பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சட்டமன்ற தொகுதியின் திமுக வேட்பாளர் சிவசங்கரை ஆதரித்து உதய சூரியன் சின்னத்தில் ஓட்டு கேட்டு, குன்னம் பேருந்து நிறுத்தம் பகுதியில், திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், ”வேட்பாளர் சிவசங்கர் சட்டமன்ற உறுப்பினர் ஆக வேண்டும் என்பதற்காக நீங்கள் எங்களுக்கு வாக்களிக்க வேண்டாம். ஊழலில் திளைத்து இருக்கின்ற எடப்பாடியின் ஆட்சியை அகற்ற வேண்டும். மதவாதத்த்தை பின்பற்றி, திராவிடர்களுக்கும் தமிழக மக்களுக்கும் எதிராக ஆட்சி செய்து கொண்டிருக்கின்ற மத்திய அரசை அகற்ற வேண்டும், அதற்கு ஸ்டாலின் முதல்வராக வேண்டும். எனவேதான் திமுகவிற்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்கிறோம்” என்றார்.

பிரச்சாரத்தின் போது குன்னம் தொகுதியில் குவிந்த மக்கள்
அதனை தொடர்ந்து பேசியவர்,” தமிழக மக்களுக்கு எதிரான வேளாண் சட்டத்தை கொண்டு வந்த மத்திய அரசுக்கு எடப்பாடி தலைமையிலான தமிழக அரசு துணை போனது. தமிழக விவசாயிகளின் நலனைக்கருத்தில் கொண்டு, இலவச மின்சாரத்தை கொண்டு வந்தது திமுக ஆட்சியில் தான். திமுக ஆட்சியில் இருந்த மின்வெட்டுக்கு காரணம் அதற்கு முன்பு இருந்த அதிமுக அரசின் செயல்பாடுகளும், முறையான திட்டமிடல் இல்லாததுமேயாகும். அதன் பிறகு திமுக ஆட்சியில் கலைஞர் கொண்டு வந்த பல்வேறு திட்டங்களின் பயனாகவே தொடர்ந்து ஆட்சிக்கு வந்த அதிமுக ஆட்சியில் தடையில்லா மின்சாரம் கொடுக்க முடிந்தது” என்று கூறினார்.
மேலும் படிக்க...
திருச்சியில் ஸ்டாலினுக்கு வந்த மாஸ் கூட்டம்
மேலும்,” விவசாய கடன் தள்ளுபடி, கொரோனோ நிதியுதவி, அரசு பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு என தமிழக அரசு அறிவித்துள்ள அனைத்து திட்டங்களும், திமுக தலைவர் ஸ்டாலினால் முன்னதாக அறிவிக்கப்பட்டவை. அதனை பின்பற்றியே தமிழக அரசு திட்டங்களை அறிவித்து வருகிறது. ஆட்சியில் இருந்தால் மட்டுமே ஊழல் செய்ய முடியும் 10 ஆண்டுகாலமாக திமுக ஆட்சியில் இல்லாதபோது, எங்களை ஊழல் கட்சி என்று எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம் செய்து வருகிறார். ஆனால் அவர்கள் ஆட்சியில் எண்ணற்ற ஊழல் நடைபெற்றுள்ளது. அதற்கு உதாரணமாக பல்வேறு ஒப்பந்தங்களை அவரது சம்பந்திக்கே கொடுத்து, அதன் மூலம் ஊழல் செய்ததை அனைவரும் அறிவர்” என்றார்.
செய்தியாளர்: பெரம்பலூர் R .ராஜவேல்
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்