ருமேனியாவில் உள்ள வணிக தொடர்புகள் மூலம் உக்ரைனில் போர் நடைபெறும் பகுதியில் சிக்கித் தவிக்கும் தமிழக மாணவர்களை மீட்டு வர கோவையில் இருந்து ஒருங்கிணைக்கும் பணியில் திமுகவை சேர்ந்த தொழிலதிபரும், அவரது ஊழியர்களும் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.
கோவை நீலாம்பூர் பகுதியில் கார்மென்ட் நிறுவனம் நடத்தி வருபவர் கோகுல். திமுகவின் மருத்துவ அணி துணைச் செயலாளராக இருந்து வரும் இவர், ருமேனியா உட்பட பல்வேறு நாடுகளுக்கு கார்மென்ட் பொருட்களை ஏற்றுமதி செய்து வருகின்றார். இந்நிலையில், ரஷ்யா - உக்ரைன் போர் தொடங்கிய நிலையில், திமுகவின் அயலக அணி செயலாளர் அப்துல்லா எம்.பி, கோகுலை தொடர்பு கொண்டு வணிக தொடர்புகளை பயன்படுத்தி உக்ரைனில் சிக்கித் தவிக்கும் தமிழக மாணவர்களை மீட்க முடியுமா என கேட்டுள்ளார்.
இதனைதொடர்ந்து தமிழக அரசுடன் இணைந்து அங்கு சிக்கியுள்ள மாணவர்களை மீட்கும் பணியை தொடங்கியதாக கோகுல் தெரிவித்தார். உக்ரைனில் பல்வேறு நகரங்களில் இருக்கும் மாணவர்களை ஒருங்கிணைத்து ரயில் நிலையத்திற்கு வரவழைத்து, பாஸ்போர்ட் தொடர்பான பிரச்னைகளை சரி செய்து மாணவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ததாகவும், தாங்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட குழுதான் என்ற நம்பிக்கையை மாணவர்களுக்கு கொடுப்பதுதான் சவாலாக இருந்ததாகவும் கார்மென்ட் உரிமையாளர்களில் ஒருவரான துமிலன் தெரிவித்தார்.
உக்ரைன் நாட்டின் மெக்காலே நகரில் இருந்து மாணவர்களை மீட்டு வர பத்திரிகையாளர் ஒருவர் பேருந்துகளை வாடகைக்கு எடுக்க உதவியதாகவும், ரஷ்யாவில் அயலக பணியில் இருக்கும் இந்திய இராணுவ அதிகாரிகளும் பெரிய அளவில் உதவியதாக இந்த ஒருங்கிணைப்பு பணியில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
ரஷ்ய ராணுவ வாகனங்களில் பயன்படுத்தப்படும் Z குறியீடு - அதன் பின்னணி என்ன?
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுகவிற்கு வாக்கு சேகரித்து சர்ச்சையில் சிக்கிய ருமேனியா நாட்டை சேர்ந்த ஸ்டீபன், தமிழகத்தை சேர்ந்த மாணவர்களை மீட்கவும், ருமேனியாவில் உள்ள அரசு நிர்வாகத்தை தொடர்பு கொள்ளவும் இந்த குழுவிற்கு அனைத்து உதவிகளை செய்து உறுதுணையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.