அதளபாதாள சரிவிலிருந்து தமிழகத்தை மீட்கும் வலிமை திமுக அரசுக்கு உண்டு: திருமாவளவன்!

கோப்புப் படம்

அரசின் வருமானத்தை உயர்த்துவதற்காக மதுக்கடைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது போன்ற மக்கள் நலன்களுக்கு எதிரான வழிமுறைகளை தமிழக அரசு கையாளாது என்றும் நம்புவதாக திருமாவளவன் கூறியுள்ளார்.

 • Share this:
  தமிழ் நாட்டின் நிதி நிலைமை தொடர்பான வெள்ளை அறிக்கை இன்று வெளியிடப்பட்ட நிலையில், அதள பாதாள சரிவிலிருந்து தமிழகத்தை மீட்கும் வலிமை திமுக அரசுக்கு உள்ளதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

  தமிழக அரசின் நிதி நிலை குறித்து நிதியமைச்சர்  பழனிவேல் தியாகராஜன் வெள்ளை அறிக்கையை இன்று வெளியிட்டார். அதில்,  தமிழகத்தின் கடன் சுமை ரூ.5.70 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்டது தொடர்பாக தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கை தமிழ்நாட்டின் நிதிநிலைமை கவலைக்குரியதாக இருப்பதை எடுத்துக் காட்டுவதாக தெரிவித்துள்ளார்.
  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

  கடந்த அதிமுக ஆட்சியில் சரியாக நிதி மேலாண்மை திறம்பட கையாளப் படாததால் கடன்சுமை பெருகியது மட்டுமின்றி, வரி வருவாயின் பெரும்பகுதி வட்டி செலுத்துவதற்கே விரயமாகியுள்ளதாக தெரிவித்துள்ளதோடு,  வளர்ச்சித் திட்டங்களுக்கு முதலீடு செய்ய முடியாமல் தமிழ்நாடு பொருளாதார வளர்ச்சிப் பாதையிலிருந்து நழுவி அதளபாதாளத்தில் சரிந்து வீழ்ச்சி அடைந்திருக்கிறது. இத்தகைய இக்கட்டான நெருக்கடியிலிருந்து தமிழ்நாட்டை மீட்டு மீண்டும் அதனை வளர்ச்சியை நோக்கி கொண்டுபோய் சேர்க்கும் வலிமை திமுக அரசுக்கு உண்டு  என நம்புவதாக கூறியுள்ளார்.

  இதையும் படிங்க: போக்குவரத்து இடையூறை தவிர்க்க சென்னை மாநகராட்சியின் அசத்தல் திட்டம்


  தற்போதுள்ள கொரோனா நெருக்கடி நிலையில் உடனடியாக வரிவருவாயைப் பெருக்குவதற்கு வாய்ப்பில்லை என்று கூறியுள்ள திருமாவளவன், “ வரியில்லாத பட்ஜெட்  என கடந்த காலங்களில் செய்தததைப்போல அல்லாமல், ஏழை-எளிய நடுத்தர மக்களை வரிச்சுமைகளிலிருந்து பாதுகாக்கும் வகையிலும் தொழிலதிபர்கள், பெருவணிகர்கள், ஒப்பந்ததார்ர்கள், நிலக்கிழார்கள் போன்ற செல்வந்தர்களிடமிருந்து நியாயமான வரிகளை வசூலிக்கக்கூடிய வகையிலும் வரிவருவாய்க்கான ஒரு பட்ஜெட் அறிக்கையைத் திமுக அரசு தாக்கல் செய்ய வேண்டுமென்பதே இன்றைய தேவை” என்று தெரிவித்துள்ளார்.

  மேலும் படிக்க: அதிமுக அரசு வட்டி கட்டுவதற்கும் கடன் வாங்கியிருக்கிறது - பழனிவேல் தியாகராஜன்


  இன்றைய மிகமோசமான பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்கும் நோக்கில், அரசின் வருமானத்தை உயர்த்துவதற்காக மதுக்கடைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது போன்ற மக்கள் நலன்களுக்கு எதிரான வழிமுறைகளை தமிழக அரசு கையாளாது என்றும் நம்புவதாக அவர் கூறியுள்ளார்.

  கடந்த அதிமுக ஆட்சியின் போது கல்வி, சுகாதாரம் போன்ற முதன்மையான மனிதவள மேம்பாட்டுத் துறைகளில் அரசின் முதலீடு வெகுவாகக் குறைந்திருப்பது கவலை அளிப்பதாகவும் அத்துறைகளில் முதலீடுகளைப் பெருக்கி அதனை சீர்செய்ய வேண்டிய தருணம் இது என்பதைச் சட்டிக்காட்ட கடமைப்பட்டிருப்பதாகவும்  திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார்.

  Must Read: வெள்ளை அறிக்கை: தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ. 2,63,976 கடன் சுமை உள்ளது


  மேலும், கடந்த அதிமுக அரசு 'செலவுகளைக் குறைக்கிறோம்' என்னும் பெயரில் அரசு துறைகளில் புதிய ஊழியர்கள் நியமிப்பதைத் திட்டமிட்டுத் தவிர்த்துள்ளது. இதனால் அரசாங்கத்தினுடைய செயல்பாடுகளே முடங்கிப் போகும் நிலை ஏற்பட்டிருக்கிறது. எனவே, புதிய பணியிடங்கள் மற்றும் பின்னடைவாக உள்ள காலிப் பணியிடங்கள் அனைத்தையும் நிரப்பி அரசாங்கத்தின் செயல்பாட்டை முடுக்க வேண்டியது இந்த அரசின் கடமை” என்றும் வலியுறுத்தியுள்ளார்.

  அத்துடன், தற்போதுள்ள பொருளாதார நெருக்கடி நிலையைக் காரணம் காட்டி, மக்கள் நலத் திட்டங்களைக் கைவிடாமல், மக்களின் நம்பிக்கையை இழந்துவிடாத வகையில் அவற்றை நிறைவேற்றுவதற்குரிய நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டுமென திருமாவளவன் கேட்டுக்கொண்டுள்ளார்.
  Published by:Murugesh M
  First published: