திமுக மருத்துவர் அணி பிரமுகர் தற்கொலை.. ’என் மரணத்திற்கு டிஎஸ்பி தான் காரணம்..’ - வெளியான ஆடியோ வாக்குமூலம்..

Youtube Video

கன்னியாகுமரி மாவட்டத்தில், துணை காவல் கண்காணிப்பாளரின் தொடர் மிரட்டல் தான் காரணம் என கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் டாக்டர். திமுக மருத்துவர் அணியைச் சேர்ந்த டாக்டர் தற்கொலைக்கு முன்பு உறவினரிடம் ஆடியோவில் பேசியது என்ன?

 • Share this:
  கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள பறக்கை பகுதியை சேர்ந்தவர் 43 வயதான சிவராம பெருமாள். மருத்துவரான இவர் திமுக மருத்துவர் அணியின் மாவட்ட துணை அமைப்பாளராகவும் இருந்து வந்தார். பறக்கையில் தனது வீட்டின் அருகிலேயே பெரிய மருத்துவமனை கட்டி பணியாற்றி வந்தார். இவரது மனைவி சீதா, அரசு மருத்துவராகப் பணிபுரிந்து வருகிறார். இந்த தம்பதிக்கு 9 வயது மற்றும் 8 வயதில் மகள்கள் உள்ளனர். சிவராம பெருமாள் கடந்த சில ஆண்டுகளாக மருத்துவப் பணியை விட்டு விட்டு ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.மேலும் பறக்கையில் துணிக்கடை ஒன்றும் சிவராம பெருமாள் நடத்தி வந்துள்ளார்.

  இந்த நிலையில், திங்கட்கிழமை பிற்பகலில் தனது மருத்துவமனையில் விஷமருந்தி சிவராம பெருமாள் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்கொலைக்கு முன்பு, தனது உறவினர் ஒருவரிடம் பேசிய சிவராமபெருமாள், தனது மரணத்திற்கு குமரி சரக டிஎஸ்பி பாஸ்கரன் தான் காரணம் என்றும் கூறியுள்ளார். தகவல் அறிந்த மனைவி உள்ளிட்ட குடும்பத்தினர் அவரை மீட்கச் சென்றபோது மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.

  குடும்பத்தினர் அவரை மீட்டு, தனியார் மருத்துவமனையில் சேர்த்து சோதித்தபோது சிவராமபெருமாள் உயிரிழந்தது தெரியவந்தது. முதற்கட்ட விசாரணையில், தனது 2-வது மகள் துர்காவின் கண் முன்பு சிவராமபெருமாள் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

  உறவினரிடம் பேசிக் கொண்டிருந்தபோதே அவர் தனது மகளிடம், ஐஏஎஸ் அதிகாரியாகி போலீசாரை கேள்வி கேட்க வேண்டும் என ஆத்திரத்துடன் சிவராமபெருமாள் கூறியுள்ளார். மேலும் போலீசாரிடம் ஒப்படைக்கும்படி கூறி தனது மகளிடம் அவர் 2 பக்க கடிதம் ஒன்றையும் கொடுத்துள்ளார்.

  அதில், தனது தற்கொலைக்கு காரணம், டிஎஸ்பி பாஸ்கரன் மற்றும் வழக்கறிஞர் விஜய் ஆனந்த் ஆகியோர்தான் என்றும் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஜூலை மாதம், 12-ஆம் தேதி கொரோனா பணியை முடித்து விட்டு சிவராமபெருமாளும் அவரது மனைவியும் காரில் வீட்டிற்குத் திரும்பியுள்ளனர். அப்போது எதிரில் வந்த டிஎஸ்பி பாஸ்கரன் காரின் வெளிச்சம் அதிகமாக இருக்கவே சிவராமபெருமாள் டிம் பண்ணியுள்ளார்.

  உடனடியாக காரை நிறுத்திய டிஎஸ்பி பாஸ்கரன், தம்பதியை அவதுாறாகப் பேசி திட்டியதாகக் கூறப்படுகிறது.காரில் இருந்தது டிஎஸ்பி பாஸ்கரன் என்பதை அறியாத தம்பதி, மறுநாள், அவரிடமே சென்று புகாரளித்தபோது, போலீஸ் மீதே புகாரளிக்கிறாயா என டிஎஸ்பி மிரட்டியதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

  மருத்துவர் சிவராமபெருமாளின் உறவினரும் வழக்கறிஞருமான விஜய் ஆனந்த் என்பவருக்கும், சிவராமபெருமாள் குடும்பத்திற்கும் இடையே 7 ஆண்டுகளாக குடும்பப் பிரச்னை இருந்துள்ளது.

  மேலும் படிக்க...4 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்துசென்று, சேர்ந்துவாழ வராததால் மனைவியை வெட்டிய நபர் கைது.. ( வீடியோ)

  இந்தப் பிரச்னையை முன்னிட்டு, விஜய் ஆனந்த், டிஎஸ்பி பாஸ்கரனுடன் நெருங்கிய நட்பு ஏற்படுத்திக் கொண்டு, மருத்துவர் மீது பொய்யான தகவல்களை மொட்டைக் கடிதங்களாக அனுப்பியதாகவும் அவரது பேச்சைக் கேட்டு டிஎஸ்பி பணம் கேட்டு மிரட்டியதாகவும் மருத்துவரின் குடும்பத்தினர் புகார் தெரிவித்துள்ளனர்.  தொடர்ந்து விஜய் ஆனந்த் மற்றும் டிஎஸ்பி பாஸ்கரனின் நெருக்கடிகள் தாங்க முடியாமல், மருத்துவர் சிவராமபெருமாள் தற்கொலை செய்து கொண்டதாக குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். இதுகுறி்த்து டிஎஸ்பி பாஸ்கரனிடம் கேட்டபோது, மருத்துவர் சிவராமபெருமாள் என்பவர் யார் என்றே தனக்குத் தெரியாது என்று கூறியுள்ளார்.

  மருத்துவர் குடும்பத்தால் குற்றம்சாட்டப்பட்ட விஜய் ஆனந்த் என்பவர், கடந்த ஆகஸ்ட் மாதம், கோழிக்கடை நடத்துவதாகக் கூறி பெண்களை வைத்துப் பாலியல் தொழில் செய்ததாகக் கைதாகி வெளியில் வந்தவர் என்கி்ன்றனர் போலீசார்.

  மருத்துவர் சிவராமபெருமாள் தற்கொலை குறித்து சுசீந்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். டிஎஸ்பி மீதான புகார் குறித்து விசாரணை நடந்து வருவதாக மாவட்ட எஸ்பி பத்ரிநாராயணன் தெரிவித்துள்ளார்.

   

  மருத்துவர் தற்கொலையின் முழுப் பின்னணியும் வெளிவருமா? தற்கொலைக்குத் துாண்டியவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்களா?
  மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.மாநில உதவிமையம்: 104

  சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
  Published by:Vaijayanthi S
  First published: