ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

திருச்சியில் திமுகவின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் - கட்சிசாராத வல்லுநர்கள் பலர் பங்கேற்பு

திருச்சியில் திமுகவின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் - கட்சிசாராத வல்லுநர்கள் பலர் பங்கேற்பு

திமுக மாநாட்டுக்காக வைக்கப்பட்டுள்ள கட்அவுட்

திமுக மாநாட்டுக்காக வைக்கப்பட்டுள்ள கட்அவுட்

"விடியலுக்கான முழக்கம்" என்ற பெயரில் திருச்சியில் திமுக சார்பில் தேர்தல் சிறப்பு பொதுக்கூட்டம் இன்று நடைபெறுகிறது. அதில், தமிழகத்திற்கு அடுத்த 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு திட்டத்தை மு.க.ஸ்டாலின் வெளியிடுகிறார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக சார்பில் 11-வது மாநில மாநாடு மார்ச் 14-ம் தேதி திருச்சி சிறுகனூரில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்து. அதற்கான பணிகள் நடைபெற்று வந்த நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், அதே இடத்தில் பிரம்மாண்ட தேர்தல் சிறப்பு பொதுக்கூட்டம் மார்ச் 7-ம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டது.

  அதன்படி, தமிழகத்தின் விடியலுக்கான முழக்கம் என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இதற்காக சுமார் 750 ஏக்கரில் பொதுக்கூட்ட இடம் தயாராகி உள்ளது. சிறுகனூர் மைதானம் முழுவதும் திமுக கொடி கட்டப்பட்டுள்ளது. கூட்ட அரங்கின் நுழைவு வாயிலில் பெரியார், அண்ணா, கருணாநிதி, மு.க.ஸ்டாலினுக்கு பிரமாண்ட கட்-அவுட்கள் வைக்கப்பட்டுள்ளன. நுழைவு வாயிலில் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையையொட்டி 100 அடி உயரத்தில் பிரமாண்ட கொடி கம்பம் நடப்பட்டுள்ளது. திறந்த வெளியில் தொண்டர்கள் அமர லட்சக்கணக்கான இருக்கைகள் போடப்பட்டுள்ளன.

  மைதானத்தில் பிரமாண்ட அளவில் மூன்று மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில், ஒரு மேடையில் மு.க.ஸ்டாலினும், மற்ற இரு மேடைகளில் கட்சியின் தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் அமர உள்ளனர். மேடையின் இருபுறமும் தலா 300 மீட்டர் நீளத்தில் எல்.இ.டி திரைகள் அமைக்கப்பட உள்ளன.

  இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக மு.க.ஸ்டாலின் விமானம் மூலம் திருச்சி வருகிறார். பொதுக்கூட்ட திடலில் பிரமாண்ட கொடிக்கம்பத்தில் மதியம் ஒரு மணிக்கு திமுக கொடியை ஏற்றி வைக்கிறார். அதன்பிறகு தமிழகத்தை மேம்படுத்த 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு திட்டத்தை மு.க.ஸ்டாலின் வெளியிட உள்ளார். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்குதல், தமிழகத்தின் கடன் சுமையை குறைப்பது, நீர் மேலாண்மை, தமிழக உரிமையை நிலை நாட்டுதல், கல்வித்தரம், பெண்கள் மேம்பாடு, விவசாய துறை. சமூகநீதி என 10 அம்சங்களை உள்ளடக்கிய லட்சிய பிரகடனத்தை அறிவிக்க உள்ளார். அதைத்தொடர்ந்து ஸ்டாலின் சிறப்புரையாற்ற உள்ளார்.

  இதுவரை நடைபெற்றுள்ள திமுகவின் 10 மாநில மாநாடுகளில் 5 மாநாடுகள் திருச்சியில் நடைபெற்றுள்ளன. இத்தகைய சூழலில் மு.க.ஸ்டாலின் வெளியிட உள்ள லட்சிய பிரகடனத்தை திமுக தொண்டர்கள் ஆவலோடு எதிர்பார்த்திருக்கின்றனர்.

  தி.மு.கவின் இந்த மாநாட்டில் கட்சி சாராத, பொருளாதார வல்லுநர் ஜெயரஞ்சன், பிரின்ஸ் கஜேந்திர பாபு, மருத்துவர் ரவீந்தரநாத், பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜ் உள்ளிடோரும் கலந்துகொண்டு வெவ்வேறு தலைப்புகளில் பேசவுள்ளனர்.

  மேலும் படிக்க...  திமுக கூட்டணி உடையாமல் நான் தக்க வைத்திருக்கிறேன்: திருமாவளவன்

  திமுக மாநாட்டை தொடர்ந்து, வரும் 10-ம் தேதி திமுக வேட்பாளர் பட்டியலும், அதற்கு மறுநாள் தேர்தல் அறிக்கையும் வெளியாக உள்ளது. இதைத்தொடர்ந்து 12-ம் தேதி முதல் மு.க.ஸ்டாலின் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியின் வாயிலாக தேர்தல் பிரசாரத்தை தொடங்க உள்ளார்.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: DMK, DMK president Stalin, TN Assembly Election 2021, Trichy