அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வேட்புமனு குறித்து தேர்தல் அதிகாரியிடம் தி.மு.க வேட்பாளர் புகார்

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வேட்புமனு குறித்து தேர்தல் அதிகாரியிடம் தி.மு.க வேட்பாளர் புகார்

கார்த்திகேய சிவசேனாபதி, வேலுமணி

அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வேட்புமனு குறித்து தேர்தல் அதிகாரியிடம் தி.மு.க வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி புகார் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் வேட்பு மனுத்தாக்கல் செய்யப்பட்டதில், வருமானம் தொடர்பான ஆவணங்களை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முறையாக சமர்பிக்கவில்லை எனக்கூறி பேரூர் தேர்தல் அலுவலர் செந்தில் அரசன் மற்றும் தேர்தல் பார்வையாளரிடம் திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி புகார் அளித்துள்ளார்.

    கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி போட்டியிடுகிறார். தி.மு.க சார்பில் அக்கட்சியின் சுற்றுச்சூழல் அணி கார்த்திகேய சிவசேனாபதி போட்டியிடுகிறார். வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தநிலையில் இன்று வேட்புமனு பரிசீலனை தொடங்கியுள்ளது. மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, உதயநிதி ஸ்டாலின், டி.டி.வி.தினகரன் உள்ளிட்டவர்களின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.

    இந்தநிலையில், தொண்டாமுத்தூர் தொகுதியில் பேரூர் தேர்தல் அலுவலர் செந்திலரசன் மற்றும் தேர்தல் பார்வையாளரிடம் திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வருமானம் தொடர்பான ஆவணங்களை முறையாக சமர்பிக்கவில்லை என்று புகார் தெரிவித்துள்ளார். புகார் அளித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய கார்த்திகேய சிவசேனாபதி, ‘என்னுடைய வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது. அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வேட்புமனு நிறைய குறைபாடுகளுடன் இருக்கின்றது. அதில் நிறைய குறைபாடு, பொய்கள் இருக்கின்றது. அமைச்சருடைய வேட்புமனுவை நிராகரிக்க வேண்டும் என தேர்தல் அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தோம். அவருடைய வேட்புமனுவில் வருமானம் எப்படி வந்தது என்பதற்கான ஆதாரங்கள் இல்லை. அவரது மனைவின் வருமானம் கூடி இருக்கின்றது. 70 லட்சம் ரூபாய் எப்படி கூடியிருக்கின்றது என்ற கேள்விக்கு விடை இல்லை.

    ஒரு தலைபட்சமாக தேர்தல் ஆணையம் நடந்து கொள்கின்றது. வேலுமணியின் மகன் வருமானம் இல்லாமல் எப்படி சொந்தமாக ஹெலிகாப்டர் வாங்கி பயணிக்கின்றார் என தெரியவில்லை. இவற்றை மக்களை சந்தித்து சொல்வோம். அவரது வருவாய்க்கும் அவர் காட்டிய கணக்குக்கும் தொடர்பில்லை. சூயஸ் திட்டத்திற்கும் கூடுதலாக வந்திருக்கும் வருமானத்திற்கும், அமைச்சரின் மகன் ஆஸ்திரேலியா சென்று வந்ததற்கும் தொடர்பு இருக்கின்றதா என்பதை செய்தியாளர்கள்தான் விசாரிக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Karthick S
    First published: