செல்லூர் ராஜூக்கு எதிராக தெர்மாகோலுடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்த தி.மு.க வேட்பாளர் சின்னம்மா

திமுக வேட்பாளர் சின்னம்மா

அமைச்சர் செல்லூர் ராஜூவை கேலி செய்யும் விதமாக, அவரை எதிர்த்து போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் சின்னம்மா தெர்மாகோலுடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்தார்.

  • Share this:
மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் மூன்றாவது முறையாக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து தி.மு.க சார்பில் சின்னம்மா என்ற வேட்பாளர் முதன் முறையாக சட்டமன்ற தேர்தல் களம் காண்கிறார்.

மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வந்த சின்னம்மா, தொண்டர்கள் புடை சூழ தெர்மகோல் சகிதமாக காட்சியளித்தார். அதில், "தெர்மாகோல் ரூ.10 லட்சம் ப்பே... தெர்மாகோல் ராஜூவை துரத்தியடிப்போம்", "கோமாளி - துக்ளக் ஊழல்வாதிகளை விரட்டியடிப்போம்", "ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் வீழ்த்துவோம்" என்ற வாசகங்கள் இடம்பெற்று இருந்தன.

அமைச்சர் செல்லூர் ராஜூவை கிண்டலடிக்கும் விதமாக இடம்பெற்று இருந்த இந்த வாசகங்களால் சிறிது நேரம் சலசலப்பு நிலவியது.

வேட்புமனு தாக்கலிற்கு முன்னர், சின்னம்மா உள்ளிட்ட நான்கு வேட்பாளர்களுக்கு வாக்கு கேட்டு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மதுரையில் பிரச்சாரம் செய்தார். அப்போது சின்னம்மாவை அறிமுகம் செய்து பேசியவர், கோமாளி அமைச்சர் செல்லூர் ராஜூவுக்கு பாடம் புகட்ட சின்னம்மா நிறுத்தப்பட்டுள்ளார் எனவும், அந்த தெர்மாகோல் அமைச்சரை வீட்டுக்கு அனுப்ப தி.மு.கவிற்கு வாக்களிக்க வேண்டும் என்றும் பேசினார்.

இதற்கு முன்னர் நியூஸ் 18 க்கு அளித்த பிரத்யேக பேட்டியிலும், "தெர்மாகோல் என்ற ஒற்றை வார்த்தையை பயன்படுத்தி அமைச்சர் செல்லூர் ராஜுவை வென்று வா..." என மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி இருந்ததாகவும் சின்னம்மா தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் தான் இன்று தெர்மாகோல் சகிதமாக வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார். இனி அவர் செய்யவுள்ள அடுத்தக்கட்ட பிரச்சாரங்கள் அனைத்திலும் தெர்மாகோல் இடம்பெறும் என்றும் கூறியுள்ளார்.உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Karthick S
First published: