வாக்கு எண்ணிக்கை மையங்களில் விதிமீறல்கள் - தி.மு.க சார்பில் புகார்

வாக்கு எண்ணிக்கை மையங்களில் விதிமீறல்கள் - தி.மு.க சார்பில் புகார்

பொன்முடி

தேர்தல் ஆணையத்தின் மீது நம்பிக்கை குறைந்துவருகின்றது என்று தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

 • Share this:
  வாக்கு எண்ணிக்கை மையத்தில் விதிமீறல்கள் நடப்பதாக மு.க.ஸ்டாலின் சார்பில் தி.மு.க தலைவர்கள் பொன்முடி, ஆ.ராசா, ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு அளித்தனர். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பொன்முடி, ‘திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தரப்பில் புகார் மனு அளித்துள்ளோம். 13-ம் தேதி கோவையிலும், 14-ம் தேதி திருவள்ளுரில், 15-ம் தேதி லயோலா கல்லூரியில் வெளி நபர்கள் உள்ளே நுழைந்துள்ளனர். தற்காலிக கழிப்பறைகள் கொண்டு சென்றதாக கூறும் விளக்கம் ஏற்கும்படியாக இல்லை. ராமநாதபுரத்தில் லேப்டாப் டெக்னீசியன் என 31 பேர் எண்ணிக்கை மையத்துக்கு சென்று வருகின்றனர்.

  இதுபோன்ற அத்துமீறல்கள் குறித்து நடவடிக்கை எடுக்க தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் சார்பில் புகார் மனு அளித்துள்ளோம். தேர்தல் ஆணையம் மீது நம்பிக்கை குறைந்து வருகிறது. வாக்கு எண்ணிக்கை மையத்தில் விதிமீறி செல்வதை எப்படி அனுமதிக்கின்றனர்? அமைச்சர்கள் போட்டியிடும் தொகுதிகளில் தான் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுகிறது. மத்திய, மாநில அரசுகள் சேர்ந்து தேர்தல் ஆணையத்தை ஆட்டிவைப்பதாக சந்தேகம் எழுகிறது’ என்று தெரிவித்தார்.

  தொடர்ந்து பேசிய ஆர்.எஸ்.பாரதி, ‘எப்போதும் போல நடவடிக்கை எடுக்கிறேன் என்கிறார் சத்ய பிரதா சாகு. இரண்டு நாட்களில் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவேண்டும். உயர்நீதிமன்ற அறிவுறுத்தல்களை பின்பற்றவில்லை என்றால் அவமதிப்பு வழக்கு தொடருவோம்’ என்று எச்சரிக்கைவிடுத்தார்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: