வாக்காளர்களிடம் இருந்து வாக்காளர் அட்டை மற்றும் செல்பேசி எண் தகவல்களை பெற்று கூகுள் பே போன் பே மற்றும் பேடிஎம் மூலம் அதிமுகவினர் பணப்பட்டுவாடா செய்தவாகவும் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரி, தலைமை தேர்தல் ஆணையரு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி புகார் மனு கொடுத்துள்ளார்.
திமுக சார்பில் அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர். எஸ். பாரதி எம்.பி இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கும், தமிழ்நாடு தமிழக தலைமை தேர்தல் அலுவலருக்கும் புகார் மனு ஒன்றினை கொடுத்துள்ளார்.
அந்த மனுவில், “தமிழகத்தில் உள்ள பல்வேறு தொகுதிகளில் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் ஒவ்வொரு வாக்காளர் வீட்டிற்கும் சென்று அவர்களது வாக்காளர் அட்டை நகல்களையும், அவர்களின் செல்பேசி எண்களையும் பெற்று வருகிறார்கள். குறிப்பாக திமுக தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் போட்டியிடும் கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில், நேற்று இரவு பல்வேறு இடங்களில் அதிமுகவினர் வாக்காளர்களிடம் இருந்து அவர்களது அடையாள அட்டை விவரங்களையும், அவர்களது செல்பேசி எண்களையும் பெற்றுவருகின்றனர்.
வாக்காளர்களுக்கு கூகுள் பே, போன்பே, பே-டிஎம் ஆன்லைன் மூலமாக பணப்பட்டுவாடா செய்வதற்காக அவர்களது தொலைபேசி எண்களின் விவரங்கள் அதிமுகவினரால் பெறப்பட்டு வருகின்றன. மேலும் தொகுதிக்கு வெளியே வாக்காளர்களை அழைத்து வந்து அவர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதற்கும் அதிமுக முயற்சி செய்து வருகிறது.
இதுபோன்று தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு தொகுதிகளில் அதிமுகவினர் முறைகேட்டில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் ஆணையத்தின் பறக்கும்படை மற்றும் சோதனை சாவடிகளில், ஒருவரிடம் இருந்து பணத்தை கைப்பற்றுவதற்காக மட்டுமே சோதனை நடத்துவதோடு அல்லாமல் அவர்களிடம் வாக்காளர்களின் அடையாள அட்டை தகவல்கள் மற்றும் அவர்களது செல்பேசி எண் தகவல்கள் இருந்தால் அதனையும் கைப்பற்றவேண்டும் என்று அவர்களுக்கு உரிய வழிமுறைகளை அறிவுறுத்த வேண்டும்.
அதிமுகவினரின் இதுபோன்ற தேர்தல் முறைகேடுகளை தடுக்காவிட்டால், அது நேர்மையான மற்றும் நியாயமான தேர்தலை பாதிக்கும். ஆகவே இந்த புகார் மீது உடனடியாக சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும், தேர்தல் ஆணைய அலுவலர்களுக்கு உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும்” என்று கோரப்பட்டுள்ளது.
இந்த மனுவை திமுக தலைமைக் கழக வழக்கறிஞர்கள் ஆர். நீலகண்டன் மற்றும் ஜெ.பச்சையப்பன் ஆகியோர் தமிழக இணைத் தலைமைத் தேர்தல் அலுவலர் திரு ஆனந்த் அவர்களிடம் நேரில் கொடுத்தனர்.
Must Read : திருச்சியில் எம்.எல்.ஏ மகன் காரிலிருந்து ரூ.1 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம்
தமிழக சட்டமன்ற தேர்தல் இம்மாதம் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால், அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். 4 ஆம் தேதியுடன் பிரச்சாரம் நிறைவடைய உள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: DMK, Election Commission, Google pay, Paytm, TN Assembly Election 2021