சிவகங்கை மாவட்டம் கல்லல் ஒன்றியத்தில் காலை தி.மு.க வெற்றி பெற்ற வேட்பாளருக்கு ஆதரவளித்த பெண் கவுன்சிலர் வெளியே வந்ததும் உடனடியாக அமைச்சர் முன்னிலையில் அ.தி.மு.கவிற்கு தாவியது தி.மு.கவினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் கல்லல் ஒன்றியத்தில் மொத்தமுள்ள 16 வார்டுகளில் நடந்த தேர்தலில் தி.மு.க 6, காங்கிரஸ் 2, விடுதலைச் சிறுத்தை ஒன்று என தி.மு.க கூட்டணி 9 இடங்களில் வென்றது. அ.தி.மு.க 7 இடங்களில் வென்றது. தலைவர் தேர்தலில் அ.தி.மு.க சார்பில் பிரேமாவும், தி.மு.க சார்பில் சொர்ணமும் போட்டியிட்டனர். இதில் 11-வது வார்டு தி.மு.க கவுன்சிலர் சங்கீதா ஆதரவுடன் தி.மு.கவைச் சேர்ந்த சொர்ணம் 9 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
தி.மு.க சொர்ணம் ஒன்றியத் தலைவாக பொறுப்பேற்றபோது, அவருடன் சங்கீதா புகைப்படம் எடுத்துக் கொண்டார். தொடர்ந்து கல்லல் ஒன்றிய அலுவலகத்தில் இருந்து வெளியேறி புறப்பட்ட தி.மு.க வார்டு உறுப்பினர் சங்கீதா அமைச்சர் பாஸ்கரன் முன்னிலையில் அ.தி.மு.கவில் இணைந்தார்.
இதனால் அ.தி.மு.க, தி.மு.கவிற்கு தலா 8 கவுன்சிலர்களாக பலம் மாறியது. சமபலத்தில் இருந்ததால் மாலையில் நடந்த ஒன்றியத் துணைத் தலைவர் தேர்தலில் தி.மு.கவிற்கு மெஜாரிட்டி இல்லை. மேலும் 9 கவுன்சிலர்கள் இருந்தால் மட்டுமே துணைத் தலைவர் தேர்தலை நடத்த முடியும். ஆனால் 8 கவுன்சிலர்கள் மட்டுமே தேர்தலுக்கு வந்ததால் தேர்தலை அதிகாரிகள் ஒத்திவைத்தனர். காலையில் தி.மு.கவில் இருந்து ஒன்றியக் குழுத் தலைவரை தேர்ந்தெடுத்துவிட்டு உடனடியாக அ.தி.மு.கவிற்கு தாவிய தி.மு.க பெண் கவுன்சிலர் சம்பவத்தால் தி.மு.கவினர் அதிர்ச்சி அடைந்தனர்.
Also see:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local Body Election 2019