தி.மு.கவின் சட்டமன்ற குழுத் தலைவராக மு.க.ஸ்டாலின் ஒரு மனதாக தேர்வு

திமுக தலைவர் ஸ்டாலின்

தி.மு.கவின் சட்டமன்ற கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலின் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

  • Share this:
    தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 2-ம் தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கையின் முடிவில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க 159 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தி.மு.க மட்டும் தனியாக 125 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கவுள்ளது. தமிழகத்தின் அடுத்த முதல்வராக பதவியேற்கவுள்ள மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட தேசியத் தலைவர்கள் ட்விட்டர் வாயிலாகவும் தொலைபேசி வாயிலாகவும் வாழ்த்து தெரிவித்தனர்.

    அதைப்போல, தமிழக அரசியல் கட்சித் தலைவர்களான முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டவர்களும் வாழ்த்து தெரிவித்தனர். அதனையடுத்து, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மே 7-ம் தேதி முதல்வராக பதவியேற்கவுள்ளார் என்று அக்கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது.

    இந்தநிலையில், சென்னை தேனாம்பேட்டையிலுள்ள அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 125 பேர் மற்றும் தி.மு.கவின் உதயசூரியன் சின்னத்தில் வெற்றிபெற்ற ம.தி.மு.கவைச் சேர்ந்த 4 பேரும், மனிதநேய மக்கள் கட்சியைச் சேர்ந்த 2 பேரும், கொமதே கட்சியை சேர்ந்த ஒருவரும், தவாக கட்சியை சேர்ந்த ஒருவர் உட்பட 133 பேர் கலந்துகொண்டனர்.

    அந்தக் கூட்டத்தில் தி.மு.கவின் சட்டமன்ற கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலினை அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் முன்மொழிந்தார். அதனையடுத்து, அக்கட்சி எம்.எல்.ஏக்கள் ஒரு மனதாக மு.க.ஸ்டாலின் தி.மு.க சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்ந்தெடுத்தனர். அதனையடுத்து, நாளை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தைச் சந்தித்து மு.க.ஸ்டாலின் ஆட்சியமைக்க உரிமை கோரவுள்ளார்.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Karthick S
    First published: