• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • 180 தொகுதிகளில் திமுக போட்டியா? கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்?

180 தொகுதிகளில் திமுக போட்டியா? கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்?

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

2021 சட்டமன்றத் தேர்தலில், 180 தொகுதிகளுக்கு குறையாமல் திமுக போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் மீதமிருக்கக் கூடிய 54 தொகுதிகள் மட்டுமே 9 கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் என கூறப்படுகிறது.

  • Share this:
    2016-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக, திமுக, மக்கள் நலக் கூட்டணி, பா.ம.க. என நான்கு முனைப் போட்டி நிலவிய நிலையில், வரவிருக்கும் 2021 சட்டமன்றத் தேர்தலில், அதிமுக, திமுக, ரஜினி தொடங்கவிருக்கும் கட்சி, கமலின் மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி என பன்முனை போட்டி உருவாகியுள்ளது. இந்நிலையில் கடந்த சட்டமன்ற தேர்தலில் ஒட்டுமொத்த வாக்கு சதவீதத்தில், வெறும் ஒரு விழுக்காடு வித்தியாசத்தில் ஆட்சியை இழந்த திமுக கூட்டணி, அதே தவறை மீண்டும் இழைத்து விடக்கூடாது என பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது.

    குறிப்பாக கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சியை இழந்ததற்கு மக்கள் நலக் கூட்டணியின் வாக்குப்பிரிப்பு ஒரு காரணம் என சொல்லப்பட்டாலும், காங்கிரஸ் கட்சிக்கு 41 இடங்களை ஒதுக்கியதும், அதில் காங்கிரஸ் கட்சி வெறும் 8 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றதும் முக்கிய காரணம் என திமுக தரப்பில் கருதப்படுகிறது.

    எனவே நடைபெறவுள்ள தேர்தலில், கூட்டணி கட்சிகளுக்கு குறைவான இடங்களை மட்டுமே ஒதுக்க முடிவு செய்துள்ள திமுக, 180 இடங்கள் வரை போட்டியிட திட்டமிட்டடிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. கூட்டணியில் இருக்கக்கூடிய காங்கிரஸ் கட்சிக்கு 24 இடங்களையும், மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக ஆகிய கட்சிகளுக்கு தலா 6 முதல் 7 இடங்களையும் ஒதுக்க திமுக திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகின்றது.

    இது தவிர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு மூன்று இடங்களையும், மனிதநேய மக்கள் கட்சி , கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு தலா இரண்டு இடங்களையும், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மற்றும் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சிக்கு ஒரு இடத்தையும் ஒதுக்கீடு செய்யவும் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகின்றது.

    இந்த ஆண்டு டிஜிட்டல் தளத்தில் தடம் பதிக்கும் மார்கழி இசை விழா

    மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்ட சில கட்சிகளை உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட வைக்கவும் திமுக திட்டமிட்டிருப்பதாக சொல்லப்படுகின்றது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: