கொங்கு மண்டலத்தில் வெற்றி யாருக்கு! கள நிலவரம் குறித்து முழு பார்வை

அ.தி.மு.க வேட்பாளரை விட ஆ.ராசாவுக்கு மிகப் பெரிய அளவில் அந்தத் தொகுதியில் செல்வாக்கு நிலவுகிறது. ஆ.ராசாவின் வெற்றி, உறுதி செய்யப்பட்ட ஒன்றாகவே அந்தப் பகுதியில் கருதுகின்றனர்.

கொங்கு மண்டலத்தில் வெற்றி யாருக்கு! கள நிலவரம் குறித்து முழு பார்வை
ஸ்டாலின் | எடப்பாடி பழனிசாமி
  • News18
  • Last Updated: April 17, 2019, 2:45 PM IST
  • Share this:
சேலம், கரூர், கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, நாமக்கல், நீலகிரி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகள் கொங்கு மண்டலம் என்று அழைக்கப்பட்டுவருகிறது. இந்த மாவட்டங்கள், 8 மக்களவைத் தொகுதிகளை உள்ளடக்கியது.

தமிழகத்தைப் பொறுத்தவரையில் கொங்கு மண்டலம் பரவலாக தொழில்மயமான பகுதி. அதுமட்டுமல்லாமல், அரசியலிலும் கொங்கு மண்டலம் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக உள்ளது. தமிழகத்தின் மொத்த வருவாயில் 40 % கொங்குப் பகுதியிலிருந்துதான் கிடைக்கிறது.

சி.பி.ராதாகிருஷ்ணன்கோயம்புத்தூர், ஜவுளி உற்பத்தி மற்றும் சிறு, குறு தொழில்களுக்கு பிரசித்தி பெற்ற நகரமாக இருந்துவருகிறது. திருப்பூர், பனியன் வகை ஜவுளி உற்பத்தியை முக்கியத் தொழிலாக கொண்டுள்ளது. இந்தியாவிலேயே கொங்குமண்டலம் மிகவும் பன்முகத்தன்மை கொண்ட பகுதியாக இருந்துவருகிறது.

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு, கொங்கு மண்டலத்தில் அ.தி.மு.க தலைமையிலான கூட்டணி கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டயாம் உள்ளது. எனவே, அவர், கொங்கு மண்டலப் பகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகிறார்.

கொங்கு மண்டலத்தில் நிலவும் சாதிய அமைப்புமுறை பொதுவாக, அ.தி.மு.கவுக்கு சாதகமாக இருந்துவந்தது. ஆனால், தற்போதைய அரசியல் சூழல் அ.தி.மு.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சாதகமாக இல்லை.
ஆ ராசா


தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான கோயம்புத்தூரில் அ.தி.மு.க கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ஜ.க சார்பில் சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார்.

தி.மு.க கூட்டணியின் சார்பில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சி.ஆர்.நடராஜன் போட்டியிடுகிறார். இருவரும், முன்னாள் எம்.பிக்கள். இரு தரப்பினரும் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கோயம்புத்தூரைச் சுற்றியப் பகுதிகளில் நீண்ட காலமாகவே பா.ஜ.கவுக்கு தனிப்பட்ட முறையில் கணிசமான வாக்கு வங்கி உள்ளது. 1998-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க சார்பில் சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிட்டு வெற்றி பெற்று, கோயம்புத்தூரில் பா.ஜ.கவின் வெற்றிக் கணக்கைத் தொடங்கிவைத்தார்.

எஸ்.ஆர்.பார்த்திபன்


பின்னர், உடனடியாக 1999-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலிலும் போட்டியிட்ட சி.பி.ராதாகிருஷ்ணன் அந்தமுறையும் வெற்றி பெற்றார். 15 ஆண்டுகளுக்கு பிறகு, இந்தமுறையும் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெறுவார் என்று பா.ஜ.க நம்புகிறது.

தி.மு.க கூட்டணியின் சார்பில் போட்டியிடும் கம்யூனிஸ்ட் கட்சியின் சி.ஆர்.நடராஜனுக்கு தொழிலாளர்களின் ஆதரவு அதிகளவில் உள்ளது. மேலும், தி.மு.க வாக்கு வங்கியும் அவருக்கு வரும் நிலையில், அவருக்கான வெற்றி வாய்ப்பு நல்லநிலையிலேயே உள்ளது.

கோயம்புத்தூர் தொகுதி நிலவரம் குறித்து பேசிய அரசியல் விமர்சகர் ராஜத் குமார், ‘உயர்வகுப்பினர் மற்றும் உயர் சாதியினரின் ஆதரவு பா.ஜ.கவுக்கு வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதேநேரத்தில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பினரின் ஆதரவு மார்க்சிஸ்ட் கட்சிக்கு கிடைக்கும் என்று தெரிகிறது.

தொழில்நகரமான கோயம்புத்தூர், பணமதிப்பு நீக்கம் மற்றும் ஜி.எஸ்.டியால் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதனால், சிறு, குறு தொழில் செய்பவர்கள் மத்தியில் ஆளும் பா.ஜ.கவுக்கு எதிரான மனநிலை நிலவுகிறது.

தொழிலாளர்கள் மற்றும் ஏழை மக்கள் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு ஆதரவான மனநிலையில் உள்ளனர். எனவே, இந்தத் தொகுதியில் இருவருக்குமான வெற்றி வாய்ப்பு சமநிலையில் உள்ளது. தற்போது எதையும் உறுதியாக கூற முடியாது’ என்று தெரிவித்தார்.

கோயம்புத்தூரில், இந்து முன்னணி அமைப்புக்கும் சிறிய அளவிலான வாக்கு வங்கி உள்ளது. அந்த வாக்குவங்கி பா.ஜ.கவுக்கு உதவும்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் மாவட்டமான சேலம் தொகுதியில் தி.மு.க சார்பில் தே.மு.தி.கவிலிருந்து வெளியேறி தி.மு.கவில் சேர்ந்த எஸ்.ஆர்.பார்த்திபன் நிறுத்தப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக அ.தி.மு.க சார்பில் கே.ஆர்.எஸ்.சரவணன் நிறுத்தப்பட்டுள்ளார்.

தனது சொந்தத் தொகுதியில் அ.தி.மு.க தோல்வியடைந்தால் பின் நாள்களில், அது சிக்கலை ஏற்படுத்தும் என்ற நெருக்கடியில் எடப்பாடி பழனிசாமி உள்ளார். ஆனால், சேலத்தில் அ.தி.மு.கவுக்கு தி.மு.க வேட்பாளர் மிகுந்த நெருக்கடி கொடுப்பார் என்று தெரிகிறது.

இதுகுறித்து தெரிவித்த தேங்காய் வியாபாரி சுரேஷ், ‘நான், இந்தமுறை தி.மு.கவுக்குதான் வாக்களிப்பேன். எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தலைமையை விட மு.க.ஸ்டாலின் தலைமை சிறப்பாக உள்ளது’ என்று தெரிவித்தார். சேலம் மாவட்டத்தின் நகர் பகுதிகளில் தி.மு.க வலுவாக உள்ளது. சேலத்தின் கிராமப் பகுதிகளில் இரு தரப்பும் சமநிலையில் உள்ளது.

இதுகுறித்து தெரிவித்த செய்தியாளர் வேலாயுதம், ‘கொங்கு மண்டலத்தில் அ.தி.மு.க கூட்டணி குறைந்தபட்சம் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெறவேண்டும். சேலம், கோயம்புத்தூர் ஆகிய இரண்டு தொகுதிகள் அ.தி.மு.க கூட்டணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இந்த இரண்டு தொகுதிகளில் அ.தி.மு.க வெற்றி பெறவில்லையென்றால், தமிழ்நாட்டில் எந்தத் தொகுதிகளிலும் அ.தி.மு.க வெற்றி பெறாது’ என்று தெரிவித்தார்.

ஈரோட்டில் ம.தி.மு.கவைச் சேர்ந்த கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். அ.தி.மு.க சார்பில் மணிமாறன் போட்டியிடுகிறார். கரூரில் அ.தி.மு.க சார்பில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை போட்டியிடுகிறார். தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் சார்பாக ஜோதிமணி போட்டியிடுகிறார். கரூரில் அ.தி.மு.கவுக்கு இருக்கும் வாக்கு வங்கியைவிட தனிப்பட்ட முறையில், கரூரில் தம்பிதுரைக்கு செல்வாக்கு அதிகம் உள்ளது.

நாமக்கல் தொகுதியில் தி.மு.க கூட்டணி சார்பில் கொங்கு முன்னேற்ற கழகம் போட்டியிடுகிறது. அக்கட்சியின் சார்பில் சின்ராஜ் போட்டியிடுகிறார். அ.தி.மு.க சார்பில் காளியப்பன் போட்டியிடுகிறார்.

திருப்பூரைப் பொறுத்தவரையில் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் சுப்பராயன் போட்டியிடுகிறார். அ.தி.மு.க சார்பில் எம்.எல்.எம் அனந்தன் போட்டியிடுகிறார். இந்தப் பகுதியில் செயல்படும் பல வணிக சங்கங்கள் தி.மு.கவுக்கு ஆதரவாக உள்ளன. பொள்ளாச்சியில் அ.தி.மு.க சார்பில் மகேந்திரன், தி.மு.க வேட்பாளர் சண்முகசுந்தரத்தை எதிர்கொள்கிறார். இந்தத் தொகுதியில் இரு தரப்புக்கும் கடுமையான போட்டி நிலவும் என்று தெரிகிறது.

மகுடம் சூடுவாரா ஆ.ராசா?... அரசியல் சூட்டில் ‘ஜில்’ நீலகிரி...!

நீலகிரி தொகுதியில் தி.மு.க சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா போட்டியிடுகிறார். அ.தி.மு.க சார்பில் தியாகராஜன் போட்டியிடுகிறார். அ.தி.மு.க வேட்பாளரை விட ஆ.ராசாவுக்கு மிகப் பெரிய அளவில் அந்தத் தொகுதியில் செல்வாக்கு நிலவுகிறது. ஆ.ராசாவின் வெற்றி, உறுதி செய்யப்பட்ட ஒன்றாகவே அந்தப் பகுதியில் கருதுகின்றனர்.

தோல்வி பயத்தில் மு.க.ஸ்டாலின் ஏதேதோ பேசுகிறார்: எடப்பாடி பழனிசாமி

கொங்குமண்டலத்தை பொறுத்தவரை கவுண்டர்கள் மற்றும் நாயக்கர்கள் அதிகமாக வசிக்கும் பகுதி. எனவே, அரசியிலில் அந்த மக்களின் பங்களிப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக உள்ளது.

எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா காலத்தில், கவுண்டர்கள், நாயக்கர்களின் ஆதரவு இருந்துவந்தது. அந்த வாக்குவங்கியை தற்காத்துக்கொள்ள அ.தி.மு.க முயன்றுவருகிறது. அதேபோல, கொங்கு மண்டலத்தில், எஸ்.சி, எஸ்.டி, தேவர், முஸ்லீம், கிறிஸ்டின் பிரிவைச் சேர்ந்த மக்களும் கணிசமான அளவில் உள்ளனர்.

திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி என்று பொய்பிரசாரம் நடக்கிறது - மு.க ஸ்டாலின்

அ.தி.மு.கவின் வாக்குவங்கியை மிக அதிக அளவில் டி.டி.வி.தினகரன் பிரித்துவிடுவார் என்று தெரிகிறது. கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்கள் இந்த தொகுதியில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்பது தேர்தல் முடிவுக்குப் பிறகுதான் தெரியும். எந்தக் கட்சிக்கு செல்லவேண்டிய வாக்குகள் மக்கள் நீதி மய்யத்துக்கு செல்லும் என்பதும் தேர்தல் முடிவுக்குப் பிறகுதான் தெரியும்.

தமிழகத்தைப் பொறுத்தவரை எப்போதும், மாநிலப் பிரச்னைகள் தேர்தல் முடிவுகளில் பிரதானமான ஒன்றாக இருந்துவருகிறது. கடந்த ஒருவருட காலமாகவே, பிரதமர் மோடி, தமிழ்நாட்டு வரும்போதெல்லாம் கோபேக்மோடி ஹேஷ்டேக் டிரெண்ட் ஆகிவருகிறது.

பா.ஜ.கவுடன் அ.தி.மு.க கூட்டணி வைத்தது, அக்கட்சியினர் பலருக்கே பிடிக்காத ஒரு விஷயமாக உள்ளது. நீட் தேர்வு உள்ளிட்ட விவகாரங்களில் மத்திய அரசு மீது, இன்னும் கடும் எதிர்ப்பு நிலவிவருகிறது. சேலம் - சென்னை எட்டுவழிச்சாலைத் திட்டமும் மக்களிடம் பெரும் எதிர்ப்புகளை உருவாக்கியுள்ளது. எனவே, அ.தி.மு.க தலைமையிலான கூட்டணிக்கு இந்தத் தேர்தல் கடும் சவாலாக இருக்கும் என்று தெரிகிறது.

Also see:

First published: April 1, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading