Home /News /tamil-nadu /

திமுகவில் காணாமல் போகும் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு.. தலைமையின் அறிவிப்பை மீறி கூட்டணிக் கட்சியினர் இடங்களில் போட்டி

திமுகவில் காணாமல் போகும் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு.. தலைமையின் அறிவிப்பை மீறி கூட்டணிக் கட்சியினர் இடங்களில் போட்டி

திமுக

திமுக

கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்பது பேரறிஞர் அண்ணாவின் தாரக மந்திரம். தலைமை கூறும் செயலில் ஈடுபடாமல் கடமையில் இருந்து விலகுவது கூட்டணிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்டு கண்ணியத்தை மீறிவது, தலைமையின் அறிவிப்புக்கு கட்டுப்பட்டு நடக்காமல் இருப்பது என திமுகவினரின் செயல் கட்சி தலைமைக்கு  கூட்டணி கட்சிகளுக்கு இடையே மட்டுமில்லாமல் பொதுமக்களிடையேயும் அதிருப்தியை ஏற்படுத்தக் கூடும்.

மேலும் படிக்கவும் ...
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகளான விடுதலை சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ் போன்ற கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட நகராட்சி, பேரூராட்சித் தலைவர் பதவிகளுக்கு திமுகவினரே போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளது கூட்டணி கட்சியினரை அதிருப்தி அடைய செய்துள்ளது. அதற்கும் மேலாக, கட்சியின் தலைமையின் அறிவிப்பையே திமுகவினர் மீறியிருப்பது விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளது.

சட்டப்பேரவை தேர்தலில் தனிப் பெருன்மையுடன் திமுக ஆட்சியை பிடித்ததை தொடர்ந்து முதன்முறையாக முதலமைச்சராக பதவியேற்ற ஸ்டாலின், சிறப்பான ஆட்சியை கொடுத்துவிட வேண்டும் என்ற நோக்கத்துடன் பணியாற்றி வருகிறார். கோவிலுக்கு சொந்தமான ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் மீட்பு, மகளிருக்கு பேருந்துகளில் இலவச பயணம், கொரோனா நிவாரண நிதி, நகைக்கடன் தள்ளுபடி என ஓராண்டுக்குள்ளாகவே திமுக அரசின் செயல்பாடுகள் பாராட்டை பெறுகின்றன.

அதேவேளையில், அரசின் ஒட்டுமொத்த நற்பெயரையும் சீர்குலைக்க ஒன்றிரண்டு பேர் போதும் என்பதையும் திமுகவினர் நிரூபித்தே வருகின்றனர். திமுக அரசு அமைந்ததுமே முகப்பேரில் உள்ள , அம்மா உணவகத்தில் ஜெயலலிதா படத்தை அகற்றக் கோரி திமுகவினர் இருவர் உணவகத்தை சூறையாடியது சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர் இருவரும் கைது நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டதோடு கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டனர்.

இதேபோல், சமூக வலைதளங்களில், ஈழப் போர், தலீத் தலைவர்கள் தொடர்பாக இணைய திமுகவினர் வைத்த விமர்சனங்கள் சர்ச்சையை ஏற்படுத்தியபோது, மு.க.ஸ்டாலினே தலையிட்டு, தேவையற்ற விமர்சனங்களை இணையதளங்களில் செய்ய வேண்டாம் என்று இதற்கு தடை போட்டார்.

‘பொதுவெளியில் இப்படியென்றால், கூட்டணியிலும் விரிசல் ஏற்படுத்தும் செயல்களில் திமுக உறுப்பினர்கள் ஈடுபடுவதும் தொடர்கிறது. கட்சி தலைமைகள் ஒற்றுமையுடன் பேசி நட்புறவோடு  இருந்தால், தொண்டர்கள் இடையே இத்தகைய ஒற்றுமை உள்ளதா என்றால், நிச்சயம் இல்லை என்றே கூறலாம். சமீபத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கரூரில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் திமுக வேட்பாளர் சுயேட்சையாக போட்டியிட்டது திமுகவினர் அவருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ததும். இரு கட்சி தொண்டர்கள் இடையேயான புரிந்துணர்வு பாலம் ஒற்றுமையாக இல்லாததையே காட்டியது.

இதனையெல்லாம்விட  இன்று நடைபெற்ற மறைமுக தேர்தலில் திமுக தலைமை அறிவித்த வேட்பாளர்களை எதிர்த்து சிலர் தனிப்பட்ட முறையில் போட்டியிருந்தனர். இதேபோல்,  கூட்டணி கட்சியினருக்கு திமுக தலைமை ஒதுக்கிய நகர்ப்புறத் தலைவர், துணைத்தலைவர், பேரூராட்சித் தலைவர் போன்ற பதவிகளுக்கு திமுகவினர் போட்டியிட்டு வெற்றியும் பெற்றுள்ளனர்.

தேனி - அல்லிநகரம் நகராட்சி தலைவர் பதவி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், அங்கு திமுகவினர் தனிப்பட்ட முறையில் வேட்புமனு தாக்கல் செய்தார்.  இதேபோல், திருப்பெரும்புதூர், கருமத்தபட்டி ஆகிய நகர்மன்ற தலைவர் பதவிகளுக்கு காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், திமுகவினர் அங்கு போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். கரூர் மாவட்டம், புலியூர் பேரூராட்சி தலைவர் பதவி இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், அங்கு திமுக தரப்பில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது.

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் நகராட்சித் தலைவர் பதவி விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், திமுக தலைமையின் அறிவிப்பை மதிக்காமல் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளரை எதிர்த்து திமுக வேட்பாளர் ஜெயந்தி மனு தாக்கல் செய்து வெற்றியும் பெற்றார்.

தருமபுரி மாவட்டம் பொ.மல்லாபுரம் பேரூராட்சியில் திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தலைவர் பதவி அறிவிக்கப்பட்டது. அங்கும் திமுகவை சேர்ந்த சாந்தி என்பவர் மனு தாக்கல் செய்து வெற்றி பெற்றுள்ளார்.

திமுகவினரின் செயல் கூட்டணி கட்சியினருக்கு மிகப் பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது.  முதல்வர் மு.க.ஸ்டாலினின்  ஆணையையும் மீறி கூட்டணிக் கட்சிகளுக்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுக சார்பில் போட்டி வேட்பாளர்களாக நின்று வெற்றி பெற்றவர்களை 'ராஜினாமா' செய்ய வைத்து 'கூட்டணி அறத்தைக்' காத்திட வேண்டும் என ஸ்டாலினுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கோரிக்கை வைத்துள்ளார். பிற கட்சிகளின் விருப்பமும் இதுவாகவே உள்ளது.

கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்பது பேரறிஞர் அண்ணாவின் தாரக மந்திரம். தலைமை கூறும் செயலில் ஈடுபடாமல் கடமையில் இருந்து விலகுவது கூட்டணிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்டு கண்ணியத்தை மீறிவது, தலைமையின் அறிவிப்புக்கு கட்டுப்பட்டு நடக்காமல் இருப்பது என திமுகவினரின் செயல் கட்சி தலைமைக்கு  கூட்டணி கட்சிகளுக்கு இடையே மட்டுமில்லாமல் பொதுமக்களிடையேயும் அதிருப்தியை ஏற்படுத்தக் கூடும். எனவே, கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகியவற்றில் இருந்து தவறும் கட்சியினர் மீது கடும் நடவடிக்கையை எடுப்பதே, அரசுக்கும் திமுக என்ற கட்சிக்கும் நற்பெயரை ஏற்படுத்தும்.
Published by:Murugesh M
First published:

Tags: DMK, MK Stalin

அடுத்த செய்தி