்குள் நுழைந்து முக்கிய ஆவணங்களையும் அள்ளிச் சென்றுள்ளனர். பாதுகாப்பு கொடுக்க வேண்டிய காவலர்களும் அதிமுக தொண்டர்களையே தாக்கியுள்ளனர். ரவுடிகளைத் தாக்கவில்லை. காவலர்களுடன் கூட்டு வைத்துக் கொண்டு ஓ.பன்னீர்செல்வம் இந்த செயலில் ஈடுபட்டுள்ளார். திமுக அரசும், ஓ.பன்னீர்செல்வமும் கைக்கோர்த்து இதனை செய்துள்ளனர். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. காலம் மாறும்போது தக்க பாடம் புகட்டுவோம் என்றும் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
இந்நிலையில், எடப்பாடியின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில், அதிமுக அலுவலக வன்முறைக்கும், திமுகவுக்கும் எந்த தொடர்பும் கிடையாது என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஆர்.எஸ்.பாரதி கூறும்போது, நாங்கள் யார் பக்கமும் செல்ல வேண்டிய அவசியமில்லை. அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் வீணாக திமுகவை வம்புக்கு இழுக்க வேண்டாம். அதிமுகவுக்குள் நடக்கும் சண்டைக்கும், திமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. யாருடைய அழிவிலும் திமுக இன்பம் காணாது. எந்த கட்சியின் உள்விவகாரத்திலும் தலையிடும் வழக்கும் திமுகவுக்கு இல்லை.
எதற்கெடுத்தாலும் முதல்வரையும், திமுகவையும் தாக்கிப் பேசுவது எடப்பாடி பழனிசாமிக்கு வாடிக்கை. யார் மீதோ உள்ள கோபத்தை திமுகவின் பக்கம் காட்டுகிறார் எடப்பாடி பழனிசாமி. வருமான வரி சோதனைகளால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். அதனால், அதிமுகவுக்குள் நடக்கும் சண்டையில் திசை திருப்புகிறார். சட்டம், ஒழுங்கு காரணமாக அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது. எந்த நேரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது காவல்துறையை வைத்திருந்த ஈபிஎஸுக்கு தெரியாதா?.
ஜெயலலிதா, எம்ஜிஆர் காலத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் 5 ஸ்டார் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டார்களா?. அதிமுக செய்த வன்முறையை பொதுமக்களுக்கு எடுத்துக்காட்டிய ஊடகங்களுக்கு தனிப்பட்ட முறையில் பாராட்டுக்கள் என்று அவர் கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.