தமிழ் புத்தாண்டையொட்டி அரசியல் கட்சிககள் இன்று மாலை தேநீர் விருந்தில் பங்கேற்க ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்துள்ளார். இதனை புறக்கணிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முதலில் தெரிவித்திருந்தது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநில அரசின் அதிகாரத்தை மீறி ஆளுநர் அதிகார மையமாக செயல்படுவதாக குற்றம் சாட்டியுள்ளது.
நீட் மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாதது போன்ற காரணங்களை பட்டியலிட்டு, ஆளுநரின் விருந்தை புறக்கணிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது. இதேபோல, தமிழர் உணர்வுகளை அவமதிக்கும் வகையில் செயல்பட்டு வரும் ஆளுநர் தேநீர் விருந்துக்கு அழைப்பது, தமிழகத் தலைவர்களைக் கேலி செய்வதாக உள்ளது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தெரிவித்துள்ளது. மேலும், தமிழர் விரோதப் போக்கிற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ஆளுநரின், தேநீர் விருந்து அழைப்பை புறக்கணிப்பதாகவும் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.
இந்நிலையில், தமிழக மக்களின் நலன்களுக்கு எதிராகச் செயல்பட்டு வரும் தமிழக ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தினை, புறக்கணிப்பதாக மனிதநேய மக்கள் கட்சி தெரிவித்துள்ளது. இதேபோன்று, ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசனும் தெரிவித்துள்ளார். அதேபோல பாமகவும் புறக்கணித்துள்ளது.
இந்நிலையில், இன்று மாலை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் திமுக பங்கேற்காது என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
Must Read : இலங்கைக்கு ஏற்பட்ட நிலை இந்தியாவிலும் ஏற்படும் - ப.சிதம்பரம் எச்சரிக்கை
மேலும், நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைக்காமல் இருக்கிறார் என்றும், நீட் மசோதாவை நிலுவையில் வைத்திருப்பது வருத்தம் அளிப்பதாகவும், தமிழக ஆளுநரை சந்தித்தபின் அமைச்சர்கள் தங்கம்தென்னரசு மற்றும் மா.சுப்பிரமணியன் ஆகியோர் கூட்டாக அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளனர். மேலும், தேநீர் விருந்தில் கலந்துகொள்வது சட்டமன்றத்தின் மாண்பை குழைப்பதாக இருக்கும் என்றும் கூறியுள்ளனர்.
இதனிடையே, ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ் கட்சியும் அறிவித்துள்ளது. அக்கட்சியின் சட்டமன்ற குழுத் தலைவர் செல்வப்பெருந்தகை நியூஸ்18 தமிழுக்கு பிரத்யேக தகவலை அளித்துள்ளார். இதன் மூலம் ஆளும் கூட்டணி முழுமையாக ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிக்கும் முடிவை கையில் எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: DMK, RN Ravi, Tamil Nadu Governor