திருச்சியில் போலீஸுக்கு பணம் பட்டுவாடா.... கே.என்.நேரு மீது அதிமுக புகார்

கே.என்.நேரு

திருச்சி மேற்கு தொகுதி தி.மு.க வேட்பாளர் கே.என்.நேருவை தகுதி நீக்கம் செய்யவேண்டும் என்று அ.தி.மு.க வேட்பாளர் பத்மநாதன் புகார் அளித்துள்ளார்.

 • Share this:
  திருச்சி மாவட்டத்தில், தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் நேற்று முதல் தங்களது தபால் ஓட்டுகளை செலுத்தி வருகின்றனர். முதல் நாளான 26ஆம் தேதி மண்டல அலுவலர்கள், பறக்கும் படையினர், கண்காணிப்புக்கு குழுவினர் உள்ளிட்டோர் வாக்களித்தனர். இதனைத் தொடர்ந்து நேற்றைய தினம் (27ம் தேதி) வாக்குச் சாவடி நிலைய அலுவலர்கள் வாக்களித்தனர். இதன்படி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளிலும் மொத்தம் 8, 194 பேர் வாக்களித்துள்ளனர்.

  தொடர்ந்து, திருச்சி மாநகர போலீசார், இன்று தங்களது தபால் வாக்குகளைச் செலுத்திவருகின்றனர். இந்நிலையில், திருச்சி மேற்குத் தொகுதிக்குட்பட்ட, தில்லைநகர், உறையூர், அரசு மருத்துவமனை, நீதிமன்றம், எடமலைப்பட்டிபுதூர், கண்டோன்மெண்ட் ஆகிய காவல் நிலையங்களில் பணியாற்றும் அதிகாரிகள் முதல், காவலர்கள் வரை, அவர்கள் 'தகுதிக்கேற்ப' கவர்களில் பணம் வைத்து விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக தகவலறிந்த மாநகர காவல் ஆணையர் லோகநாதன் திடீர் ஆய்வு செய்தார். இதில் சுமார் 100 கவர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

  போலீசார் மற்றும் வருமான வரித்துறையினர், வருவாய்துறையினர் ரகசிய விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் திருச்சி மேற்கு தொகுதிக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் பணப்பட்டுவாடா விவகாரத்தில் காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் மாநகர காவலர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் திருச்சி அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  இந்தநிலையில், திருச்சி மேற்குத் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் பத்மநாதன், தி.மு.க வேட்பாளர் கே.என்.நேரு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட வருவாய் அலுவலரிடம் புகார் அளித்துள்ளார். புகார் அளித்தபிறகு செய்தியாளர்களிடம் பேசிய பத்மநாபன், ‘தி.மு.க வேட்பாளர் கே.என்.நேருவை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். ஜனநாயக முறைப்படி தேர்தல் நடந்தால் நிச்சயமாக நான் வெற்றி பெறுவேன். சம்பந்தப்பட்ட காவல் நிலைய காவலர்களை பணியிடை நீக்கம் செய்திருப்பது மற்றும் தி.மு.க வழக்கறிஞரை மீது வழக்கு பதிந்து இருப்பதன் மூலம் அவர்கள் தவறு செய்து இருப்பது உறுதியாகி உள்ளது’ என்று தெரிவித்தார். சட்ட விரோதமாக பணம் பட்டுவாடா செய்த நேருவை கைது செய்ய வேண்டும் என்று அ.தி.மு.கவினர் கோஷம் எழுப்பினர்.


  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: