தமிழ்நாட்டில் ஒளிபரப்பாகும் பொழுதுபோக்கு சேனல்களில் பாடல்கள் பாடுவது, நடனம் ஆடுவது, காமெடி நிகழ்ச்சிகள் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெறும். குறிப்பாக, அனைத்து தொலைக்காட்சிகளிலும் குழந்தைகள் பாட்டு பாடுவது, நடனம் ஆடுவது, காமெடி செய்வது என்று நிகழ்ச்சிகளை நடத்திவருகின்றன. இந்தநிலையில், தமிழில் ஒளிபரப்பாகும் முக்கியமான பொழுதுபோக்கு சேனலில் குழந்தைகள் நகைச்சுவை நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பானது. அதில், புலிகேசி மன்னர் போன்ற வேடத்தில் ஒரு குழந்தையும், மங்குனி அமைச்சர் வேடத்தில் ஒரு குழந்தையும் நடித்திருந்தது.
அந்த இரண்டு குழந்தைகளும் பிரதமர் மோடியின் கருப்பு பண நடவடிக்கை, பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்வது உள்ளிட்ட நிகழ்வுகளை விமர்சித்து வசனங்களை பேசியிருந்தன. இந்த காட்சிகள் நேற்றிலிருந்து இணையத்தில் வைரலானது. பா.ஜ.க எதிர்ப்பு மனநிலை கொண்ட நெட்டிசன்கள் இந்த வீடியோவை பரவலாக பகிர்ந்து ட்ரெண்ட் செய்தனர். இந்தநிலையில், இந்த சேனல் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பா.ஜ.க தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.
அதனையடுத்து, அண்ணாமலையின் ட்விட்டர் பதிவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர். இதுகுறித்த அவருடைய ட்விட்டர் பதிவில், ‘மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் என்னைத் தொடர்பு கொண்டு தமிழகத்தில் ஒரு ரியாலிட்டி டிவி ஷோவில் பிரதமரின் மாண்பை குறைப்பது போல் சில காட்சிகளை வைத்திருப்பதைப் பற்றி கேட்டறிந்தார். நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்திருக்கிறார். அவருக்கு என் நன்றிகள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
மாண்புமிகு மத்திய இணை அமைச்சர் திரு @Murugan_MoS அவர்கள் தொடர்பு கொண்டு தமிழகத்தில் ஒரு ரியாலிட்டி டிவி ஷோவில் பாரத பிரதமர் அவர்கள் மாண்பை குறைப்பது போல் சில காட்சிகளை வைத்திருப்பதைப் பற்றி கேட்டறிந்தார்
நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்திருக்கிறார்!அவருக்கு என் நன்றிகள்
அண்ணாமலையின் இந்த ட்விட்டர் பதிவுக்கு காங்கிரஸ் எம்.பிக்கள் கார்த்தி சிதம்பரம், ஜோதி மணி, காங்கிரஸைச் சேர்ந்த லஷ்மி ராமச்சந்திரன், உள்ளிட்டவர்கள் கண்டனம் தெரிவித்தனர். அதேபோல, தி.மு.க எம்.எல்.ஏ டி.ஆர்.பி ராஜா, எம்.பி செந்தில்குமார் ஆகியோரும் கேள்வி எழுப்பியிருந்தனர். அதனையடுத்து, இன்று காலை முதல் #பால்வாடிபாஜக என்ற ஹேஷ்டேக்கை தி.மு.க ஆதரவு நெட்டிசன்கள் ட்ரெண்ட் செய்தனர். அதனைத் தொடர்ந்து, அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பா.ஜ.க ஆதரவு நெட்டிசன்கள் #பால்டாயில்திமுக என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்தனர். இரண்டு ஹேஷ்டேக்கும் நீண்ட நேரமாக ட்விட்டரில் ட்ரெண்ட்டிங்கில் இருந்தது.
Published by:Karthick S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.