திருமங்கலத்தில் அதிமுகவினர் பரிசுப் பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக புகார் : விசாரணை நடத்திய பறக்கும்படை

திருமங்கலத்தில் அதிமுகவினர் பரிசுப் பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக புகார் : விசாரணை நடத்திய பறக்கும்படை

குடோனில் இருந்த பொருட்கள்

குடோனில் பல கோடி ரூபாய் பணம் இருப்பதாகவும் உடனடியாக திறக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்....

 • Share this:
  மதுரை மாவட்டம் திருமங்கலம் கப்பலூர் தொழிற்பேட்டையில் அதிமுகவினர் பரிசுப் பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக திமுகவினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பறக்கும்படை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர் காலதாமதம் ஆனதால் திமுகவினர் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

  திருமங்கலம் அருகே கப்பலூர் தொழிற்பேட்டையில் உள்ள தொழில் அதிபர் சங்க குடோனில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் படம் பொறித்த பரிசுப் பொருட்கள் கம்ப்யூட்டர் இருப்பதாக திமுகவினர் குடோனுக்கு முன்பு வந்தனர் மேலும் பறக்கும் படை அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் கொடுத்தனர் தகவலின் அடிப்படையில் பறக்கும் படையினர் விரைந்து வந்து போலீசார் உதவியுடன் விசாரணை மேற்கொண்டனர்.  மேலும், பரிசு பொருட்கள் இருந்த குடோன் பூட்டு திறக்கப்படாததால் திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

  இது குறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்து, விசாரணை மேற்கொண்டனர்.  நடவடிக்கை மேற்கொள்ளா விட்டால் திமுகவினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தனர், அத்துடன், குடோனில் பல கோடி ரூபாய் பணம் இருப்பதாகவும் உடனடியாக திறக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

  இதனால் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, குடோனை தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் சௌந்தர்யா தலைமையில் குடோன் ஷட்டர் பூட்டை உடைத்து உள்ளே சென்ற போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அதிகாரிகள் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடத்திய சோதனையில் 500 கம்ப்யூட்டர்கள் 1500 பிளாஸ்டிக் வாளிகள் மற்றும் அதிமுக சின்னம் அச்சடிக்கப்பட்ட பத்தாயிரம் கவர்கள் பரிசுப்பொருட்கள் இருந்தது.

  இது குறித்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில், ஜெயலலிதா கோவில் திறப்பு விழாவில் கலந்து கொண்ட அதிமுக வழக்கறிஞர்கள் அணியைச் சேர்ந்தவர்களுக்கு வழங்குவதற்காக அம்மா சாரிடபிள் டிரஸ்ட் சார்பாக கொடுக்கப்பட்டது எனவும் தேர்தல் நன்னடத்தை விதிமுறை காரணமாக பொருட்கள் வழங்க முடியாததால் குடோனில் வைத்திருந்ததாகவும் அதிமுகவினர் தெரிவித்தனர்.

  Must Read : சாதி, மதங்கள் நமது அடையாளம் இல்லை.. மொழி ஒன்றே நமது அடையாளம் - சீமான்

   

  இதனையடுத்து, குடோனிலுள்ள பொருட்களுக்கு உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பொருட்களை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என தேர்தல் நடத்தும் அலுவலர் சௌந்தர்யா அதிமுகவினரிடம் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து  பொருட்களை பறிமுதல் செய்து திருமங்கலம் தாசில்தார் இல்லத்தில் பாதுகாப்பாக வைக்கப்படும்  என தேர்தல் அதிகாரி சௌந்தர்யா தெரிவித்தார்.
  Published by:Suresh V
  First published: