தி.மு.க மாநாடு: ஐபேக் குழு கடும் கெடுபிடி: கட்டுக்கடங்காத தொண்டர்கள் - பின்வாங்கிய ஐபேக்

தி.மு.க மாநாடு: ஐபேக் குழு கடும் கெடுபிடி: கட்டுக்கடங்காத தொண்டர்கள் - பின்வாங்கிய ஐபேக்

திருச்சி திமுக மாநாடு

திருச்சி தி.மு.க மாநாட்டில் ஐபேக் குழுவினர் கெடுபிடி காட்டியதால் தி.மு.க தொண்டர்கள் அதிருப்தி அடைந்தனர்.

  • Share this:
திருச்சி மாவட்டம் சிறுகனூரில் திமுகவின்பிரம்மாண்ட பொதுக் கூட்டம்நேற்று நடைபெற்றது. மதியம் 12.40 மணியளவில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் 90 அடி உயரக் கம்பத்தில் கொடியேற்றி பொதுக் கூட்ட நிகழ்வைத் தொடங்கி வைத்தார். பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, இளைஞரணிச் செயலாளர் உதயநிதி, முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, பொன்முடி,  எ.வ.வேலு, ஆ.ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதையடுத்து மாலை 4.30 மணியளவில் பொருளாதாரம், வேளாண்மை, சுற்றுச் சூழல், கல்வி, உள்கட்டமைப்பு, சமூகநீதி உள்ளிட்ட  தலைப்புகளில் கருத்தரங்கு நடைபெற்றது. விவசாய சங்க தலைவர் தீட்சிதர் பாலு, சுற்றுச்சூழல் குறித்து பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன், கல்வி குறித்து கல்வியலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு, உள்கட்டமைப்பு  குறித்து சுப வீரபாண்டியன், சமூகநிதி குறித்து மதிமாறன், பொருளாதாரம் குறித்து ஜெயரஞ்சன், பொது சுகாதாரம் குறித்து ரவீந்திரநாத் ஆகியோர் பேசினர்.

திமுக மாநாட்டில் தொண்டர்கள்


தொடர்ந்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், நவீன தமிழ்நாட்டை தி.மு.க கட்டமைத்தது. இந்த கட்டமைப்பை அ.தி.மு.க சிதைத்து வருகிறது. தமிழ்நாட்டை முன்னேற்ற 7 முக்கிய துறைகளை சீரமைத்து, தொலைநோக்கு பார்வையின் 7 உறுதிமொழிகளை அளித்தார். குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் ₹ 1, 000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்பன உள்ளிட்ட திட்டங்களை விளக்கிப் பேசினார்.

அ.தி.மு.க ஆட்சிக்கு கவுன்டன் ஸ்டார்ட்... அ.தி.மு.க ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம். தி.மு.க ஆட்சிக்கு தொடக்கப்புள்ளி வைப்போம் என்றார் உற்சாகமாக. இதே உற்சாகம் தொண்டர்களிடத்திலும் இருந்தது.

ஆனால், தொண்டர்கள் தொடங்கி நிர்வாகிகள் வரை ஜபேக் நிறுவனத்தினரால் அலைக்கழிக்கப்பட்டனர்.  பல இடங்களில் கடும் வாக்குவாதம் நடைபெற்றது. ஐபேக் ஊழியர்கள் தி.மு.க தொண்டர்களிடம் இந்தியில் உரக்க கத்தி வாக்குவாதம் செய்ய, எதுவும் புரியாமல் தொண்டர்களின் கோபத்தைத்தான் அதிகப்படுத்தியது. அவர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் ஐபேக் குழு திணறியது. பல இடங்களில் பின்வாங்கி ஓடினர். இது போன்ற கெடுபிடிகள் உற்சாகத்தோடு இருந்தவர்களை அதிருப்திக்குள்ளாக்கியது. தலைவரையும் மற்ற நிர்வாகிகளையும் அருகில் நின்று  பார்க்க முடியவில்லை என்று புலம்பினர்.

பொதுக்கூட்டத்திற்கு நேரில்வந்து அங்குள்ள திரையில் மட்டும் அருகில் பார்த்து ஆறுதல்பட்டுக் கொண்டனர். மற்ற நிர்வாகிகள் அமர்ந்திருந்த மேடைக்கு அருகில் திரண்ட தொண்டர்கள், ஒருகட்டத்தில் தடுப்புகளை உடைத்துக் கொண்டும், ஐபேக் ஆட்கள், தனியார் பாதுகாவலர்களைத் தள்ளிக் கொண்டும் மேடைக்கு முன்பாக வந்து அமர்ந்தனர். தொண்டர்களின் திடீர் பாய்ச்சலை சற்றும் எதிர்பார்க்காத ஐபேக் குழு பின்வாங்கி தலைதெறிக்க ஓடியது.

டி.கே.எஸ் இளங்கோவன், எ.வ.வேலு போன்றவர்கள் மைக்கில் தொடர்ந்து வேண்டுகோள் விடுக்கவே தொண்டர்கள் கொஞ்சம் கட்டுப்பட்டனர். மாநாடு ஏற்பாடு செய்யப்பட்ட இடத்தில், பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்தை மாநாடு போலவே,  வழக்கத்தை விட ஹைடெக்காக நடத்தினர். கருத்தரங்கைத் தொடர்ந்து, திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு வரவேற்புரையைத் தொடர்ந்து, பொருளாளர் டி.ஆர்.பாலு, பொதுச் செயலாளர் துரைமுருகன் இருவரும் சுருக்கமாக பேசி முடித்தனர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நிறைவுரையாற்றினார். அனைத்து மாவட்ட, மாநில நிர்வாகிகளும் வருகை தந்திருந்த போதும், திருச்சி சிவா, பொன்முடி, கம்பம் செல்வேந்திரன், ஆ.ராஜா போன்ற சிறந்த பேச்சாளர்களுக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. திறந்தவெளியில் 3 மேடைகள் அமைக்கப்பட்டிருந்தன. நடுவில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் மட்டும் அமர்ந்திருந்தனர். தொண்டர்களுக்கும் மேடைக்கும் 100 அடி இடைவெளி இருந்து மேடைக்கு நடுவிலிருந்து தொண்டர்கள் அமர்ந்திருந்த பகுதிக்கு T வடிவ பாதை அமைக்கப்பட்டு, அதில் மு.க.ஸ்டாலின் நடந்து சென்று தொண்டர்களைச் சந்தித்தார்.

அவர் பேசத் தொடங்கும் போது சிறிது நேரமும் பேசி முடித்ததும் 5  நிமிடமும் தொடர் வான வேடிக்கை நடத்தப்பட்டது. பொதுக்கூட்ட திடலில் போலீஸ் எண்ணிக்கை சொற்ப எண்ணிக்கையிலேயே இருந்தது. அதேநேரம் தனியார் பாதுகாவலர்கள் சீருடையில் மிடுக்காய் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.

நுழைவாயில் முதல் மேடை வரை  மாறுபட்ட அனுபவமாக, இருந்ததாக தொண்டர்கள் தெரிவித்தனர். அதேநேரத்தில் கெடுபிடியை தவிர்த்திருக்கலாம் என்றும் கூறினர். ஏற்கனவே திமுக மூத்த நிிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் பலரும் ஐபேக் குழுவோடு அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுவதையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.


உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Karthick S
First published: