Home /News /tamil-nadu /

கேரள அரசு வழங்க முன்வந்த தண்ணீரை ஏற்க மறுத்தது கண்டனத்திற்குரியது! - மு.க.ஸ்டாலின்

கேரள அரசு வழங்க முன்வந்த தண்ணீரை ஏற்க மறுத்தது கண்டனத்திற்குரியது! - மு.க.ஸ்டாலின்

ஸ்டாலின்

ஸ்டாலின்

கேரள மாநில அரசு வழங்க முன் வந்த தண்ணீரை ஏற்க மறுத்துள்ளது கண்டனத்திற்குரியது என்று மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வருகின்ற 28.6.2019 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் தொடங்கும்" என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கூட்டம் துவங்கும் அன்றைய தினமே தமிழகத்தில் நிலவும் கடுமையான குடிநீர் பிரச்னை குறித்து முழுமையாக விவாதிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகியுள்ளது. காலிக்குடங்களுடன் அலையும் தாய்மார்கள், தண்ணீருக்காக மறியல் போராட்டங்களில் ஈடுபடும் பொதுமக்கள் என - எங்கும் மக்களின் தன்னெழுச்சியான போராட்டங்கள் நடைபெற்று வருவதை அரசு முதலில் உணர வேண்டும்.

பள்ளிகள், கல்லூரிகள், தங்கும் விடுதிகள், உணவகங்கள், ஐ.டி கம்பெனிகள் என்று அனைத்து மட்டத்திலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள வரலாறு காணாத "தண்ணீர் நெருக்கடி" ஏற்கனவே நலிவடைந்துள்ள மாநிலத்தின் பொருளாதார முன்னேற்றத்தையும், வளர்ச்சியையும் மேலும் சீர்குலைக்கும் விதத்தில் அமைந்துள்ளது. இவ்வளவு போராட்டங்களுக்குப் பிறகும், தண்ணீர் பிரச்னை எங்கும் தாண்டவமாடுகின்ற மிக மோசமான சூழ்நிலையிலும் கூட "குடிநீர் பற்றாக்குறை என்பது வதந்தி", "குடிநீர் பிரச்னை என்பது உருவாக்கப்படும் ஒரு மாயத் தோற்றம்" என்றெல்லாம் உள்ளாட்சித்துறை அமைச்சர் உள்ளிட்ட மற்ற அமைச்சர்களும், முதலமைச்சரும் பொறுப்பற்ற முறையில் பேசி வருவது மிகுந்த வேதனைக்குறியது மட்டுமல்ல- போராடும் மக்களின் உணர்வுகளை கொச்சைப்படுத்துவது ஆகும். இனிமேலாவது இப்படிப்பட்ட பேட்டிகள் கொடுப்பதை அமைச்சர்கள் நிறுத்திக்கொண்டு குடிநீர் பிரச்னையை சமாளிக்க எடுக்கப்பட வேண்டிய ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் மட்டும் முனைப்புக் காட்டவேண்டும் என்பதே வாக்களித்த மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

இதற்கிடையில் சாதாரண மக்கள் தண்ணீருக்காக அங்கும் இங்கும் அலைந்து போராடிக் கொண்டிருக்கின்ற நிலையில், அமைச்சர்களின் இல்லங்களுக்கு மட்டும் தண்ணீர் டேங்கர் லாரிகள் மூலம் தாராளமாக சப்ளை செய்யப்படுகின்றன என்று வரும் செய்திகள் மக்களுக்கு எரிச்சலையே ஏற்படுத்தும். "அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர்" என்பதுதான் பொறுப்புள்ள ஒரு அரசின் முக்கிய இலக்கு. அந்த பொறுப்பினை நிறைவேற்றும் வகையில் அனைவருக்கும் குடிநீர் கிடைத்திட ஆவண செய்து "தண்ணீர் பிரச்னையை" சமாளிக்க அரசு முன்வர வேண்டும். சென்னை மெட்ரோ வாட்டரில் "ஆன்லைன் புக்கிங்" செய்து விட்டு- 20 முதல் 25 நாட்கள் வரை தண்ணீர் லாரிகளுக்காக குடியிருப்பு வாசிகள் காத்திருப்பது கொடுமையிலும் கொடுமை. குடிநீர் பிரச்னையை சமாளிக்க கேரள மாநில அரசு வழங்க முன் வந்த தண்ணீரை ஏற்க மறுத்துள்ளது கண்டனத்திற்குரியது. கேரள முதல்வர் அளிக்க முன் வந்த தண்ணீரை அதிமுக ஆரசு உடனடியாக பெற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

சென்னை மாநகரம் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் நிலவும் கடுமையான குடிநீர் பஞ்சம் குறித்து அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களின் கருத்துக்களை கேட்டறியவும், குடிநீர் பிரச்னையை சமாளிக்கத் தேவையான ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கவும், மாண்புமிகு முதலமைச்சரே சட்டமன்றக் கூட்டத்தொடர் துவங்கும் 28-ம் தேதியே ஒரு சிறப்புத் தீர்மானத்தை அவையில் கொண்டு வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அந்த தீர்மானத்தின் மீது முழுமையான விவாதம் நடத்தி, பொதுமக்கள் நிம்மதியடையும் வகையில் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு கண்டிட வேண்டும் என்றும், அதற்கு ஆக்கபூர்வமான ஒத்துழைப்பு நல்கிட திராவிட முன்னேற்றக் கழகம் தயாராக இருக்கிறது என்றும் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
Published by:Ilavarasan M
First published:

Tags: DMK, M.K.Stalin, Save Water, Water Crisis

அடுத்த செய்தி